திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Wednesday, November 24, 2010

சேமிப்பும் தூதர் வழிகாட்டலும்......

,
எம்பெருமானார் நபி(ஸல்) அவர்களை விட்டுப் பிரியாமல் அவர்களின் இறுதிவரை அருகிலேயே இருந்தத் தோழர் என்றப்பெருமைக்குரியர் நபித்தோழர் பிலால்(ரலி) ஆவார். நபி(ஸல்) அவர்களின் பிரிவுக்குப் பின்னர் அவர்களின் வாழ்க்கை முறையை அறிந்துப் பின்பற்றுவதற்கு விரும்பிய ஒரு மனிதர் பிலால்(ரலி) அவர்களிடம் கேட்டார்:

"இறைத்தூதரின் வாழ்க்கைச் செலவுக்குத் தேவையானவற்றை அவர்கள் எவ்விதம் தேடிக்கொண்டனர்?"

பிலால்(ரலி) அவர்கள் கூறத் துவங்கினார்கள்:

தூதரின் கையில் சேமிப்பு என்று எதுவுமே இல்லாதிருந்தது. மரணம் வரை இறைத்தூதரின் தினசரி பிரச்சனைகளை நான் தான் கவனித்து வந்திருந்தேன். முஸ்லிம் சகோதரர்களின் எவராவது சிலவேளைகளில் அவர்களிடத்தில் வருவர். வறுமை காரணமாக பெரும்பாலும் அவர்கள் முக்கால் நிர்வாணத்தில் இருப்பர். அதனைக் கண்ட உடனேயே திருத்தூதர் என்னிடம், "பிலால், இவருக்கு ஒரு துணி ஏற்பாடு செய்து கொடுங்கள்" என்று கூறுவார்கள்.
உடனடியாக வெளியே சென்று யாரிடமிருந்தாவது கடன் வாங்கி அம்மனிதருக்கு உணவும் உடையும் ஏற்பாடு செய்து கொடுப்பேன். இது போன்றப் பிரச்சனைகளில் எனது கஷ்டங்களைக் கண்ட ஒரு முஸ்லிமல்லாத வியாபாரி என்னிடம் கூறினார்: "பிலால், நீ இவ்விதம் பலரிடமிருந்தும் கடன் வாங்கி கஷ்டப்பட வேண்டாம். எனக்கு அத்தியாவசியத்திற்கும் மேலாக வசதியுண்டு. என்னிடம் மட்டும் நீ கடன் பெற்றுக் கொள். உனக்குத் தேவையான கடன் நான் தருகின்றேன்."

பின்னர் அதன்படியே நான் செய்து வந்தேன். இவ்வாறு அவரிடமிருந்து வாங்கியக் கடனின் அளவு வெகுவாக உயர்ந்திருந்தது. ஒருநாள் உடலைத் தூய்மை செய்துக் கொண்டு, பாங்கு அழைப்பு கொடுப்பதற்காக தயாராகிக் கொண்டிருக்கும் பொழுது அந்த வியாபாரியும் மற்றும் சில நபர்களும் கூட்டமாக என்னை நோக்கி வந்தனர்.

"ஏய், அபிசீனியக்காரா!", விரும்பத்தகாத சுரத்தில் அந்த மனிதர் என்னை அழைத்தார்.

"நான் இதோ இங்கே இருக்கிறேன்", என்று கூவியவாறு நான் அவர் அருகில் ஓடிச் சென்றேன்.

அந்த மனிதரின் முகத்தில் திருப்தியற்ற பாவனை. கடுமையுடன் அவர் என்னிடம் கேட்கின்றர்:

"இம்மாதம் முடிய இனியும் எத்தனை நாட்கள் உள்ளன?"

நான் கூறினேன், "கிட்டத்தட்ட முடியப்போகின்றது".

"வெறும் நான்கு தினங்களே மீதம் உள்ளன. எனக்குக் கிடைக்க வேண்டியதைப் பெற அன்று நான் நடவடிக்கை எடுப்பேன். நீ பழையது போன்று ஆடு மேய்க்கச் செல்ல வேண்டி வரும்", அம்மனிதர் மிகக் கடுமையாகக் கோபத்துடன் கூறினார்.

இதனைக் கேட்பவர்கள் என்னைக் குறித்து என்ன நினைப்பர்?. எந்நிலை மோசமாவது நிச்சயம். திருத்தூதரைக் கண்டு இவ்விவரத்தைத் தெரிவித்தப் பின்னர் நான் கூறினேன், "அம்மனிதருக்குக் கொடுக்க என் கையிலும் உங்கள் கையிலும் எதுவுமே இல்லை. எனவே சிறிது காலம் இவ்விடம் விட்டு மாறி நிற்கத் தாங்கள் என்னை அனுமதிக்க வேண்டும். அல்லாஹ் ஒருவழி நமக்குத் திறந்துத் தருவது வரை அது தான் நல்லது".

