திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, December 20, 2010

பெண்கள் பள்ளியில் தொழுகைகளை நிறைவேற்றலாமா?

,
பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டு, பெண் பிள்ளைகள் உயிருடன் குளிதோண்டிப் புதைக்கப்பட்ட காலத்தில் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்பட்ட நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பெண்களுக்குரிய உரிமைகளை மிகத் தெளிவாக விளக்கினார்கள். அவற்றை முஸ்லிம்கள் காலம் காலமாகப் பேணி வந்தார்கள். அவற்றில் பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுவதும் அடங்கும்.
பிற்பட்ட காலங்களில் இஸ்லாத்தில் இணைந்தவர்களாலும், மாற்று மத கலாச்சாரத்தின் தாக்கம் பெற்ற முஸ்லிம்களாலும் இவ்வாறான உரிமைகள் பறிக்கப்பட்டன என்பதே உண்மை.
பெண்ணை மணமுடிக்கின்ற போது சீதனம், சீர்வரிசை என்ற பெயரில் பெண்ணின் பொறுப்பாளியிடம் பலவந்தமாகப் பறித்தல், உயர்கல்வியை தொடர்வதை, இஸ்லாமிய அடிப்படையில் தொழில் புரிவதை மறுத்தல், பெண,; ஒப்பமிடத் தெரிந்தால் போதும் என்ற வரட்டுத் தத்துவம் பேசுதல், கட்டாயம் முகத்தை மூட வேண்டும் என்ற போக்கு, மார்க்கத்தின் பெயரால் நிகழும் இத்தாக்கால கொடுமைகள், மாமியார் மருகளை அடிமையாக வைத்தல், மாமனாரையும், மாமியாரையும் தலைகுனிந்து மரியாதை செய்யும்படி பணித்தல் போன்ற கொடுமைகளுடன் பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுவதை ஹராமாக்கும் தீர்ப்பையும் இணைத்துக் கூற முடியும்.
ஒரு காலத்தில் பெண்களுக்கு உரிமைகள் மதங்களில் மறுக்கப்பட்டதன் விளைவுதான் இன்று பெண்கள் நிர்வாணிகளாக, போகப்பொருளாக திட்டமிட்டே மாற்றப்படுகின்றனர், மாத்திரமின்றி அது அவர்களின் உரிமை என்றும் சங்கநாதம் முழங்குவதையும், பெண்ணுரிமைக் கோஷமாகவும் எழுதப்படுகின்றது. இந்த நிலைக்கு மத குருமார்கள் வழி வகுத்தது போல பள்ளிக்குச் செல்வதை தடுக்கும் மெளலவிகளின் நடவடிக்கையும் அமைகின்றது என்பது கசப்பான உண்மை.
பெண்களும், தேவைக்காக வெளிச் செல்தலும்:
பெண்கள் தமது தேவவைகளை நிறைவேற்றிக் கொள்ள மஹ்ரமான ஆண்களுடன் வெளியில் செல்வதைக் கட்டாயப்படுத்தும் கலாச்சாரத்தை இஸ்லாம் உருவாக்கி இருப்பது போல மஹ்ரம் துணையின்றி செல்வதையும் சில சந்தர்ப்பங்களில் அனுமதித்தும் இருக்கின்றது.
ஆரம்ப காலப் பெண்கள் தமது மல சலத்தேவைக்காக இரவு வேளைகளில் திறந்த வெளிக்கு வெளியேறிச் செல்பவர்களாக இருந்தனர். அல்லாஹ்வின் தூதரிடம் உமர் (ரழி) அவர்கள் உங்கள் மனைவியருக்கு ஹிஜாபைக் கொண்டு வாருங்கள் எனக் கூறுபவர்களாக இருந்தார்கள். ஆனால் நபி (ரழி) அவர்கள் அதைச் செய்யவில்லை. நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவரான ஸவ்தா பின்த் ஸம்ஆ (ரழி) அவர்கள் ஒரு இரவு வெளியேறிச் சென்றதை அவதானித்த உமர் (ரழி) அவர்கள், அவர்கள் கொழுத்த பெண்ணாக இருந்ததால் சவ்தாவே! உங்களை நாம் அறிந்து கொண்டோம், ஹிஜாப் சட்டம் சீக்கரம் வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இவ்வாறு கூறுவார்கள். அதற்கமைவாக ஹிஜாபின் வசனத்தை அல்லாஹ் இறக்கிவைத்தான் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி ஹதீஸ் எண்: 143. பாடம்: பெண்கள் மலசலத் தேவைக்காக வெளியில் செல்லுதல்), (முஸ்லிம் ஹதீஸ் எண்: 4030)
மற்றொரு அறிவிப்பில், ஹிஜாப் இறங்கிய பின்னர் ஸவ்தா (ரழி) அவர்கள் ஒரு தேவையின் நிமிர்த்தம் வெளியேறிச் செல்வதைக் கண்ட உமர் (ரழி) அவர்கள் ஸவ்தாவே உம்மை எமக்குத் தெரியாமல் இல்லை. நீங்கள் எப்படி வெளியேறலாம் என்று சிந்தியுங்கள் என்று சொன்னதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதரிடம், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் எனது தேவைக்காக வெளியேறிச் சென்ற நேரத்தில் உமர் எனக்கு இவ்வாறு, இவ்வாறெல்லாம் சொன்னார் எனக் கூறினாரே எனக் கூறும் ஸவ்தா (ரழி) அவர்கள், உடன் அல்லாஹ்வின் தூதருக்கு வஹி அறிவிக்கப்பட்டது, (அதனால் ஏற்பட்ட) வியர்வையைத் துடைத்துக் கொண்டே
 ففَقَالَ إِنَّهُ قَدْ أُذِنَ لَكُنَّ أَنْ تَخْرُجْنَ لِحَاجَتِكُنَّ (البخاري )
‘நீங்கள் உங்கள் தேவைகளுக்காக வெளியேறிச் செல்வது நிச்சயம் அனுமதிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்கள்’ என்ற ஸவ்தா (ரழி) அவர்கள் கூறும் செய்தி புகாரி, முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளதைப் பார்க்கின்றோம்.
மேற்படி ஹதீஸுக்கு இமாம்கள் தரும் விளக்கம்.
قَالَ اِبْن بَطَّال : فِقْه هَذَا الْحَدِيث أَنَّهُ يَجُوز لِلنِّسَاءِ التَّصَرُّف فِيمَا لَهُنَّ الْحَاجَة إِلَيْهِ مِنْ مَصَالِحهنَّ  ، ………. وَفِيهِ جَوَاز كَلَام الرِّجَال مَعَ النِّسَاء فِي الطُّرُق لِلضَّرُورَةِ ، ………   وَفِيهِ أَنَّ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْتَظِر الْوَحْي فِي الْأُمُور الشَّرْعِيَّة ؛ لِأَنَّهُ لَمْ يَأْمُرهُنَّ بِالْحِجَابِ مَعَ وُضُوح الْحَاجَة إِلَيْهِ حَتَّى نَزَلَتْ الْآيَة ، وَكَذَا فِي إِذْنه لَهُنَّ بِالْخُرُوجِ . وَاَللَّه أَعْلَم (فتح الباري لابن حجر – (1 / 238)

பெண்கள் தமது நலனுடன் தொடர்புடைய தமது தேவைகளை தாமே நிறைவு செய்து கொள்வதை அனுமதித்தல், அவசியத்தேவைகளின் போது பாதைகளில் பெண்களுடன் பேசுதல், பெண்கள் மறைந்தும், மறைத்தும் வாழ வேண்டும் என்ற நிலை இருந்தும் அவ்வாறு தன்னிச்சையான கட்டளைப்பிறப்பிக்காது மார்க்க விவகாரங்களில் நபி (ஸல்) அவர்கள் வஹியை எதிர்பார்ப்பவர்களாக இருந்தமை போன்ற விளக்கங்கள் இதில் பெறப்படுகின்றன என்ற கருத்தை இமாம் இப்னு பத்தால் (ரஹ்) அவர்கள் மூலம் இப்னு ஹஜர் (ரஹ்) வெளியிட்டுள்ளதைப் பார்க்கின்றோம். (பார்க்க: பத்ஹுல்பாரி).
شرح النووي على مسلم – (7 / 306)
….. فيه جَوَاز خُرُوج الْمَرْأَة مِنْ بَيْت زَوْجهَا لِقَضَاءِ حَاجَة الْإِنْسَان إِلَى الْمَوْضِع الْمُعْتَاد لِذَلِكَ بِغَيْرِ اِسْتِئْذَان الزَّوْج ، لِأَنَّهُ مِمَّا أَذِنَ فِيهِ الشَّرْع .
ஒரு பெண் தனது கணவனின் அனுமதியின்றி வழமையான இடத்திற்கு தேவையை நிறைவு செய்ய வெளியேறிச் செல்வது அனுமதி என்பதைக்காட்டுகின்றது. ஏனெனில் இது மார்க்கம் அனுமதித்த ஒன்றில் உள்ளதாகும் என இமாம் நவவி (ரஹ்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். (பார்க்க: ஷரஹ் முஸ்லிம்) இந்த கருத்தைத்தான் நாமும் முன்வைக்கின்றோம்.
பள்ளிவாசலுக்கு வருவதை அனுமதிக்கும் நபிமொழிகள்

பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுவதை அனுமதிக்கின்ற ஆதாரபூர்வமான பல நபிமொழிகள் இருக்கின்றன. அவற்றில் சிலதை மாத்திரம் இங்கு தருகின்றோம்;.
1) உமர் (ரழி) அவர்களின் மனைவி ஒருவர் இஷா, மற்றும் சுபஹ் தொழுகைக்காக பள்ளியில் நடை பெறும் (ஜமாஅத்) கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்பவராக இருந்தார்கள். உமர் (ரழி) அவர்கள் இதை வெறுத்து, ரோஷப்படுகின்ற போதும் நீங்கள் ஏன் இவ்வாறு செல்கின்றீர்கள் என அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது, அவர்கள் என்னைத் தடுக்க தடையாய் இருப்பது என்ன தெரியுமா? எனக் கேட்டபின் ‘அல்லாஹ்வின் அடிமைகளை (பெண்களை) அல்லாஹ்வின் பள்ளிகளை விட்டும் தடுக்காதீர்கள் என்ற இறைத்தூதரின் வார்த்தைதான் அவரைத் தடுக்கின்றது எனக் கூறினார்கள். (புகாரி).
2) உங்கள் பெண்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதி கோரினால் அங்கு செல்லவிடாது அவர்களைத் தடுக்காதீர்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அவரது மகன் பிலால், அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயம் நாம் அவர்களைத் தடுப்போம் எனக் கூறினார், அதற்கு அவரைத் தாறுமாறாகத் திட்டிவிட்டு, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூலம் செய்தியை அறிவிக்கின்றேன், நீ சத்தியம் செய்து தடுப்பேன் என்கின்றாயா? எனக் கேட்டார்கள். (முஸ்லிம். 667).
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் பள்ளியில் தொழுததற்கான சான்றுகள்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் அவர்களின் பள்ளியில் ஜமாத் தொழுகையில் கலந்திருக்கின்றார்கள் என்பதை பின்வரும் நபிமொழிகள் மூலம் உறுதி செய்யலாம்.
1) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழும் ஆண்கள் தங்களது வேஷ்டிகள் சிறியவையாக இருந்தாதால் அவற்றை (கீழாடைகளை) தங்கள் பிடரியில் கட்டிக்கொண்டு தொழுபவர்களாக இருந்தார்கள்.
     …..   فَقِيلَ لِلنِّسَاءِ لَا تَرْفَعْنَ رُءُوسَكُنَّ حَتَّى يَسْتَوِيَ الرِّجَالُ جُلُوسًا(صحيح البخاري )
‘ஆண்கள் சம நிலைக்கு வரும்வரை நீங்கள் உங்கள் தலைகளை உயர்த்தாதீர்கள் என அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களால் (அறிவுரை) கூறப்பட்டது (புகாரி, முஸ்லிம், நஸயி). இது பெண்கள் ஆண்களுடன் பள்ளியில் கூட்டுத் தொழுகையில் கலந்து கொண்டதை நிரூபிக்கும் செய்தியாகும்.
2) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுபஹ் தொழுகையை நேரகாலத்துடன் தொழுவார்கள். அதில் கலந்து கொள்ளும் முஃமினான பெண்கள் தங்கள் போர்வையால் போர்த்திக் கொண்டு திரும்பும் வேளை இருட்டின் கடுமையால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாது போகும் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி 825, முஸ்லிம் 1026, அபூதாவூத், நஸயி).
3) நான் தொழுகையில் நின்று அதில் நீடிக்க நினைத்துக் கொண்டிருப்பேன், அப்போது சிறுபிள்ளையின் அழுகுரலை செவிமடுப்பேன். அதன் தாய் அதன் மீது படும் கஷ்டத்தை அஞ்சி அதை நான் சுருக்கமாக்கிக் கொள்வேன். என நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூத்).
4) ஆண்களில் தொழுகை வரிசையில் சிறந்தது முதலாவதும், பெண்களின் வரிசையில் சிறந்தது அதில் இறுதியானதுமாகும் என நபி (ஸர’) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூத்).
5) உம்மு சுலைம் (ரழி) அவர்களின் வீட்டில் நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். நானும், ஒரு அநாதையும் அவர்களுக்குப் பின்னால் நின்றோம். உம்மு சலைம் அவர்கள் எமக்குப் பின்னால் நின்றார்கள். என அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி).
6) நபி (ஸல்) அவர்கள் தொழுகை முடிந்து ஸலாம் சொன்னால் பெண்கள் எழுந்து செல்வார்கள். அதில் சற்று தாமதிப்பார்கள். (புகாரி). இது ஆண், பெண் கலப்பில்லாதிருக்கவே இவ்வாறு செய்திருக்கிறார்கள் என இது பற்றி விளக்குகின்ற அறிவிப்பாளர் (அல்லாஹ் மிக அறிந்தவன்) எனக் கூறியே கூறுகின்றார்;.
பெருநாள் தொழுகை
முஸ்லிம் பெண்கள் ஆண்கள் பங்கு கொள்ளும் இவ்வாறான நிகழ்வில் கலந்து கொள்ள மார்க்கம் பின்வருமாறு அங்கீகாரம் தந்துள்ளது. பெருநாள் தினத்தில் குமரிப்பெண்கள், மாதவிடாய் பெண்கள் உட்பட அனைவரும் பெருநாள் தொழுகை நடைபெறும் திடலக்கு புறப்பட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கட்டளையிட்டார்கள். அப்போது ஒரு பெண் ‘அல்லாஹ்வின் தூதரே! எம்மில் ஒருத்திக்கு தலையில் அணிய முந்தாணை இல்லாவிட்டால் (போகாமல் இருக்கலாமா)? என நபி (ஸல்) அவர்களிடம் வினவினார். அவளது தோழி அவளது (மேலதிக) முந்தாணையை தனது சகதோரிக்கு அணிவிக்கட்டும், நன்மையிலும், முஸ்லிம்களின் பிரார்த்தனையிலும் பங்குகொள்ளட்டும். என நபியவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
இந்த ஹதீஸைப் பதிவு செய்யும் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் இதை உறுதி செய்யும் வண்ணம்;
 ;;  بَاب خُرُوجِ النِّسَاءِ وَالْحُيَّضِ إِلَى الْمُصَلَّى (البخاري)
‘சாதாரண நிலையில் உள்ள பெண்களும், மாதவிடாய்ப் பெண்களும் திடலுக்கு வெளியாகிச் செல்லுதல் ‘ என தலைப்பிட்டுள்ளதையும், முஸ்லிமின் கிரந்தத்திற்கு விளக்கம் தரும் இமாம் நவவி (ரஹ்) அவர்கள்,
بَاب ذِكْرِ إِبَاحَةِ خُرُوجِ النِّسَاءِ فِي الْعِيدَيْنِ إِلَى الْمُصَلَّى وَشُهُودِ الْخُطْبَةِ مُفَارِقَاتٌ لِلرِّجَالِ (صحيح مسلم   (4 / 404)
பெண்கள் ஆண்களைப் பிரிந்தவர்களாக இரு பெருநாளில் திடலுக்;குச் செல்வதும், குத்பாவிற்குச் சமூகம் தருவதும் ஆகுனுமானது என்பதை விளக்கும் பாடம்’ என தலைப்பிட்டுள்ளதையும் பார்க்கின்றோம்.
சிறந்தது எது பள்ளியா ? வீடா?
இப்படி தெளிவான அனுமதி இருப்பதை யாரும் மறுப்பது போன்று பேசினால் அவர்கள் இந்தச் செய்தி பற்றிய தெளிவற்றவர்கள் என்றே கருத வேண்டி ஏற்படும் என்பதை சாதாரண அறிவு படைத்தவருக்கும் தெரிந்ததேளூ! இருப்பினும் சிறப்பு எதில் இருக்கின்றது என்பதை பற்றிப் பேசினால் வீடுதான் என்பதை பின்வரும் நபி மொழியின் மூலம் உறுதி செய்ய முடியும்.
عنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَمْنَعُوا نِسَاءَكُمْ الْمَسَاجِدَ وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّ (سنن أبي داود)
உங்கள் பெண்களை பள்ளிவாயில்களை விட்டும் தடை செய்யாதீர்கள். அவர்களின் வீடுகள் அவர்களுக்குச் சிறந்ததாகும். (அபூதாவூத்) பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடை செய்ய கணவன் மாருக்கு அனுமதி இல்லை என்பதை உமர் (ரழி) அவர்களின் மனைவியரில் ஒருவர் கூறிய செய்தியை முன்னர் குறிப்பிட்டிருந்தோம் அதையும் இணைத்தே படிக்கவும்.
 
பெண்கள் பள்ளிக்கு வரும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்.
பெண்கள் பள்ளிக்கு வருகின்ற போது பின்வரும் ஒழுங்குகள் பேணப்படுவது அவசியமாகும்.
1) மணம் பூசி வருவதைத் தவிர்த்தல்.
عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ قَالَتْ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ الْمَسْجِدَ فَلَا تَمَسَّ طِيبًا (صحيح مسلم)
(பெண்களே!) உங்களில் யாராவது பள்ளிக்கு வந்தால் அவர் வாசைன பூச வேண்டாம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்களின் மனைவி ஸைனப் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்). அவர்களின் மற்றொரு அறிவிப்பில், ‘ உங்களில் ஒருவர் இஷாவுக்கு பள்ளிக்கு வருகின்ற போது அவ்விரவு நறுமணம் பூசி வரவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளதைப் பார்க்கின்றோம். (முஸ்லிம்).
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا امْرَأَةٍ أَصَابَتْ بَخُورًا فَلَا تَشْهَدْ مَعَنَا الْعِشَاءَ الْآخِرَةَ  (صحيح مسلم)
எந்தப் பெண் நறுமணத்தைப் பூசிக் கொண்டாளோ அவள் இஷாத் தொழுகைக்கு நம்முடன் சமூகம் தரவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியு;ளளார்கள். (முஸ்லிம்).
இவ்வாறான செய்திகள் மூலம் பெண்கள் நறுமணம் பூசியவர்களாக தொழுகைக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளதைப் பார்க்கின்றோம்.
2) இஸ்லாமிய ஆடையுடன் செல்லுதல்.
முஃமினான பெண்கள் தமது போர்வைகளால் போர்த்தியவர்களாக நபி (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் கலந்து கொள்வார்கள், தொழுகை முடிந்து கலைந்து செல்வார்கள். இருளின் கடுமையால் அவர்களை யாரும் அறிந்து கொள்ளமாட்டார்கள் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;. (புகாரி).
நரகவாதிகளான இரு பிரிவினர் உள்ளர். அவர்கள் போன்றோரை நான் என்றும் கண்டதில்லை எனக் கூறிய நபி (ஸல்) அவர்கள் ‘ ஆடை அணிந்தும் நிர்வரிணிகளான பெண்கள், வளைத்தும், வழைந்தும் நடப்பவர்கள், அவர்களின் தலைகள் சாய்ந்து செல்லும் ஒட்டகத்தின் திழ்கள் போன்றிருக்கும், அவர்கள் சுவர்க்கத்தில் நுழையவோ, அதன் வாடையை நுகரவோமாட்டார்கள் எனக் கூறினார்கள். (முஸ்லிம்).
3) பார்வைகளைத் தாழ்த்தி, அலங்காரங்களை வெளிப்படுத்தாது செல்லுதல்.
பெண்கள் பள்ளிக்கு மாத்திரமல்ல, வெளியில் செல்லுகின்ற போதும் கூட பொதுவாக கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளில் இதுவும் ஒன்றாகும்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைக் காத்துக் கொள்ளுமாறும், (முகம், கை போன்ற) தானாக வெளிப்படும் உறுப்புக்கள் நீங்கலாக ஏனைய எல்லாப்பகுதிகளையும் மறைக்கும்படியும், தங்களது முந்தாணைகளால் (முழுமையாக) போர்த்திக் கொள்ளும்படியும், தங்களது அலங்காரங்களை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் முஃமினான பெண்களுக்கு நபியே நீர் கூறுவீராக! (அந்நூர்: வச: 31).
இந்த வசனத்தைக் கவனத்தில் கொண்டு பெண்கள் தாம் வெளியில் செல்லுகின்ற போதுள்ள ஒழுங்குகளைப் பேண வேண்டும்.
4) வீதி ஓரங்களால் செல்லுவதும், திரும்புவதும்.
வீதியில் பெண்கள் ஆண்களுடன் கலக்கின்ற நிலை தவிர்க்கப்பட வேண்டும். பள்ளிக்குச் செல்லும் போதும், வீடு திரும்பும் போதும் இந்த ஒழுங்கை கட்டாயம் பேணியாக வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் இருந்து வெளியேறி போது ஆண்கள், பெண்கள் அனைவரும் கலந்து நிற்பதைக் கண்டார்கள். பெண்களைப் பார்த்து கொஞ்சம் தாமதியுங்கள், பாதையில் முட்டிக் கொண்டு செல்வது உங்களுக்குரியதல்ல, நீங்கள் பாதை ஓரத்தைப் பிடித்துச் செல்லுங்கள் எனக் கூறினார்கள். அதனால் பெண் செல்லுகின்ற போது தனது ஆடை சுவரில் உரசியபடி செல்பவளாக இருந்தாள். (அபூதாவூத்)

பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுப்பதாக நம்பப்படும் செய்தியும், அதற்கான மறுப்பும்

பெண்கள் பள்ளிக்கு வருவதையும், அவர்கள் அனுமதி கோரும் பட்சத்தில் அனுமதி வழங்கப்படல் வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் பல நபி மொழிகளைக் கண்டு கொள்ளாத மெளலவிகள் பலர் ஆயிஷா (ரழி) அவர்களின் கருத்துடன் அமைந்த பின்வரும் கூற்றை நபி மொழிகளை விட முன்னிலைப்படுத்தி அனைத்து ஹதீஸ்களையும் செயலிழக்கச் செய்யும் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கையை அவதானிக்கின்றோம். இது சான்றுகளை அணுகத் தெரியாதவர்களின் செயல்முறையாகும்.
عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَقُولُ لَوْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى مَا أَحْدَثَ النِّسَاءُ لَمَنَعَهُنَّ الْمَسْجِدَ كَمَا مُنِعَتْ نِسَاءُ بَنِي إِسْرَائِيلَ قَالَ فَقُلْتُ لِعَمْرَةَ أَنِسَاءُ بَنِي إِسْرَائِيلَ مُنِعْنَ الْمَسْجِدَ قَالَتْ نَعَمْ  (صحيح مسلم )
பெண்கள் உருவாக்கிக் கொண்ட(புதிய)வைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவதானித்திருந்தால் பனூ இஸ்ரவேலரின் பெண்கள் தடுக்கப்பட்டது போல நமது பெண்களையும் பள்ளிக்கு வராது நிச்சயம் தடுத்திருப்பார்கள்; என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் குறிப்பிடுவதை அவர்களின் கருத்தாகக் கொள்ளாமல் நபி மொழியாகக் கொண்டு பள்ளிக்குச் செல்வதை அனுமதிக்கும் பல நபி மொழிகள் இதன் மூலம் உதாசீனம் செய்யப்படும் நிலையைப் பரவலாக அவதானிக்கின்றோம்.
இது அன்னை அவர்களின் கூற்று என்பதே உண்மை. பள்ளிக்குச் செல்வது அல்லாஹ்வின் தூதர் தனது மரணத்துக் முன்னால் அனுமதித்த ஒன்றாகும். அவர்களின் காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வந்து சென்றார்கள். அவ்வாறு அவர்களை தடை செய்வதாக இருந்தால் நிச்சயமாக அவர்கள் உயிருடன் இருக்கின்ற போதே தடை செய்திருப்பார்கள்.
அல்லாஹ் அனைவருக்கும் மார்க்கத்தில் விளக்கத்தை தருவானாக!  நன்றி:காத்தான்குடி

0 comments to “பெண்கள் பள்ளியில் தொழுகைகளை நிறைவேற்றலாமா?”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates