அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்......
அன்புச்சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
சந்திக்கும்போது கைகுலுக்குதல்
பராஉ(ரலி) அறிவிக்கின்றார்கள்: ''இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து, அவ்விருவரும் கைகுலுக்கினால், அவ்விருவரும் பிரியும் முன் அவ்விருவரின் குற்றம் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என்று நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 887)
அபூதர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நன்மையானவற்றில் எதையும் நீ குறைவாக எண்ணிவிடாதே! (அது) உன் சகோதரனை சிரித்த முகத்துடன் நீ சந்திப்பதாக இருப்பினும் சரியே! என்று என்னிடம் நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 892)
அபூஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நபி(ஸல்) அவர்கள், ஹஸன் இப்னு அலீ(ரலி) அவர்களை முத்தமிட்டார்கள். (அப்போது அங்கிருந்த) அக்ரஉ இப்னு ஹாபிஸ்(ரலி) அவர்கள், எனக்கு பத்து குழந்தைகள் உண்டு. அவர்களில் எவரையும் நான் முத்தமிடமாட்டேன் என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், ''இரக்கமில்லாதவன், (இறைவனால்) இரக்கம் காட்டப்படமாட்டான்'' என்று கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 893)
நோயாளியை நலம் விசாரித்தல்
பராஊ இப்னு ஆஸிப்(ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நோயாளியை விசாரித்தல், ஜனாஸாவில் கலந்து கொள்ளுதல், தும்மியவனுக்கு பதில் கூறுதல், நீதியைப் பேணுதல், அநீதம் இழைக்கப்பட்டவனுக்கு உதவுதல், விருந்திற்கு அழைத்தால் செல்லுதல், ஸலாமை பரப்புதல் ஆகியவற்றை எங்களுக்கு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 894)
அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்: ''ஒரு முஸ்லிம் மீது மற்றொரு முஸ்லிமுக்குரிய கடமைகள் ஐந்து : 1) ஸலாமிற்கு பதில் கூறுதல், 2) நோயாளியை விசாரித்தல், 3) ஜனாஸாவில் கலந்து கொள்தல், 4) விருந்தை ஏற்றுக் கொள்ளல், 5) தும்மியவருக்கு பதில் கூறுதல் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 895)
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர் எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் -நபிகள் நாயகம் (ஸல்)''. நூல்: ( புகாரி,முஸ்லிம் )
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் '' அன்புடன் சத்தியப்பாதை குழுமம்