திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Friday, November 19, 2010

வறுமை ஒழிப்பில் இஸ்லாமின் பங்கு.........

,
முதாய முன்னேற்றத்தில் அக்கறையுடைய யாராலும் வறுமையையும் வறுமையினால் ஏற்படுகிற தனிமனித மற்றும் சமூகக் கேடுகளைப் பற்றியும் சிந்திக்காமல் இருக்க முடியாது.  இதற்கு ஒரு முஸ்லிம் விதிவிலக்கல்ல.  வறுமை, மனிதனின் ஆற்றல் மற்றும் கண்ணியத்தின் ஊற்றுக் கண்களையே அழித்துவிட வல்லது.  மனிதனை இழிவுக்கும் கேவலத்துக்கும் ஆளாக்கி, ஒழுங்கீனத்தில் மூழ்கவைத்து, குற்றங்கள் புரிய வறுமை காரணமாகி விடுகிறது.
இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் வறுமையின் கொடுமையிலிருந்து பாதுகாப்பு தேடி வந்தார்கள். "இறைவா!  வறுமையிலிருந்தும் இறைமறுப்பிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு கோருகிறேன்" என நபியவர்கள் கோரிவந்தார்கள். (நஸயீ).                             உண்மைதான்.  இன்றைய உலகில் நடைமுறையில் உள்ள இரு பெரும் பொருளியல் கோட்பாடுகளில், முதலாளித்துவம் முதலாளிகளின் நலனை மட்டுமே பாதுகாப்பதிலும் பொதுவுடைமைக் கோட்பாடு வர்க்கப் போராட்டங்களைத் தூண்டிவிடுவதிலுமே கவனம் செலுத்துகின்றன.  ஆனால் இஸ்லாமியப் பொருளியல் மட்டுமே வறுமை ஒழிப்பு உள்ளிட்ட எல்லா பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் தக்க தீர்வைத் தருகிறது. 
பொருளாதார சுழற்சி:
 
"பல ஊர்வாசிகளிடம் இருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவை அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் (அவருடைய) பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியவையாகும்.  செல்வம் உங்களிலுள்ள பணக்காரர்கள் இடையே மட்டும் சுற்றிக் கொண்டிருக்காமல் (மற்றவர்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, இவ்வாறு பொருளைப் பங்கிடும்படி அல்லாஹ் கட்டளையிடுகின்றான்). (குர்ஆன் 59:7)
செல்வம் சமூகத்தின் எல்லாத் தரப்பினருக்குமிடையே சுழன்றுக் கொண்டிருக்க வேண்டும் என்பது இஸ்லாமியப் பொருளியலின் அடிப்படை அம்சங்களுள் ஒன்று.  வட்டி தடை செய்யப்பட்டிருப்பதும் ஜகாத், ஸதகா, ஹஜ் போன்ற பொருள் சார்ந்த வணக்க வழிபாடுகளும் இஸ்லாமிய வாரிசுரிமை போன்றச் சட்டங்களும் செல்வம் ஒரே தரப்பாரிடம் தேங்கிக் கிடப்பதைத் தடுத்து அதன் சுழற்சியையைத் தோற்றுவிக்கின்றன.
 
"யார் பொன்னையும் வெள்ளியையும் திரட்டி வைத்துக் கொண்டு, அவற்றை இறைவழியில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு வதைக்கும் வேதனையே உண்டு என்று (நபியே) நீர் நற்செய்தி கூறுவீராக!" (குர்ஆன் 9:34) என்ற இந்த இறைவசனம் பொருளை இறைவழியில் செலவு செய்யாமல் தடுத்துக் கொண்டவர்களைக் கடுமையாக எச்சரிக்கிறது. செல்வத்தில் வறியோரின் பங்கு:

"வானங்கள், பூமி, அவற்றுக்கு இடையே இருப்பவை மற்றும் பூமிக்கடியில் புதைந்து கிடப்பவை அனைத்தும் அவனுக்கே சொந்தமானவை" (குர்ஆன் 20:6)

"அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருளிலிருந்து நீங்கள் அவர்களுக்குக் கொடுங்கள்" (குர்ஆன் 24:33)

"அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புங்கள்.  அவன் உங்களை எந்தச் செல்வங்களுக்குப் பிரதிநிதிகளாக்கினானோ அதிலிருந்து (தானமாகச்) செலவு செய்யுங்கள்." (குர்ஆன் 57:7)


மேற்கண்ட இறைவசனங்கள் இவ்வுலக வாழ்வில் செல்வ வளங்கள் அருளப்பட்டவர்கள் அல்லாஹ்விற்குச் சொந்தமான பொருளுக்குப் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்களேயொழிய அச்செல்வத்தின் மீது அவர்கள் முழு அதிகாரம் படைத்தவர்கள் அல்லர் என்பதை வலியுறுத்துகிறது.  இஸ்லாமியப் பொருளியலின் இன்னொரு அடிப்படை அம்சம் இது.  உரிமையாளரின் ஆணைகளைச் செயல்படுத்துவதுதான் பிரதிநிதியின் பொறுப்பு.  எனவே அல்லாஹ் வழங்கியுள்ள செல்வத்திலிருந்து அவனது கட்டளைப்படி வறியவர்களுக்கு உரிய பங்கைப் பிரித்து அளிக்க வேண்டியது செல்வம் வழங்கப்பட்டவர்கள் மீதான கடமை.