இதனைக் கூறி விட்டு நான் வெளியேறினேன்.

யாத்திரைக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்துக் கொண்டு நான் தூங்கச் சென்றேன். அதிகாலையில் புறப்படுவதற்குத் தயாராகும் பொழுது யாரோ என்னை அழைக்கும் சப்தம்.

"பிலால், தூதரைச் சென்று காணுங்கள்!".

நான் தூதரைக் காணச் சென்றேன். அங்கு நான்கு ஒட்டகங்கள் நின்றிருந்தன. அவற்றின் மீது நிறைய சரக்குகளும் இருந்தன. தூதர் என்னிடம் கூறினார்கள்:

"மகிழ்ச்சியாக இருங்கள். உங்களின் கடனை அடைக்க அல்லாஹ் உதவி செய்திருக்கின்றான்.

வெளியே காண்பவை ஃபதக்கின் அரசர் எனக்குக் கொடுத்தனுப்பிய அன்பளிப்புகளாகும். அதனைக் கொண்டு சென்று கடனை அடைத்துக் கொள்ளுங்கள்".

பிலால்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் அதனைக் கொண்டுச் சென்று இறைத்தூதர் கூறியபடியே செய்து விட்டுப் பள்ளிவாசலுக்குத் திரும்பி வந்தபொழுது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள்: "கடனை அடைக்க அப்பொருட்கள் போதுமானதாக இருந்ததா?"

நான் கூறினேன், "அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். உங்களின் கடன் முழுவதையும் அவன் திருப்பியடைத்து விட்டான்".

திருத்துதர் மீண்டும் கேட்டார்கள்: "அப்பொருட்களில் இனி ஏதும் மீதம் உள்ளனவா?"

நான் "ஆம்" என்றேன்.

அதனைக் கேட்டவுடன் தூதர் கூறினார்கள்: "நீ, அதிலிருந்து என்னை மீட்டுத் தர வேண்டும். அது முழுவதும் செலவு(தர்மம்) செய்தல்லாமல் என் குடும்பத்தினருடன் என்னால் நிம்மதியாக இருக்க இயலாது".

அன்று இரவு தொழுகை முடிந்தப் பின் இறைத்தூதர் என்னைத் தேடினார்கள்.

"மீதமிருந்தப் பொருட்களை என்னச் செய்தீர்கள்" கவலையுடன் என்னிடம் கேட்டார்கள்.

"அவை அங்கேயே தான் உள்ளன. தேவை என்று எவரும் அதன் பிறகு இதுவரை வரவில்லை" என்றேன்.

அன்று இரவு திருத்தூதர் அவர்கள் விட்டிற்குச் செல்லாமல் பள்ளியிலேயே தங்கினார்கள்.

மறுநாள் இரவு மீண்டும் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள், "அப்பொருட்கள் என்னவானது?".

நான் கூறினேன்: "தாங்கள் நிம்மதியாக இருக்கலாம். அப்பொருட்கள் முழுவதும் தர்மம் செய்து தீர்ந்தாகி விட்டது".

இதனைக் கேட்டவுடன் எம்பெருமானார் திருநபிகள்,

"அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். அவனுக்கு நன்றி. அப்பொருட்களுக்கு உடமையாளனாக மரணப்பட்டு விடுவேனோ என நான் பயந்துக் கொண்டிருந்தேன்" என மறுமொழி பகர்ந்தார்கள்.

மக்களுக்கு இடையில் தங்கள் நிலை மோசமாகும் விதத்தில் தனக்குக் கடன் பெருகிய பொழுது எம்பெருமானார் நபி(ஸல்) அவர்கள் எவ்விதக் கவலையும் படவில்லை. ஆனால் அதேநேரம், சிறிது சொத்துக்கள் தன் கையில் மீதம் இருந்தது நபி(ஸல்) அவர்களை மிகக் கடுமையான கவலையில் ஆழ்த்தி விட்டது. மனிதர்கள் எதனையும் சேமித்து வைக்கக் கூடாது என நபி(ஸல்) அவர்கள் அறிவுரை தரவில்லை. எனினும், தங்களுக்குச் சேமிப்பு என்று ஒன்றுமே இல்லையே என முஸ்லிம்கள் கவலைக் கொண்டு அதற்காக தன்நிலை மறந்து பகீரத முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது முஸ்லிம்களுக்கு வழிகாட்டி என மேடை தோறும் முழக்கிக் கொள்ளும் இதுபோன்ற நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கைத் தருணங்களையும் மனதில் நினைவுறுத்திக் கொள்வது பயன் தரும்.

நன்றி: எ. சயீத் (தேஜஸ்)

தமிழாக்கம்: சகோ.அபூசுமையாநன்றி;சத்யமர்க்கம்.காம்

0 comments to “சேமிப்பும் தூதர் வழிகாட்டலும்......”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates