கூரையிலிருந்து தூக்கி எறியப்படும் பச்சிளங் குழந்தைகள்!
மும்பையிலிருந்து 280 மைல்கள் தெற்கே ஷோலாபூர் அருகே அமைந்துள்ளது பாபா உமர் தர்கா. இங்கு முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் பங்குபெறும் ஒரு சடங்கில் நூற்றுக்கணக்கான பச்சிளங் குழந்தைகள் கூரையிலிருந்து தூக்கி எறியப்படுகின்றனர். அக்குழந்தைகளை கீழே நிற்பவர்கள் பெட்ஷீட் விரித்து பிடிக்கிறார்கள். இவ்விதம் செய்வதால் குழந்தைகளுக்கு பூரண ஆரோக்கியம் கிடைக்கும் என்றும் அவர்களது குடும்பம் வளம் பெறும் என்றும் நம்பப்படுகிறது. இந்த சடங்கு ஏறத்தாழ 700 வருடங்களாக நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
உலுக்கி எறியப்படும் குழந்தைகள் வீறிட்டலறி விழுவதை ஒளிபரப்பிய ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியின் மீது குழந்தை உரிமை ஆர்வலர்கள் மிகுந்த அதிர்ச்சியுற்றனர். இது குழந்தைகளுக்கு பாதுகாப்போ தகுந்தோ சுகாதார வசதியோ ஏற்படுத்தித் தராத அரசாங்கத்தின் கையாலாகாத் தனத்தை காட்டுகிறது என்று சிவில் உரிமை அமைப்பை சார்ந்த ரஞ்சனா குமாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு அனுமதியளித்த நிர்வாகிகள் மீதும் அந்த அமைப்பு அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
இந்திய தேசிய அமைப்பின் குழந்தைகள் உரிமை பாதுகாவல் பிரிவு இது குறித்து ஷோலாபூரின் நிர்வாக அமைப்பிற்கு நோட்டீஸ் அனுப்பியதுடன் இது குறித்து விசாரனையை முடுக்கிவிட்டுள்ளது.