வசதியில்லாதோரும் வறியோருக்கு உதவ வேண்டும்:
 
ஜகாத் பெறத் தகுதியுடையவர்கள் என அல்லாஹ் வரையறை செய்திருப்பவர்களுள் முதல் பிரிவினர் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள வசதியற்ற வறியவர்கள்.  இவர்களின் உணவு, உடை போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவுவது ஜகாத் கொடுக்கும் அளவிற்கு வசதி படைத்த செல்வந்தர்கள்மீது மட்டும் உள்ள கடமை அல்ல.  ஒருவரிடம் தனது குடும்பத்திற்கு மட்டுமே போதுமான உணவு இருந்தால்கூட அதைப் பட்டினியால் வாடும் அண்டை வீட்டாருடன் பகிர்ந்து கொள்ளும்படி சொல்லித்தருகிறது இஸ்லாம்.

நபி (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்: "அபூதர்ரே! நீர் ஆணம் சமைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்திக்கொண்டு பிறகு உமது அண்டை வீட்டாரைக் கவனித்து நல்லவிதமாக அவர்களுக்கும் சிறிது கொடுங்கள்" (ஸஹீஹ் முஸ்லிம்).

தனது அண்டை வீட்டார் வறுமையிலும் சிரமத்திலும் இருக்கும் நிலையில் தான் மட்டும் வளமையும் வசதியுமாக ஆடம்பரத்துடன் இருப்பதை ஓர் உண்மை முஸ்லிமின் உள்ளம் ஒப்புக்கொள்ளாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தமது அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறு நிரம்ப உண்பவர் இறைவிசுவாசியாக மாட்டார்" (முஸ்னத் அபூ யஃலா).
வறியோர் நலம் பேணுதல் மார்க்கத்தின் ஓர் அங்கம்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மார்க்கம் என்பது பிறர்நலம் பேணுவதாகும்". நாங்கள் கேட்டோம், "யாருக்கு அல்லாஹ்வின் தூதரே?" நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் அவர்களின் பொதுமக்களுக்கும்" என பதிலளித்தார்கள்
(ஸஹீஹ் முஸ்லிம்).
 
மற்றொரு அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு மூஃமின் மற்றொரு மூஃமினுக்கு கட்டடத்தைப் போன்றவராவார்.  அதில் ஒரு பாகம் மற்றொரு பாகத்திற்கு வலுச் சேர்க்கிறது" (ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்).

மேலும் கூறினார்கள்:
"மூஃமின்கள் தங்களிடையே நேசிப்பதற்கும் கருணை காட்டுவதற்கும் இணைந்திருப்பதற்கும் உதாரணமாகிறது ஓர் உடலைப் போன்றதாகும்.  அதில் ஏதேனும் ஓர் உறுப்பு நோயுற்றால் எல்லா உறுப்புகளும் காய்ச்சலையும் தூக்கமின்மையையும் முறையிடுகின்றன" (ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்).
நம்பிக்கையாளர்கள் ஒரு கட்டடத்தைப் போலவும் ஓர் உடலைப் போலவும் இணைந்திருக்க வேண்டியவர்கள் என்ற இந்த உதாரணங்கள், சமுதாயத்தில் ஒரு பிரிவினர் நலிவடைந்திருந்தால் அவர்களுக்கு வசதி படைத்த மற்றவர்கள் உதவ வேண்டும் என்பதையும், அவ்வாறு உதவிகள் செய்வது அந்த வறியவர்களுக்குப் பலனளிப்பதோடு மட்டுமல்லாமல் முழு சமுதாயத்திற்குமே பலனளிக்கும் என்பதையும் வலியுறுத்துகின்றன.
 
செல்வ வளம் படைத்தவர்கள் ஏழை எளியவர்களுக்கு ஜகாத் வழங்குவதால் அவர்களின் மனம் பொறாமை, வஞ்சினம் போன்ற தீய குணங்களிலிருந்து தூய்மையாகிறது.  சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடையேயும் பரஸ்பர அன்பும் புரிந்துணர்வும் தோன்றுகின்றன.  வர்க்க பேதங்கள் வலுவிழக்கின்றன. அப்படியே இருந்தாலும் அவை மோதல்களாக உருவெடுக்காமல், ஏழை வர்க்கத்தின் பொறாமை போன்ற சில தீய எண்ணங்களிலிருந்து செல்வந்தர்கள் பாதுகாப்புப் பெறுவர்.  சமூகத்தில் வீண் குழப்பங்களும் பதற்றங்களும் அகன்று அமைதியான சூழல் நிலவ வாய்ப்பு ஏற்படும்.  நாட்டின் பொதுஅமைதிக்கும் அது வகை செய்யும்.

0 comments to “வறுமை ஒழிப்பில் இஸ்லாமின் பங்கு.........”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates