உணர்வு வார இதழில் நான் செயலாற்றிக் கொண்டிருந்த காலம்.
அவ்வப்போதைய அரசியல் சமூக அசைவுகள் குறித்து முக்கியமான தலைவர்களையும், எழுத்தாளர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் சந்தித்து உரையாடுவது வழக்கம்.
அப்படி நான் சந்திக்கச் சென்ற ஆளுமைகளில் ஒருவர் பேராசிரியர் அ.மார்க்ஸ்.
தமுமுகவின் அன்றைய நிர்வாகிகளில் ஒருவரும்,முன்னணி அச்சக நிறுவனருமான நண்பர் அ. சாதிக் பாஸாவும் நானும் அ.மார்க்சை சந்திப்பதற்காக மைலாப்பூரில் இருந்த அவரது வீட்டிற்கு சென்றிருந்தோம். என்னைப் பார்த்தவுடன், யார் இந்தப் பையன்? என்று சாதிக்கிடம் கேட்டார் மார்க்ஸ். சாதிக் என்னைப் பற்றி சொன்னவுடன், 'ஓ.. நீங்க தானா ஆளூர் ஷாநவாஸ். முஸ்லிம் சமூகத்தில் இருந்து எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் பெரிய அளவில் உருவாவதில்லை என்று நான் குமுறிக் கொண்டு இருக்கிறேன். அப்படிப்பட்ட நிலையில் உங்களைப் போன்ற இளைஞர்களைப் பார்க்கின்ற போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது' என்று கூறி உற்சாகமூட்டினார்.
அதன் பின்னர் ஒற்றுமை இதழில் 'நான் புரிந்து கொண்ட நபிகள்' என்ற தலைப்பில் அ. மார்க்ஸ் தொடர் கட்டுரை எழுதிய போது, அந்தக் கட்டுரைகளை அவர் வீட்டிற்கே சென்று வாங்கி வரவும், அதை பிழை திருத்தி அச்சுக்கு அனுப்பவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் அவரோடு மிக அதிகமாக நெருக்கம் ஏற்பட்டது.
குஜராத் இனப்படுகொலைகளுக்கு எதிராக 'தோட்டாக்கள்' என்னும் கவிதை தொகுப்பு நூலை 2003 ஆம் ஆண்டு நான் வெளியிட்ட போது, அதற்கு அ.மார்க்ஸ் பெரிதும் துணை இருந்தார். அன்றிலிருந்து இன்று வரை எனது எல்லா நிகழ்ச்சிகளிலும் தவறாமல் பங்கேற்கக்கூடிய ஒரே ஆளுமையாக அவர் மட்டுமே உள்ளார்.
எழுத்துலகிலும்,விமர்சன அரங்கிலும், நுண்ணிய தளங்களிலும் பாசிசத்தின் மென்னியை நெறிக்கும் பணியை இடையறாது ஆற்றி வரும் முதன்மையான எழுத்துப் போராளி அ. மார்க்ஸ் ஆவார்.
எழுதுவதோடு நின்று விடாமல் நேரடியாக களத்திற்கே சென்று உண்மையைக் கண்டறிந்து உலகுக்கு சொல்லும் களப்போராளியாகவும் அவர் காட்சியளிக்கிறார்.காஷ்மீர் முதல் இலங்கை வரை, முத்துப் பேட்டை முதல் தென்காசி வரை, முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை அம்பலப் படுத்த துணிச்சலாகப் பயணித்து வருகிறார்.
அவரை நான் முதன் முதலில் சந்தித்த போது, முஸ்லிம்களில் வளரும் எழுத்தாளர்கள் குறைவு என்று அவர் குமுறியதாக குறிப்பிட்டிருந்தேன். அவரது அந்தக் குமுறல் எவ்வளவு பெரிய உண்மை என்பதை பின்னர் நிதர்சனத்தில் கண்டேன்.
இன்று முஸ்லிம்களுக்கு எதிராக என்னென்ன தளங்களில் என்னென்னப் பிரச்சனைகள் இருக்கின்றன என்பது பற்றி, இங்கே எந்த முஸ்லிமுக்கும் விழிப்புணர்வு இல்லை. தமக்கு எதிரான சதிகளைப் பற்றி குறைந்தபட்ச விழிப்புணர்வு கூட இல்லாத ஒரு சமூகத்தால் எப்படி அடுத்தக்கட்டத்திற்கு நகர முடியும்?
காஷ்மீர் பிரச்னை பற்றியோ, இலங்கை பிரச்னை பற்றியோ, அமெரிக்காவின் அராஜகம் பற்றியோ, இந்துத்துவத்தின் சதிகள் பற்றியோ, இலக்கியத் துறையில் முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பப்படும் அவதூறு அரசியல் பற்றியோ தொடர்ச்சியாக கவனிக்கின்ற, பேசுகின்ற, எழுதுகின்ற, அவை குறித்த விவாதங்களை உருவாக்குகின்ற ஒரே ஒரு ஆளுமை கூட தமிழ் முஸ்லிம் சூழலில் உருவாகவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
குழு மோதல்களிலும், கொள்கைச் சண்டைகளிலுமே இங்கே பெரும்பாலான முஸ்லிம்களின் சிந்தனையும் செயலும் வீணாகிக் கொண்டிருக்கிறது. உருவாகி வரக்கூடிய ஒரு சிலரையும் கூட, குப்புறத் தள்ளி முடக்கி விடக்கூடிய கீழறுப்பு வேலைகளும் தொடருகின்றன. இப்படிப்பட்ட ஒரு சூழலில், முஸ்லிம்களின் பிரச்சனைகளைப் பற்றி எழுதுகின்ற விரலாகவும்,பேசுகின்ற குரலாகவும் இயங்குகின்ற ஒற்றை மனிதராக அ.மார்க்ஸ் திகழ்கின்றார்.
''இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக் கதைகள், நான் புரிந்து கொண்ட நபிகள், இலக்கியத்தில் இந்துத்துவம்-காலச்சுவட்டின் ஆள்காட்டி அரசியல், சச்சார் குழு அறிக்கை-அறிமுகம் சுருக்கம் விமர்சனம், பாட நூல்களில் பாசிசம், காஷ்மீர்- என்ன நடக்குது அங்கே, முஹம்மது அப்சல் குரு தூகிலடப் படத்தான் வேண்டுமா, குஜராத்- அர்த்தங்களும் உள்ளர்த்தங்களும், சங்கராச்சாரியாரின் சமரசத் திட்டம் - முஸ்லிம்களுக்கு எதிரான இன்னொரு சதி, பெரியார்-தலித்துகள் முஸ்லிம்கள், இந்துத்துவத்தின் இருள் வெளிகள், இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு, ஆரியக் கூத்து, முஸ்லிம்களுக்கு எதிராக அரசியல் சட்ட அவையில் நடந்தது என்ன, தென்காசி-முத்துப்பேட்டை மதக் கலவரங்கள் ஒரு ஆய்வு''.....இப்படி பட்டியலிட முடியாத அளவுக்கு அ. மார்க்சின் பங்களிப்புகள் நீளமானது, ஆழமானது.
பிரிவினைக்குப் பின், தங்களின் வலிகளையும் வேதனைகளையும் வாய் திறந்து வெளிப்படுத்துவதற்கு கூட வலிமை அற்று அஞ்சி வாழ்ந்த முஸ்லிம் சமூகம், பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின் வாய் திறந்து பேசவும், வீதியில் இறங்கிப் போராடவும் தன்னை தயார் படுத்திக் கொண்டது. ஆனால் இந்துத்துவத்தை எதிர் கொள்ள அந்தப் போராட்டம் மட்டுமே போதுமென்று முடங்கி விட்ட முஸ்லிம் சமூகத்திற்கு, என்னென்ன வழிகளில் இந்துத்துவத்தை எதிர் கொள்ள வேண்டும் என்று பாடம் நடத்தும் ஆசிரியராக அ. மார்க்ஸ் விளங்குகின்றார்.
நுண்ணிய தளங்களில் நின்று போராடும் அறிவுப் பின்புலமுள்ள ஒருவரைக் கூட முஸ்லிம் சமூகம் பெறாத நிலையில், அ. மார்க்ஸ் மட்டும் இல்லாமல் போயிருந்தால் முஸ்லிம்களின் நிலைமை என்னவாகி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களின் குரலாக அ.மார்க்ஸ் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பது பலருக்கும் எரிச்சலைத் தருகிறது. 'முஸ்லிம் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் கைக்கூலி அ.மார்க்ஸ்' என்று அவதூறு பரப்புவதன் மூலம் அவர்கள் தங்களின் அரிப்பை தீர்த்துக் கொள்கின்றனர்.
இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசியதற்காக அவரை
ராஜ பக்சேவின் கைக்கூலி என்று தமிழ்த் தேசியவாதிகள் அவதூறு பரப்பி வருகின்றனர்.
அ. மார்க்ஸ் யாருக்கும் கைக்கூலி அல்ல என்பதும், எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப் படுகிறார்களோ அங்கெல்லாம் மக்களின் பக்கம் நிற்பவர் அவர் என்பதும், அவரை அறிந்தவர்களுக்குத் தெரியும், அவரது பாதையையும் பயணத்தையும் நோக்கினால் புரியும்.
இந்த இடத்தில், அ.மார்க்சின் இலங்கைப் பயணம் குறித்த எனது கட்டுரையையும் இணைப்பது பொருத்தமானது என்று கருதுகிறேன்.
***
அண்மையில் இலங்கைக்கு சென்று வந்த பேராசிரியர் அ.மார்க்ஸ், தமது பயண அனுபவங்களை, ஊடகங்கள் வாயிலாகவும், அரங்கு நிகழ்ச்சிகள் மூலமாகவும் தமிழ்நாட்டுத் தோழர்களுடன் பகிர்ந்து வருகின்றார். இலங்கையில் தாம் கண்டவற்றை, கண்டு மனம் கலங்கியவற்றை உள்ளது உள்ளபடி உரத்து பேசி வருகின்றார். அவ்வாறு அவர் பேசுவது இங்குள்ள சிலருக்கு எரிச்சலையும், பலருக்கு ஆறுதலையும் அளித்து வருகிறது.
எரிச்சல் அடைபவர்கள் அனைவரும் அவரை பேச விடாமல் துரத்துகின்றனர். அவரது கூட்டங்களில் பார்வையாளர்கள் போர்வையில் புகுந்து ரகளை செய்கின்றனர்.அவரது மனித உரிமைப் போராட்டங்களை கொச்சைப்படுத்தி, இணைய தளங்களில் பரப்புரை புரிகின்றனர். சமீப நாட்களாக இந்த நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
அ மார்க்சின் கருத்துக்களால் எரிச்சல் அடைந்தவர்களின் எதிர்வினை இப்படி இருக்க, ஆறுதல் அடைந்தவர்களின் பக்கத்தில் இருந்து இத்தகைய எதிர் வினைகளுக்கு எதிராகவோ, அ.மார்க்சுக்கு ஆதரவாகவோ பெரிய அளவில் எதிர்ப்பு ஏதும் எழாமல் இருப்பது, சிறுபான்மையினருக்காக குரல் கொடுத்து வரும் தோழமை சக்திகளை வருத்தமடைய செய்துள்ளது.
பொதுவாகவே, முஸ்லிம்கள் மீது தோழமை உணர்வாளர்கள் முன்வைக்கும் விமர்சனமும் இதை சார்ந்தே உள்ளது. முஸ்லிம்கள் தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு நேரும்போதெல்லாம் மதச்சார்பின்மை குறித்து அதிகம் பேசுவார்கள்; ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அணி திரள வேண்டும் என்று அறைகூவல் விடுப்பார்கள்; கருத்திலும், களத்திலும் முஸ்லிம் அல்லாத தோழமை உணர்வாளர்கள் குரல் கொடுக்க வேண்டும் என விரும்புவார்கள்.ஆனால், தோழமை சக்திகளுக்கு ஏதேனும் பாதிப்பு வரும் போது மட்டும் அமைதியாகி விடுவார்கள் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன .
இத்தகைய விமர்சனங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் முழுமையாக மறுக்கவும் முடியாது.ஏனெனில் அ.மார்க்ஸ் மீதான அண்மைக்கால தாக்குதல்களுக்கு எதிராக முஸ்லிம்களிடம் இருந்து பெரிய அளவில் எதிர்ப்புகள் எழாதது , அத்தகைய விமர்சனங்களுக்கு வலு சேர்க்கின்றது.
ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்குரலாய் ஒலித்த டாக்டர்.கே. பாலகோபால் மறைந்த போது, "முஸ்லிம்களில் ஏன் இல்லை ஒரு மனித உரிமைப் போராளி"? என்ற கேள்வி எழும்பியதை இத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
முஸ்லிம்கள், தங்களது பிரச்சனைகள் பற்றி பேச எல்லோரையும் அழைப்பதும் ,மற்றவர்களின் பிரச்சனைகளை கண்டும் காணாமல் கடந்து செல்வதும் மிக மோசமான அணுகுமுறையாகும்.நாம் பாதிக்கப்படும் போது எத்தனை வீரியமாக களமிறங்குகிறோமோ அதே வீரியத்தை மற்றவர்கள் பாதிக்கப்படும் போது நாம் வெளிக்காட்டுவதில்லையே அது ஏன்?
நமக்காக குரல் கொடுக்கும் தோழமை சக்திகள் அவர்களுக்குள் முரண்பட்டு மோதிக்கொள்கிறார்கள் என்றால், அப்போதும் யார் பக்கம் நியாயமோ அவருக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். இரண்டு பேரும் நமக்கு முக்கியம் என்பதற்காக கருத்து சொல்லாமல் அமைதியாக இருப்பது அநியாயத்திற்கு துணை போகின்ற செயலாகும்.
அ.மார்க்சைப் பொறுத்த வரை ,அவர் ஒரு தீவிரமான மனித உரிமைப் போராளி. சிறுபான்மையின முஸ்லிம்களுக்காக மட்டும் இன்றி கிறிஸ்தவ, தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும், அரச பயங்கரவாதத்துக்கு எதிராகவும், முழுவீச்சில் குரல் எழுப்பி வரும் எழுத்தாளர் அவர்.தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காகவும்,எடுத்துக்கொண்ட நோக்கத்திற்காகவும் யாரையும் எந்த சூழ்நிலையிலும் எதிர்கொள்ளத் தயங்காதவர். இடம், பொருள், ஏவல் பார்த்து கருத்துக்களை முன்வைக்கும் தந்திரமெல்லாம் அவருக்கு தெரியாது. மனதில் பட்டதை பட்டென சொல்லிவிடும் பழக்கம் உடையவர்.அவரது இத்தகையப் பண்புகளாலேயே அவருக்கு தனி மனிதப் பகை அதிகம்.
இன்று அவரை வெறுக்கின்ற, அல்லது விமர்சிக்கின்ற எல்லோரும் அ.மார்க்சின் இந்த தனி மனிதப் பகைகளைத்தான் அதிகம் சுட்டிக் காட்டுகின்றனர். அவரோடு இணைந்து செயல்பட்டவர்களில் அவரிடம் முரண்படாத ஒருவரையாவது காட்ட முடியுமா என்று கேள்வியும் எழுப்புகின்றனர்.ஒருவரோடு எல்லோரும் முரண்படுகின்றார்கள் என்பதாலேயே அவர் உண்மை அற்றவர் என்றாகிவிடுமா என்பது தான் நமது கேள்வி.
எப்போதுமே ஒளிவு மறைவு இல்லாமல் பேசுகிறவர்களுக்கு எதிரிகள் அதிகம் இருக்கத்தான் செய்வார்கள். வளைந்து, நெளிந்து, தமக்கு சாதகமான கருத்துக்களை முன்வைக்கும் ஒருவரைத்தான் இன்று பலருக்கும் பிடிக்கிறது. இது இன்றைய சமூக சூழலில் பொதுப் புத்தியாகவும் மாறி விட்டது.அவதூறையும், விமர்சனங்களையும் பிரித்துப் பார்க்கத் தெரியாதவர்களாகவும்,விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் அற்றவர்களாகவும் நாம் மாறிக்கொண்டிருக்கிறோம்.அப்படி இருக்கும் போது, அ.மார்க்சைப் போன்று வெளிப்படையாக பேசுபவர்களை யாருக்குத்தான் பிடிக்கும்?
அவரிடம் முரன்பட்டவர்களின் எண்ணிக்கைப் பெருக்கத்தை வைத்தா அவரது போராட்டத்தை மதிப்பிடுவது? மற்றவர்கள் அப்படி மதிப்பிட்டாலும் ஒரு முஸ்லிமால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் முஸ்லிம்களின் இறுதித் தூதரும், வாழ்வியல் வழிகாட்டியுமான நபிகளார் அவர்கள், உண்மையை உரத்துப் பெசியதனாலேயே பலராலும் வெறுக்கப்பட்டவர். அன்றைய சூழலில் அவரோடு உடன் பட்டவர்களை விட முரண்பட்டவர்கள் தான் அதிகம். ஆதரவாளர்களின் எண்ணிக்கை சிறியது என்பதாலேயே அவர் பேசியதெல்லாம் பொய் என்றாகிவிடவில்லை. பலரது எதிர்ப்புக்கும் ஆளான நபிகளார் அவர்கள் தான் பின்னாளில் வரலாற்று நாயகராக உலகத்தையே ஈர்த்தார். ஆகவே அந்த தத்துவத்தின் வழியில் நின்றுதான் ஒரு முஸ்லிமால் இன்றையப் பிரச்சினைகளை பார்க்க முடியும். அப்படி பார்கின்ற போது அ.மார்க்சை விட்டுக்கொடுக்க எங்களால் இயலாது.
தமிழ் சூழலில் பெரியாரை விட எல்லோருடனும் முரண்பட்ட ஒருவரைப் பார்க்க முடியாது.உண்மையை உரத்துப் பேசியதில் அவருக்கு நிகரே கிடையாது.பெரியாரை எதிர்த்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவரது தத்துவம் பொய்த்தா போனது? எதையும் கேள்வி கேட்டுப் பழகிய,விமர்சிக்க கற்றுத்தந்த பெரியாரை, பின்பற்றுவதாக சொல்பவர்களும் அ.மார்க்சை எதிர்ப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது.
அ.மார்க்ஸ், தமது இலங்கைப் பயண அனுபவங்களைப் பற்றி பேசுகின்ற போது, அங்கே தாம் கண்ட அவலங்கள் அனைத்தையும் வெளிப்படுத்தி வருகின்றார்.தமிழர்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாத அரசின் பயங்கரவாத செயல்களை அவர் அதிகம் அதிகம் பதிவு செய்துள்ளார். மலையகத் தமிழர்களின் நிலையைப் பற்றி பேசி உள்ளார் . தமிழ் முஸ்லிம்களின் அவலங்களைப் பதிவு செய்துள்ளார். ஒரு வரலாற்று ஆய்வாளர் என்ற முறையிலும்,அரசியல் விமர்சகர் என்ற வகையிலும் அங்கே தான் கண்ட அனைத்தையும் தன் பார்வையில் எடுத்துரைக்கிறார்.தமிழர்களின் வாழ்விடங்கள் சிதைக்கப்பட்டு,அங்கெல்லாம் சிங்களவர்களின் ஆதிக்கம் பெருகி வருவதையும், புலிகளின் கல்லறைகள் கூட சிங்களவர்களின் தாக்குதலில் இருந்து தப்பவில்லை என்பதையும் கூர்மையாக பதிவு செய்துள்ளார். அதைப் போலவே தமிழ் முஸ்லிம்களின் வாழ்விடங்களின் தற்போதைய நிலையையும், அவர்களின் இன்றைய அகதி முகாம் வாழ்க்கையையும், அதற்கு காரணமான புலிகளின் அன்றைய வன்முறையையும் நேர்மையாக பதிவு செய்துள்ளார்.
ஒரு ஆய்வாளர் எப்படி பிரச்சனைகளை அனுகுவாரோ ,தாம் கண்டவற்றை எப்படி பகுத்துப் பார்ப்பாரோ, அப்படித்தான் அவர் இலங்கையைப் பார்க்கின்றார்.அப்படியான அவரது ஒளிவு மறைவற்றப் பார்வையில் - வரலாற்றுப் பிழை செய்தவர்களின் செயலைக் குறிப்பிடாமல், அத்தகையப் பிழைகளின் காரணமாக இன்றைக்கும் தொடருகின்ற அவலங்களைப் பற்றி பேசாமல் இருக்க.. அவரால் மட்டும் அல்ல; வேறு எவராலும் முடியாது.
தற்போது புலிகளின் போராட்டம் ஒடுக்கப்பட்டு, ஈழமே துயரமான சூழலில் சிக்கி இருக்கும் இந்த நேரத்தில், கடந்த கால நிகழ்வுகளைக் கிளறி ஆத்திரமூட்டுவது நியாயமா என்பதுதான் அ.மார்க்சை எதிர்க்கும் புலி ஆதரவாளர்களின் ஒருமித்த கேள்வி.ஒரு துயரத்தையோ அல்லது நிகழ்வையோ இன்றைய நிலையில் மட்டுமே பார்ப்பது பாமரப் பார்வை. ஒரு துயரம் எதனால் நிகழ்ந்தது ,அதற்கு யார் யார் காரணம், எந்தெந்த வகையில் காரணம், அதன் தொடக்கம் என்ன,அதற்க்கு தீர்வு என்ன, எதிர்காலத்தில் அது நிகழாமல் இருக்க வழி என்ன, என்றெல்லாம் ஆராய்ந்து பார்ப்பதுதான் ஒரு சிந்தனையாளனின் பார்வை. அ.மார்க்ஸ் அப்படித்தான் பார்க்கிறார்.
ஒரு தரப்பினருக்கு கசக்கிறது என்பதற்காக, அவர் கண்ட உண்மையை பொய் என்று சொல்லி விட முடியாது. அல்லது ஒரு தரப்பினருக்கு ஆறுதல் அளிக்கிறது என்பதற்காக எந்த ஒரு தகவலையும் அவர் மிகைப் படுத்தியும் கூறிவிட முடியாது. எது எப்படியோ அதை அப்படியே பதிவு செய்பவன்தான் உண்மையான ஆய்வாளன். அந்த அடிப்படையில் தான் அவர், அங்கே புலிகளால் துரத்தப்பட்டு அகதி முகாம்களில் அல்லல்படும் முஸ்லிம்களின் துயரங்களை உலகிற்கு சொல்கின்றார். அம்மக்களின் கண்ணீரை காட்சிப் படுத்துகிறார். அவர்களுக்காக பேச, தமிழ்ச் சூழலில் யாருமே முன் வராத நிலையில், பொது அரங்கில் துணிச்சலாக குரல் எழுப்புகின்றார். ஒரு மனித உரிமைப் போராளி என்ற வகையில் தமது தார்மீக கடமையை அவர் ஆற்றிவருகின்றார். இதில் என்ன தவறு இருக்கிறது என்பதுதான் அ.மார்க்சை விமர்சிக்கும் தோழர்களை நோக்கி நாம் எழுப்பும் கேள்வி.
அ.மார்க்சை மூர்க்கமாக எதிர்த்து, அவரைப் பேச விடாமல் தடுத்ததில் "நாம் தமிழர்" இயக்கத்தினர் ஈடுபட்டதாக அறிகின்றோம். ஒடுக்கப்படும் தமிழர்களின் உரிமைகளுக்காக போராடி வரும் தோழர் சீமானின் 'தம்பிகள்' அப்படியான செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்றே நம்புகின்றோம். அப்படி அவர்கள் ஈடுபடுவது உண்மை என்றால் அது சீமான் பேசி வருகின்ற பெரியாரிய கொள்கைக்கே எதிரானது என்பதுதான் எமது தோழமையான கருத்து.
தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்றும், புலிகளை எதிர்த்துப் பேச காங்கிரஸ் காரனுக்கு உரிமை இருக்கும் போது, புலிகளை ஆதரித்துப் பேச தமக்கு உரிமை இல்லையா என்றும் கலைஞரைப் பார்த்து கேள்வி எழுப்புகின்ற தோழர் சீமானுக்கு, அதே கருத்து சுதந்திரம் பேராசிரியர் அ.மார்க்சுக்கும் உண்டு என்கிற நியாயம் மட்டும் புரியாமல் இருப்பது ஏன் என்பதுதான் நமக்கு புரியவில்லை.அ.மார்க்ஸ் பேசும் கூட்டங்களில் எல்லாம் புகுந்து ரகளை செய்து இடையூறு ஏற்படுத்தும் அவர்கள், புலிகளை எதிர்த்து மிக மோசமாகப் பேசி வரும் காங்கிரஸ்காரர்களின் கூட்டங்களில் புகுந்தும் இதே வகையான ரகளைகளை செய்வார்களா என்பது தான் நடுநிலையாளர்களின் கேள்வி.
அ.மார்க்ஸ் அதிகாரப் பின்புலம் அற்றவர் என்பதனாலேயே அவரின் கூட்டங்களுக்கு சென்று கலகம் புரிவது எந்த வகை நியாயம். புலிகளுக்கு எதிரான கருத்தியலைப் பரப்பி வரும் இளங்கோவன், ப.சிதம்பரம் உள்ளிட்ட ஆளும் அதிகார வர்க்கத்தின் கூட்டங்களுக்கு சென்று கேள்வி கேட்கவும், ரகளை செய்யவும் வலிமை அற்றவர்கள், அ.மார்க்சைப் போன்ற எளிய மனிதர்களிடம் சென்று மோதிப் பார்ப்பது எந்த வகை வீரம்?
புலிகளை கடுமையாக எதிர்த்து வரும் காங்கிரஸ் காரர்களைக் கூட, கருத்தால் எதிர் கொள்ளும் "நாம் தமிழர்" இயக்கத்தினர், புலிகளின் தவறுகளை சுட்டிக்காட்டும் அ.மார்க்ஸ் மீது மோசமாகப் பாய்வது கண்டனத்திற்குரிய ஒன்று.
புலிகளை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாகப் பாவித்து, அவர்களை எதிர்த்தவர்களை எல்லாம் தமிழரென்றும் பாராமல் மூர்க்கத்தனமாகப் பாய்ந்து குதறியது தான் ஈழத்தின் பின்னடைவுக்கு மிக முக்கிய காரணம். ஈழத்தில் சாதி வெறியை ஒழிக்காமல் போராட்டத்தை முன்னெடுத்ததும், மலையகத் தமிழர்கள் மற்றும் தமிழ் முஸ்லிம்களையும் இணைத்த, அவர்களின் உரிமைகளுக்கும் அபிலாசைகளுக்கும் உத்தரவாதமளித்த தனி ஈழத்தை கட்டமைக்க மறுத்ததும் தான் புலிகளின் வீழ்ச்சிக்கு பிரதான காரணம்.இது பற்றி எல்லாம் பேசினால், அது புலிகளுக்கு எதிரானது என்ற கற்பிதம் புலி ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் கற்பிதம் உடையாத வரை இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படாது.
2002 - ஆம் ஆண்டு இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு, சமாதானம் தழைத்திருந்த அந்த அமைதியான சூழலில், சுதந்திரமாக இலங்கையை சுற்றி வந்தவன் என்ற முறையில், அப்போதே புலிகளுக்கும்- முஸ்லிம்களுக்கும் இடையேயான பிரச்சினைகள் குறித்த உரையாடலை தமிழ் நாட்டில் தொடங்கினோம்.
அப்போது வெளிவந்து கொண்டிருந்த இதழ் ஒன்றில் இது குறித்தெல்லாம் விரிவாக அலசி உள்ளோம். தமிழகத்தில் முஸ்லிம்களின் தோழமை சக்தியாகவும் அதே நேரம் தீவிர புலி ஆதரவாளர்களாகவும் செயல்படும் தலைவர்களையும், சிந்தனையாளர்களையும் சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.பாவலர் இன்குலாப், சுப வீரபாண்டியன், பழ நெடுமாறன், தோழர் தியாகு என பல தரப்பினரையும் சந்தித்து, முஸ்லிம்களை அடித்து துரத்திய புலிகளின் செயல் குறித்து கருத்துக்களை கேட்ட போது, பலரும் அது தவறு என்பதை ஒப்புக் கொண்டனர்.
தவறு என்றால் அதை ஏன் புலிகளுக்கு நீங்கள் சுட்டிக்காட்டவில்லை என்று திருப்பிக் கேட்ட போது, சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து களத்தில் நின்று கொண்டிருப்பவர்களை கேள்விகளால் காயப்படுத்த விரும்பவில்லை என்று பதில் அளித்தனர்.
அப்போது புலிகள் களத்தில் நின்றதனால் இது பற்றிக் கேட்கவில்லை. இப்போது புலிகள் களத்தில் இல்லாததனால் அது பற்றி கேட்கக் கூடாது என்று கூறுகின்றனர். அப்படி என்றால் புலிகளின் தவறுகளை எப்போது தான் கேள்வி கேட்பது?
புலிகளை விமர்சனத்துக்கு உட்படுத்தி, புலி ஆதரவாளர்கள் தம்மை சுய பரிசோதனை செய்து கொள்ளாத வரை அவர்களின் எந்தப் போராட்டமும் வெற்றி பெறாது.கடந்த கால நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு ஒரு புதிய அணுகு முறையை கையில் எடுக்கும் போதுதான், மறுமலர்ச்சி சாத்தியமாகும்.
தோழர் சீமான் தமிழ் இனத்தின் மீள் எழுச்சிக்காக களமாடிக் கொண்டிருப்பவர். அப்படிப்பட்டவர் புலிகளைப் போலவே பிரச்சனைகளை அணுகினால் வீழ்ச்சிதான் விடையாக கிடைக்கும்.
[எழுத்தாளர் மீனா தொகுத்த 'அ.மார்க்ஸ் - சில மதிப்பீடுகள்' என்னும் நூலுக்கு ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை]