திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Tuesday, December 21, 2010

இத்தா (கணவன் மரணம், விவாகரத்து

,
இல்லற பந்தத்தில் இணையும் பெண்களில் அதிகமானோர் ஏதோ ஒரு விதத்தில் “இத்தா” இருக்கும் நிலையை அடைகின்றனர். சிலபோது விவாகரத்தின் மூலமோ அல்லது கணவனின் இறப்பு மூலமோ இது நிகழலாம். எனவே இத்தா குறித்து தெளிவு அனைவருக்கும் குறிப்பாகப் பெண்களுக்கு இருப்பது அவசியமாகும். இந்த வகையில் “இத்தா” குறித்துச் சுருக்கமான சில விளக்கங்களை இந்தக் கட்டுரை மூலம் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்.

இத்தா” – பொருள்:- “அத்த” என்றால் எண்ணினான் என்பது அர்த்தமாகும். நோயாளி-பயணிகளின் நோன்பு பற்றி அல்லாஹ் கூறும் போது பின்வருமாறு கூறுகின்றான்;

எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கின்றாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேணடும். (2:185)

இங்கே றமழானில் விடப்பட்ட நோன்புகளை ஏனைய மாதங்களில் கணக்கிட்டு நோற்பதற்கு “இத்ததுன்” என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமிய ஷரீஆவின் பரிபாஷையில் “இத்தா” என்பது விவாகரத்துப் பெற்ற பெண் அல்லது கணவனை இழந்த பெண் குறிப்பிட்ட காலம் திருமணஞ் செய்யாமல் காத்திருக்கும் காலத்தைக் குறிக்க இப்பதம் பயன்படுத்தப் படுகின்றது.

இத்தாவின் கால அளவு:
ஒரு பெண் எதற்காக இத்தா இருக்கிறாள்? எந்த நிலையில் இருக்கின்றாள்? பெண்ணின் நிலை என்ன? என்ற அடிப்படையில் பெண்ணின் இத்தாக் காலம் மாறுபடும். இதனைப் பின்வருமாறு சுருக்கமாக நோக்கலாம்.

(1) கர்ப்பிணிப் பெண்:
இத்தா இருக்கும் பெண் கர்ப்பிணியாயின் அவள் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை இத்தா இருக்க வேண்டும். கணவன் “தலாக்” விட்டதற்காக இருக்கும் இத்தாவாக இருந்தாலும் சரி அல்லது கணவன் மரணித்ததற்காக இருக்கும் இத்தாவாக இருந்தாலும் சரி இதில் விதிவிலக்கில்லை.

ஒரு பெண் நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் கணவன் மரணிக்கின்றான். கணவன் மரணித்து ஓரிரு நாட்களிலோ அல்லது ஓரிரு மணி நேரத்திற்குப் பின்னரோ அல்லது ஓரிரு நிமிடங்களின் பின்னரோ அவள் குழந்தையைப் பெற்று விட்டால் அவளது இத்தாக்காலம் முடிந்து விடும்.

இதே போன்று ஒரு பெண் கர்ப்பமுறும் போது கணவன் மரணிக்கின்றான். அவள் அதன் பின் 9 மாதங்கள் தாண்டிய பின்னர்தான் குழந்தையைப் பெற்றெடுப்பாள் என்றாலும் அவள் அதுவரை இத்தா இருந்தேயாக வேண்டும்.
இது குறித்து அல்குர்ஆனில் பின்வருமாறு கூறப்படுகின்றது;

கர்ப்பிணிகளின் (இத்தாக்)காலம் அவர்கள் தமது குழந்தைகளைப் பெற்றுப் பிரசவிக்கும் வரையிலாகும்..” (65:3)

இங்கே அல்லாஹ் பயன்படுத்தியுள்ள வார்த்தை அவர்கள் பெற்ற குழந்தை உயிருடன் பிறந்தாலும் அல்லது இறந்து பிறந்தாலும், நிறைவாகப் பிறந்தாலும் அல்லது குறைப்பிரசவமாக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான் என்பதை உணர்த்துமுகமாக உள்ளது.

ஸபீஆதுல் அஸ்லமீ என்ற பெண்மணி ஸஃத் பின் கவ்லாவின் மனைவியாவார். இவர் பத்ரில் பங்குகொண்ட ஸஹாபியாவார். இவர் ஹஜ்ஜதுல் விதாவில் மரணமானார். அப்போது அவரது மனைவி கர்ப்பிணியாக இருந்தார். இவர் மரணித்ததும் அவர்கள் பிரசவித்தார்கள். இந்தப் பெண்மணி தனது பிரசவத்தீட்டு முடிந்ததும் திருமணம் பேசுவோர் தன்னைத் திருமணம் பேசுவதற்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார்கள். அப்போது அபுஸ் ஸனாபில் என்ற நபித்தோழர் இவர்களைப் பார்த்து “உன்னை நீ அலங்கரித்திருக்கக் காண்கின்றேனே! நீ திருமணம் செய்ய விரும்புகின்றாயா?” எனக் கேட்ட அவர், “நீ 4 மாதங்கள் – 10 நாள் கழியும் வரை திருமணம் செய்ய முடியாது!” எனக் கூறினார்.

இவர் அப்படிக் கூறியதன் பின், நடந்ததை ஸபீஆ(ரலி) அவர்கள் கூறும் போது;
“நான் எனது ஆடைகளை உடுத்திக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்று இது குறித்துக் கேட்ட போது “நீ பிரசவித்த போதே உனக்குத் திருமணம் ஆகுமாகி விட்டது!” என்று கூறியதோடு, “நீ விரும்பினால் திருமணம் செய்துகொள்!” என எனக்கு ஏவினார்கள்” என்று கூறுகின்றார்கள்.
(புகாரி 5318, 5319, முஸ்லிம் 1485, திர்மிதி, நஸஈ, அஹ்மத்)

எனவே, கர்ப்பிணிப் பெண் குழந்தை பெற்றதும் அவளது இத்தாக்காலம் முடிந்து விடும்.

(2) கர்ப்பிணி அல்லாத கணவன் மரணித்த பெண்களின் இத்தா:
கணவன் மரணித்த பெண்கள் கர்ப்பிணிகள் அல்ல என்றால் 4 மாதங்களும், 10 நாட்களும் இத்தா இருக்க வேண்டும். இந்தக் காலம் பிறைக் கணக்கின் அடிப்படையில் கணக்கிடப்பட வேண்டும். ஆங்கிலக் கணக்கின்படி பார்க்கக் கூடாது. ஆங்கில மாதத்தில் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியில் முடிகின்றது. பிறைக் கணக்கின்படி மாதம் 28 இல் முடியவே முடியாது. ஆங்கிலக் கணக்கில் பல மாதங்கள் 31 ஆம் திகதியில் முடிவடைகின்றன. பிறைக் கணக்கில் மாதம் 29 அல்லது 30 இல் முடிவடையும். 31 ஆம் நாள் என்பது பிறைக் கணக்கில் வரவே வராது. எனவே 4 மாதம் – 10 நாள் என்பது பிறைமாதக் கணக்கின்படி பார்க்கப்பட வேண்டும்.

கணவன் மரணித்த பெண்கள், கணவனுடன் சேர்ந்து இல்லறத்தில் ஈடுபட்டிருந்தாலும் சரி! நீண்ட நாட்களாக ஈடுபடாவிட்டாலும் சரி! இத்தாவை இருந்தேயாக வேண்டும். 4 வருடங்களாக வெளிநாட்டில் தொழில் செய்துகொண்டிருந்த கணவர் அங்கேயே மரணித்து விடுகின்றார். இவர் தனது மனைவியுடன் நீண்டகாலம் இல்லறத்தில் ஈடுபடவில்லை என்றாலும் இறந்த கணவனுக்காகத் தனது துக்கத்தை வெளியிடு முகமாகவும், “இத்தா” என்ற வணக்கத்தை நிறைவேற்று முகமாகவும் அந்தப் பெண் 4 மாதம் 10 நாள் இத்தா இருந்தேயாக வேண்டும்.

திருமண உடன்படிக்கை நிறைவேறிக் கணவன், மனைவியைச் சந்திப்பதற்குள் கணவன் மரணித்து விட்டாலும் திருமண ஒப்பந்தம் நிறைவேறி விட்ட காரணத்தால் அந்தப் பெண்ணும் 4 மாதங்கள் 10 நாட்கள் மரணத்திற்கான இத்தா இருந்தாக வேண்டும்.

இந்த இத்தாக் குறித்துக் குர்ஆன் பேசும் போது;
உங்களில் எவரேனும் மனைவியர்களை விட்ட நிலையில் மரணித்து விட்டால், அவர்கள் தமக்காக நான்கு மாதங்களும், பத்து நாட்களும் (இத்தாவழிபாட்டில்) காத்திருக்க வேண்டும். அவர்கள் தமது காத்திருக்கும் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் தமது விடயத்தில் தாமாக நல்ல முறையில் அவர்கள் நடந்துகொள்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்பவை பற்றி அல்லாஹ் நன்கறிந்தவன்.” (2:234)

இத்தாவுக்கான தனியான சட்டங்கள்:
கணவன் மரணித்ததற்காக இருக்கும் இத்தா துக்கம் கலந்த இத்தாவாகும். தலாக் விடப்பட்ட பெண் மேற்கொள்ளும் இத்தாவுக்கும், இதற்குமிடையில் பாரிய வித்தியாசம் உள்ளது.

(1) திருமணம் பேசுதல்:
பொதுவாக எந்தப் பெண்ணும் “இத்தா” இருக்கும் போது திருமணம் பேசலாகாது. இது “தலாக்”, மரணம் இரண்டு “இத்தா”க்களுக்கும் பொருத்தமானதாகும். “தலாக்” விடப்பட்ட பெண்ணைப் பொருத்தவரையில் அவள் இத்தாவில் இருக்கும் போதும் “தலாக்” விட்ட கணவனின் மனைவி என்ற அந்தஸ்த்திலேயே இருக்கின்றாள். எனவே அவளிடம் திருமணம் குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசமுடியாது. இதேவேளை, கணவன் மரணித்ததற்காக “இத்தா” இருக்கும் பெண்ணிடம் நேரடியாகத் திருமணம் பேசுவது தடுக்கப்பட்டதாகும். எனினும் அவர்களுக்கு வாழ்வில் நம்பிக்கையூட்டும் விதமாக மறைமுகமான வார்த்தைகள் மூலம் திருமணம் செய்யும் உணர்வை வெளிப்படுத்த இஸ்லாம் அனுமதிக்கின்றது.
பின்வரும் வசனம் இது குறித்துத் தெளிவாகப் பேசுகின்றது;

“(இத்தாவில் இருக்கும் பெண்களிடம்) நீங்கள் திருமணஞ் செய்துகொள்ளும் விருப்பத்தை மறைமுகமாய்த் தெரிவிப்பதிலோ அல்லது உங்கள் உள்ளங்களில் மறைத்து வைப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை. நிச்சயமாக நீங்கள் அவர்களைப் பற்றி நினைப்பீர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான். (திருமணம் பற்றி) நல்ல வார்த்தைகளை நீங்கள் கூறுவதைத் தவிர இரகசியமாக அவர்களிடம் வாக்குறுதி அளிக்காதீர்கள்! (இத்தாவுடைய) காலக்கெடு, அதன் தவணையை அடையும் வரை திருமண ஒப்பந்தத்தைத் தீர்மானிக்காதீர்கள்! நிச்சயமாக உங்கள் உள்ளங்களில் இருப்பதை அல்லாஹ் நன்கறிகிறான் என்பதை அறிந்து, அவனை நீங்கள் அஞ்சிக்கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் சகிப்புத் தன்மைமிக்கவனுமாவான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!” (2:235)

(2) கணவன் இறந்ததற்காக “இத்தா” இருக்கும் பெண்கள் அலங்காரங்களைத் தவிர்க்க வேண்டும். கவர்ச்சியான சாயம் பூசப்பட்ட ஆடைகளை அணிவது, வாசனை-எண்ணைத் திரவியங்கள் பாவிப்பது, கண்ணுக்குச் சுர்மா இடுவது, மருதானி பூசுவது, நகைகள் அணிவது – அனைத்தையும் தவிர்க்க வேண்டும். கணவனின் மரணத்தைத் தவிர வேறு எவரின் மரணத்திற்காகவும் 3 நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்துவது எமக்குத் தடுக்கப்பட்டுள்ளது. கணவனுக்காக 4 மாதங்களும், 10 நாட்களும் அவள் துக்கம் அனுஷ்டிப்பாள். அவ்வேளையில் நாம் கண்ணுக்குச் சுர்மா இடலாகாது; வாசனை பூசலாகாது. நெய்வதற்கு முன்னர் சாயல் இடப்படாத வர்ணம் தீட்டப்பட்ட ஆடைகளை அணியலாகாது..என உம்மு அதிய்பா(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி 5341, 5342, 5343)

ஒரு பெண்மணி தனது மகளின் கணவன் மரணித்து விட்டதாகவும், இத்தாவில் இருக்கும் தனது மகளுக்குக் கண்ணில் நோவு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்குச் சுர்மா இடலாமா? எனக் கேட்ட போது நபி(ஸல்) அவர்கள் வேண்டாம்!என மறுத்தார்கள். (புகாரி 5336, 5337, முஸ்லிம்)
எனவே, மரணத்திற்காக “இத்தா” இருக்கும் பெண்கள் அலங்காரங்களைத் தவிர்க்க வேண்டும்.
இந்த “இத்தா” குறித்து அதிக மூடநம்பிக்கைகள் மக்கள் மத்தியில் இருந்து வந்தன.
- வயது போன பெண்கள் 40 நாட்கள் “இத்தா” இருந்தால் போதும்.
- அவர்கள் இருட்டறையில் இருக்க வேண்டும்.
- ஆண்பிள்ளைகள்-சிறுவர் எவரையும் அப்பெண் பார்க்கவோ, எவருடனும் பேசவோ கூடாது.
- கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் ஆண்பிள்ளை இருக்கலாம் என்பதால் கர்ப்பிணிகளும் அவர்களைப் பார்க்கக் கூடாது.
என ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள் இருந்தன. இவை இன்று மங்கி-மறைந்து விட்டன. இருப்பினும் இவர்கள் தேவைகளுக்காக வெளியில் செல்வது குறித்து மக்கள் மத்தியில் இன்னும் ஐயங்கள் உள்ளன.

“தலாக்” விடப்பட்ட பெண்ணைப் பொருத்த வரையில் கணவனின் இல்லத்தில்தான் “இத்தா” இருப்பாள். கணவன் மரணித்த பெண் “இத்தா” இருக்கும் போதும் நிர்ப்பந்தம் ஏதும் இல்லாவிட்டால் கணவனின் இல்லத்தில்தான் “இத்தா” இருக்க வேண்டும். “தலாக்” விடப்பட்ட பெண் கணவனின் அனுமதியின்றி வெளியே செல்ல முடியாது. அப்படிச் செல்வது கணவன்-மனைவிக்கிடையே விரிசலை விரிவாக்குவதுடன் இணக்கப்பாட்டுக்கான வாயில்களையும் இது அடைத்து விடும். கணவனின் மரணத்திற்காக “இத்தா” இருக்கும் பெண்ணைப் பொருத்தவரையில் தேவையிருந்தால் பகலில் வெளியில் செல்ல அனுமதியுண்டு. அத்தியாவசியமோ, நிர்ப்பந்த நிலையோ இருந்தாலேயன்றி இரவில் வெளியே செல்லக் கூடாது.

உஹதுப் போரில் ஷஹீதான நபித் தோழர்களின் மனைவியர் இத்தாஇருந்தனர். அவர்கள் நபியவர்களிடம் வந்து தாம் ஒன்றாக ஒருவர் வீட்டிற்தங்க அனுமதி கேட்டனர். நபி(ஸல்) அவர்கள் பகலில் ஒன்றுசேர்ந்து ஒருவர் வீட்டில் இருக்குமாறும், இரவில் தத்தமது வீடுகளுக்குச் சென்று விடுமாறும் கூறினார்கள். (கிதாபுல் உம்மு 5ஃ251, முஸன்னப் அப்துர்ரஷ்ஷாக்)
“தலாக்” விடப்பட்ட பெண்ணுக்கு கணவன் உணவும், இருப்பிடமும் அளிக்கவேண்டும். மூன்றாம் “தலாக்” சொல்லப்பட்ட பெண்ணுக்கு உணவு அளிக்க வேண்டியதில்லை. இந்த நிலையில் இருக்கும் பெண் உழைப்புக்காகப் பகலில் வெளியில் செல்லவும் நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.
இது குறித்து ஜாபிர்(ரலி) அவர்கள் கூறும் போது;
எனது மாமி மூன்றாம் தலாக்கூறப்பட்டிருந்தார்கள். அவர்கள் ஈத்தமரத்தில் ஈத்தம் பழங்களைப் பரிப்பதற்காகச் சென்றார்கள். அவர்களைச் சந்தித்த ஒரு நபித்தோழர் அவர்களைத் தடுத்தார். எனவே, இது குறித்து எனது மாமி நபி(ஸல்) அவர்களிடம் வினவிய போது நீ உனது தோட்டத்திற்குச் சென்று ஈத்தம்பழம் பறி! அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் நீ சிலபோது ஸதகாசெய்யலாம் அல்லது ஏதேனும் நல்லது செய்யலாம்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (முஸ்லிம், அபூதாவூத், நஸாஈ, இப்னுமாஜா)

இப்னுகுதாமா(ரலி) போன்ற அறிஞர்கள் இந்த ஹதீஸை வைத்துக் கணவனின் மரணத்திற்காக “இத்தா” இருக்கும் பெண் கூடத் தனது வாழ்வாதாரத் தேவைக்காக வெளியில் செல்ல வேண்டிய அவசியமிருந்தால் செல்லலாம் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர்.

எனவே, “இத்தா” இருக்கும் பெண் மருத்துவத் தேவைகள் மற்றும் அவசியத் தேவைகளிருந்தால் தகுந்த முறையில் வெளியில் செல்வதில் தடையில்லை.
(3) தலாக்கிற்கான இத்தா:

கணவன், மனைவியைத் “தலாக்” சொன்னால் அந்த மனைவியின் நிலையைப் பொருத்து இத்தாவின் சட்டம் 3 விதங்களாக அமையும்.

அ. உடலுறவுக்கு முன்னர் தலாக்:
திருமண ஒப்பந்தம் முடிந்து “ஈஜாப்-கபூல்” சொல்லப்பட்ட பின்னர் உடல் உறவில் ஈடுபடுவதற்கு முன்னர் கணவன், மனைவியைத் தலாக் கூறினால் அந்தப் பெண் “இத்தா” இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அடுத்த நிமிடமே அவள் வேறொருவரை மணம் முடிக்கலாம்.
இது குறித்து அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது;
நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கையாளர் களான பெண்களை நீங்கள் மணம் முடித்து, அவர்களை நீங்கள் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால், நீங்கள் கணக்கிடக் கூடிய இத்தா” (எனும் காத்திருக்கும் காலம்) எதுவும் உங்களுக்காக அவர்கள் மீதில்லை. ஆகவே, அவர்களுக்கு வாழ்க்கை வசதிகளை வழங்கி, அவர்களை அழகிய முறையில் விட்டு விடுங்கள்!” (33:49)

இவ்வாறு “தலாக்” கூறும் போது அந்தப் பெண்ணின் எதிர்கால வாழ்க்கைக்கு முட்டுக் கட்டையாக அமையும் விதத்தில் போலிக் குற்றங்கள் சுமத்தக் கூடாது. சிலர் பெற்றோரின் நிர்ப்பந்தத்திற்காக மணம் முடித்து, அன்று இரவே வீட்டை விட்டும் ஓடி விடுகின்றனர். பின்னர் தனது செயலை நியாயப்படுத்தப் பெண்ணுக்கு அது சரியில்லை, இது சரியில்லையென குற்றம் சுமத்துகின்றனர். இது தவறாகும் என்பதை இந்த வசனத்தின் இறுதிப்பகுதி கூறுகின்றது.
அடுத்து, இவ்வாறு “தலாக்” கூறுவதால் அந்தப் பெண் பாதிக்கப்படுகின்றாள். எனவே மஹரின் அரைவாசியை அவளுக்குத் “தலாக்” விட்டவன் வழங்குவது கட்டாயமாகும். உதாரணமாக 1 இலட்சம் மஹர் நிர்ணயிக்கப்பட்டிருந்தால் 50 ஆயிரம் வழங்குவது கட்டாயம். 1 இலட்சத்தையும் வழங்குவது நல்லதாகும். இது குறித்து அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
நீங்கள் அவர்களுக்கு மஹரை நிர்ணயம் செய்து, அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால் அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தம் யார் கையில் இருக்கிறதோ அ(க்கண)வரோ விட்டுக் கொடுத்தாலே தவிர நீங்கள் நிர்ணயம் செய்த மஹரில் அரைவாசியை அப்பெண்களுக்குக் கொடுப்பது கடமையாகும். எனினும், நீங்கள் அதை விட்டுக் கொடுப்பதே பயபக்திக்கு மிக நெருக்கமாகும். மேலும், உங்களுக்கிடையில் தயாளத்தன்மையுடன் நடந்து கொள்வதை மறந்து விட வேண்டாம். நீங்கள் செய்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் பார்ப்பவனாவான்.” (2:237)
நபி(ஸல்) அவர்கள் ஒரு பெண்ணை மணமுடித்தார்கள். அந்தப் பெண் “ஒரு இளவரசி ஒட்டகம் மேய்க்கும் இடையனுக்குத் தன்னை அர்ப்பணிப்பாளா?” எனக் கேட்டு, நபி(ஸல்) அவர்களுடன் வாழப் பிடிக்காததைக் கூறினாள். நபி(ஸல்) அவர்கள் அவளுக்குரிய சில அன்பளிப்புக்களை வழங்கி அவளை அவள் வழியிலேயே விட்டார்கள். (பார்க்க: புகாரி 5254, 5255, 5256, 5257)
அந்தப் பெண் நபி(ஸல்) அவர்களை அவமதித்தாள். அடுத்து, அவளாக விவாக பந்தத்தை முறித்தாய் இருந்தும் கூட நபி(ஸல்) அவர்கள் அன்பளிப்பு வழங்கியது அவதானிக்கத்தக்கதாகும்.

ஆ. தலாக் விடப்பட்ட மாதத்தீட்டு ஏற்படக்கூடிய பெண்களின் இத்தா:
இவர்களைப் பொருத்தவரை 3 மாதத் தீட்டுக்கள் ஏற்படும் வரை அல்லது 3 மாதத் தீட்டுக்கள் ஏற்பட்டுச் சுத்தமாகும் வரை “இத்தா” இருக்கவேண்டும்.
இது குறித்துப் பின்வருமாறு கூறுகின்றது;
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் தங்களுக்காக எதிர்பார்த்திருக்க வேண்டும்..” (2:228)

இ. மாதத்தீட்டு நின்ற அல்லது ஏற்படாத பெண்கள்:
இந்த நிலையில் இருக்கும் பெண்கள் பிறைக் கணக்கில் 3 மாதங்கள் “இத்தா” இருக்க வேண்டும்.
இது குறித்துப் பின்வரும் வசனம் பேசுகின்றது;
“உங்கள் பெண்களில் எவர்கள் மாதவிடாயை விட்டும் நம்பிக்கையிழந்து (அவர்களின் இத்தா விடயத்தில்) நீங்கள் சந்தேகங்கொண்டால் அவர்களுக்கும் (இதுவரை) மாதவிடாய் ஏற்படாதவர்களுக்குமுரிய இத்தாக்காலம் மூன்று மாதங்களாகும்..” (65:4)
இந்த இத்தாவில் இருக்கும் பெண்களை வீட்டை விட்டும் வெளியேற்றவும் கூடாது. அவர்கள் தாமாக வெளியேறிச் சென்று விடவும் கூடாது.
நபியே! நீங்கள் பெண்களை விவாகரத்துச் செய்தால் அவர்களின் இத்தாவைக் கணக்கிடக் கூடிய (மாதவிடாய் இல்லாத) காலத்தில் விவாகரத்துச் செய்யுங்கள். மேலும், “இத்தாவை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் இரட்சகனான அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். அவர்கள் பகிரங்கமான ஏதேனும் மானக்கேடானதைச் செய்தாலேயன்றி, அவர்களை நீங்கள் அவர்களது வீடுகளை விட்டும் வெளியேற்ற வேண்டாம். அவர்கள் வெளியேறவும் வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். எவன் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகின்றானோ, அவன் தனக்குத் தானே அநியாயம் செய்து கொண்டான். (சேர்ந்து வாழ) இதன் பின்னரும் அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை நீர் அறியமாட்டீர்.” (65:1)

“இத்தா” இருக்கும் பெண்கள் தமது கருவில் சிசு இருந்தால் அதை மறைக்கலாகாது..

தலாக் ரஜ்பீக்கான “இத்தா” இருக்கும் பெண்ணுக்கு கணவன் வாழ்வாதாரம் அளிக்க வேண்டும். அது அவனது பொருளாதார வசதிக்கு ஏற்ப இருக்க வேண்டும். அவள் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தையைப் பிரசவிக்கும் வரை அவளது செலவுகளை அவன் ஏற்றாக வேண்டும்.

நீங்கள் குடியிருக்கும் இடத்தில் உங்கள் சக்திக்கு ஏற்ப அவர்களை குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை உண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் தமது சுமையைப் பிரசவிக்கும் வரை அவர்களுக்குச் செலவழியுங்கள்! அவர்கள் உங்களுக்காக (உங்கள் குழந்தைகளுக்குப்) பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு நீங்கள் வழங்கி விடுங்கள்! உங்களுக்கிடையே (இது குறித்துப் பேசி) நல்ல முறையில் முடிவு செய்துகொள்ளுங்கள்! இதை நீங்கள் சிரமமாகக் கருதினால் அவளுக்காக மற்றொருத்தி (குழந்தைக்கு) பாலூட்டட்டும்.

வசதி உள்ளவர் தமது வசதிற்கு ஏற்பச் செலவிடட்டும். யாருக்கு வாழ்வாதாரம் அளவோடு வழங்கப்பட்டுள்ளதோ, அவர் அல்லாஹ் தனக்கு வழங்கியவற்றிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ், தான் வழங்கியதற்கு மேல் எந்தவோர் ஆத்மாவையும் சிரமப்படுத்த மாட்டான். அல்லாஹ் கஷ்டத்தின் பின் இலகுவை விரைவில் ஏற்படுத்துவான்.” (65:6-7)

அவள் குழந்தையைப் பெற்று அந்தக் குழந்தைக்கு அவளே பாலூட்டுவதாகக் குழந்தையின் தந்தையும், தாயும் தீர்மானித்தால் பாலூட்டும் காலம் வரை அவன் – அவளுக்கு வாழ்வாதாரமும், ஊதியமும் அளிக்க வேண்டும். அத்துடன் குழந்தைக்குரிய தேவைகளையும் கணவன் நிறைவேற்ற வேண்டும். குழந்தையின் தந்தை இறந்தால் கூட அவரின் வாரிசாக இருப்பவர் இந்தப் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்.

இது குறித்துப் பின்வரும் வசனம் விரிவாகப் பேசுகின்றது;
பால்குடியை நிறைவு செய்ய விரும்புகின்ற (கண)வருக்காகத் (தலாக் விடப்பட்ட) தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு இரண்டு வருடங்கள் பூரணமாகப் பாலூட்ட வேண்டும். (பாலூட்டும் தாய்மார்களாகிய) அவர்களுக்கு முறைப்படி உணவளிப்பதும், அவர்களுக்கு உடையளிப்பதும் பிள்ளையின் தந்தை மீது கடமையாகும். எந்தவொரு ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் சிரமப்படுத்தப்பட மாட்டாது. தாய் தன் பிள்ளைக்காகவோ, தந்தை தன் பிள்ளைக்காகவோ சிரமத்துக்குள்ளாக்கப்பட மாட்டார்கள். (தந்தை மரணித்து விட்டால்) இது போன்ற கடமை அவரது வாரிசுக்கும் உண்டு. அவ்விருவரும் மனம் விரும்பியும் ஆலோசனை செய்தும் பால்குடியை நிறுத்தி விடக் கருதினால் அவ்விருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் உங்களுடைய குழந்தைகளுக்குச் செவிலித்தாய் மூலம் பாலூட்ட விரும்பி (பெற்ற தாய்க்குக்) கொடுக்க வேண்டியதை உரிய முறைப்படி கொடுத்து விட்டால் (அதிலும்) உங்கள் மீது குற்றம் கிடையாது. நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைப் பார்ப்பவன் என்றும் அறிந்து கொள்ளுங்கள்!” (2:233)

குல்உவுக்கான இத்தா:
கணவன், மனைவியை விவாகரத்துச் செய்ய உரிமை இருப்பது போலவே, வேண்டாத கணவனை விட்டும் விலகிக்கொள்ள மனைவிக்கும் உரிமை உண்டு. ஒரு பெண் தன்னைக் கணவனிடமிருந்து விடுவித்துக்கொள்வதற்கு “குல்உ” என்று கூறப்படும். கணவனுடன் வாழப் பிடிக்காத மனைவி கணவரிடம் முறையிட்டு முறைப்படி திருமண ஒப்பந்தத்தை முறிப்பதற்கே “குல்உ” என்று கூறப்படும். இவ்வாறு விவாகபந்தத்தை முறிக்கும் போது பெண் தனது கணவனிடமிருந்து பெற்ற மஹரைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும். தனிப்பட்ட முறையிலன்றிக் “காழி” மூலமோ, தலைவர் மூலமோ விவாகபந்தம் முறிக்கப்பட வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சில பெண்கள் இவ்வாறு விவாகபந்தத்தை முறித்துள்ளனர். பரீரா என்ற அடிமைப் பெண்ணை ஆயிஷா(ரலி) அவர்கள் வாங்கி விடுதலை செய்த போது அவர் தனது கருப்பரான அடிமைக் கணவரை விட்டும் பிரிந்தார். நபி(ஸல்) அவர்கள் சேர்ந்துவாழ ஆலோசனை கூறிய போது அப்பெண் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவளின் கணவர் அழுது அழுது இப்பெண்ணின் பின்னால் வந்தும் கூட அவள் தனது முடிவில் உறுதியாக இருந்ததாக ஹதீஸ்கள் கூறுகின்றன. (பார்க்க: புகாரி 5281, 5282, 5283)
இவ்வாறே, ஸாபித் பின் கைஸ்(ரலி) அவர்களின் மனைவி நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் தாபித்(ரலி) அவர்களின் மார்க்கப் பற்றையோ, குணத்தையோ குறை கூறவில்லை. ஆனால் அவருடன் வாழ என்னால் முடியவில்லை!என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “(அவர் மஹராகத் தந்த) அவரது தோட்டத்தை திருப்பிக் கொடுக்கின்றாயா?” எனக் கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண் ஒப்புக்கொண்டாள். (பார்க்க: புகாரி 5274, 5275, 5276)
கணவன் – மனைவியைத் “தலாக்” சொன்னால் அவன் கொடுத்த மஹரில் எதையும் பெறமுடியாது. ஒரு பொற்குவியலைக் கொடுத்திருந்தாலும் பெறமுடியாது. ஆனால், மனைவி கணவனைப் பிரிவதென்றால் அவனிடமிருந்து பெற்ற மஹரைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். இதேவேளை, “குல்உ” செய்த பெண் ஒரு மாதவிடாய்க் காலம் “இத்தா” இருந்தால் போதுமானதாகும். தாபித் பின் கைஸின் மனைவியிடம் நபி(ஸல்) அவர்கள் ஒரு “ஹைழ்” வரும் வரை “இத்தா” இருக்குமாறு கூறினார்கள். (நஸாஈ)
இந்த ஹதீஸின் அடிப்படையில் “குல்உ” செய்த பெண் ஒருமாதத் தீட்டு ஏற்படும் வரை “இத்தா” இருந்தால் போதுமானது. இதேவேளை, இவள் மீண்டும் அந்தக் கணவனுடன் சேர்ந்துவாழ முடியாது.
இதே கருத்தைத்தான் உஸ்மான்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி), அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), அர்ருபைப் பின்து முஅவ்வித்(ரலி) போன்றோர் கொண்டுள்ளனர்.

இமாம் இப்னுல் கையிம்(ரஹ்) அவர்கள் இந்த 4 ஸஹாபாக்களின் கூற்றுக்கு ஏனைய நபித்தோழர்களிடம் மாற்றுக்கருத்து இருந்ததாகத் தெரியவில்லை என்று கூறுகின்றார்கள். இமாம்களில் அஹ்மத் இப்னு ஹம்பல், இஸ்ஹாக் இப்னு ராஹவைஹி, இப்னு தைமிய்யா போன்றோரும் இந்தக் கருத்தைத்தான் வலியுறுத்துகின்றனர். எனவே, “குல்உ” செய்த பெண் ஒரு “ஹைல்” ஏற்படும் வரை “இத்தா” இருந்தால் போதுமானதாகும். (அல்லாஹு அஃலம்    

0 comments to “இத்தா (கணவன் மரணம், விவாகரத்து”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates