இன்று உலகில் காணப்படும் அனைத்துப் பொருள்களும் அபரிமிதமான வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றன. மண்ணுக்கடியில் இருந்த உலோகங்கள் வளர்ச்சி பெற்று, விண்ணில் பறப்பது மட்டுமில்லை; இதரகோள்களையும் அடையும் பாக்கியத்தைப் பெற்றுள்ளன. இதுபோல் அனைத்துப் பொருள்களும் மேல்நிலை அடைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. சுருக்கமாகச் சொன்னால் மனிதனுக்கு வெளியேயுள்ள அனைத்துப் பொருள்களும் மேன்மை அடைந்துள்ளன.
அவற்றின் மேன்மைக்கு யார் காரணம் என்று பார்த்தால், அதற்கு மனிதனே காரணம் என்பது விளங்கும். ஆம்! அவற்றின் மீது மனிதனின் இடைவிடா தொடர் முயற்சியின் காரணமாக அவை ஒவ்வொன்றும் பிரமிக்கத் தக்க பெரும் வளர்ச்சி கண்டுள்ளன. இப்படி பொருட்களின் வளர்ச்சியைப் பார்த்து பெருமிதம் கொண்டு மனிதன் பெரிதும் முன்னேறி விட்டதாகப் பெருமையடிக்கிறான். ஆக மனிதன் வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சியை தனது வளர்ச்சியாக நினைத்து பெருமையடிக்கிறான்.
ஒரு காலத்தில் ஒவ்வொரு சிற்றூரும் ஓர் உலகம் போல் காட்சி அளித்தது. அன்று ஓர் ஊரில் உள்ளவர்களுக்கு, இதுபோல் பல ஊர்கள் இருக்கின்றன என்பது தெரியாதிருந்தது; அது ஒரு காலக்கட்டம். பின்னர் ஒரு கால கட்டத்தில் ஒவ்வொரு ஊரிலிருப்பவர்களும் தங்கள் ஊரைப் போல் உலகில் வேறு பல ஊர்களும் இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டனர். ஆயினும் ஓர் ஊரில் இடம் பெறும் சம்பவங்கள் பக்கத்து ஊருக்குத் தெரியாதிருந்த நிலை; காலகட்டம்.
பிராணிகளில் பிரயாணம் செய்யும் அளவு முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர், பக்கத்து ஊர்களில் இடம் பெறும் நிகழ்ச்சிகள் உடனடியாகத் தெரிய முடியாமல் இருந்தாலும், காலம் தாழ்ந்து அறிந்து கொள்ளும் நிலைக்கு முன்னேறினார்கள். இப்படி படிப்படியாக முன்னேறி இன்றை விஞ்ஞான யுகத்தில், ஒரு காலத்தில் ஒரு சிற்றூரே உலகமாக இருந்த நிலைமாறி இன்று உலகமே ஒரு சிற்றூரின் நிலைக்கு,ஏன்? ஒரு கையடக்கத்தில் இருப்பது போல் முன்னேறிவிட்டது.
ஆனால் இது மனிதனின் முன்னேற்றம் என்று கூறுவதுதான் அறிவீனமாகும். மனிதன் தனக்கு வெளியேயுள்ள பொருள்கள் அனைத்திலும் பாடுபட்டான்; கடுமையாக உழைத்தான்; தனது மூளையைக் கசக்கினான். அதன் பலன் அவன் பாடுபட்ட அனைத்துப் பொருள்களும் அபரிமிதமான , ஆச்சரியப்படத்தக்க வளர்ச்சியைக் கண்டன. மனிதனுக்கு வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சியை தனது வளர்ச்சியாக மனிதன் நினைப்பது மடமையல்லவா?
இப்போது அன்றிருந்த ஒரு பொருளின் நிலையோடு இன்றிருக்கும் அதே பொருளின் முன்னேற்றத்தை- வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்ப்பது போல், அன்றிருந்த மனிதனோடு இன்றைய மனிதனின் முன்னேற்றத்தை வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்ப்போம். அன்றிருந்த மனிதன் படிப்பறிவற்றவனாக, எழுத்தறிவு அற்றவனாக ஏன்? இன்றைய மனிதன் கூறும் நாகரீகம் அற்றவனாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் மனிதனாக இருந்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. மனிதனுக்குரிய மனிதப் பண்புகள் நிறைவாகவே அவனிடம் காணப்பட்டன. திடகாத்திரமான, ஆரோக்கியமான உடலைப் பெற்றிருந்தான். அதிகமான நினைவாற்றலைப் பெற்றிருந்தான். கூர்மையான பார்வையுடையவனாக இருந்தான். களைப்பில்லாமல் நீண்ட தூரம் நடக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தான். நீண்ட வயதுடையவனாக இருந்தான். இன்று மனிதனைத் தாக்கும் பெருங்கொண்ட நோய்கள் அன்றிருந்ததாக வரலாறு இல்லை.
ஆம்! அன்று மனிதன் பிக்கல், பிடுங்கல் இல்லாத அமைதியான, ஆரோக்கியமான, சந்தோசமான வாழ்க்கை வாழ்ந்தான். மனிதன் தன்னில் பாடுபடுவதை மறந்து தனக்கு வெளியேயுள்ள பொருள்களில் பாடுபடுவதை பெரும் சாதனையாகக் கொண்டு அவற்றில் முனைந்ததால் அந்தப் பொருள்கள் அதிசயத்தக்க அளவில் முன்னேறின.
மண்ணின் கீழே இருந்த இரும்பு மற்றும் சில உலோகங்கள் மனிதனின் கடும் உழைப்பால் பல வாகனங்களாக பரிமாண வளர்ச்சி பெற்றன. அதன் விளைவு மனிதன் நடக்கும் ஆற்றலை இழந்தான். அதன் மூலமே பலவித நோய்களை வரித்துக் கொண்டான்.
இப்படி மனிதனின் கடும் உழைப்பின் காரணமாக மனிதனுக்கு வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சி மனிதனை பின்னடையச் செய்தனவே அல்லாமல், மனிதனை முன்னடையச் செய்யவில்லை. உதாரணமாக ஒரு தச்சன் காலையிலிருந்து மாலை வரை ஒரு மரத்தில் கடுமையாக உழைத்தால், அது அழகியதொரு மேசையாக உருவெடுத்து விடும். ஆனால் உழைத்த அந்த மனிதன் மாலையில் கடுமையான சோர்வுக்கு ஆளாகி விடுகிறான். இப்படி மனிதன் தனக்கு வெளியே எந்தப் பொருளில் பாடுபட்டாலும் அந்தப் பொருள் முன்னேறும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்த உழைப்பைச் செலுத்திய மனிதன் அதனால் சோர்வடைகிறான், பின்னடைகிறான் என்பதிலும் ஐயமில்லை.
இப்படி மனிதன் தனக்கு வெளியேயுள்ள பொருள்களில் கடுமையாக உழைத்து அவற்றை முன்னேறச் செய்துள்ளான். அவை மூலம் மனிதன் இவ்வுலகில் சில வசதி வாய்ப்புகளையும் பெற்றிருக்கலாம். ஆயினும் அத்துடன் நில்லாது தன்னளவிலும் பாடுபட்டிருந்தால், அவனும் உண்மையிலேயே முன்னேறி இருக்கலாம். ஆனால் தன்மீது பாடுபடுவதை மனிதன் மறந்து விட்டான்.
மனிதன் வெளிப்பொருள்களில் பாடுபடுவது கொண்டு ஆகாயத்தில் பறப்பதைக் கற்றுக் கொண்டான். அதையும் தாண்டி விண்ணில் நடப்பதையும் கற்றுக் கொண்டான். ஏன்? நீரில் நடப்பதையும் கற்றுக் கொண்டான். ஆனால் மனிதன் மனிதனாக வாழ மட்டும் கற்றுக் கொள்ளவில்லை. இது அவனுடைய பரிதாபத்திற்குரிய நிலை என்பதை மறுக்க முடியாது. மனிதன் தன்னில் பாடுபட்டு அன்றிருந்த மனிதர்களைவிட குணத்தில், பண்பில், ஒழுக்கத்தில், மனித நேயத்தைப் போற்றிப்பேணி வளர்ப்பதில் முன்னேறி இருந்தால் மனிதனைப் பாராட்டலாம்.
அதற்கு மாறாக இன்றைய மனிதன் அன்றைய மனிதனை விட மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களில் பின்னடைந்துள்ளான். அதிகம் பின்னோக்கிச் செல்ல வேண்டாம். சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த காமராஜ், கக்கன் போன்ற அரசியல்வாதிகளிடம் காணப்பட்ட தொண்டு செய்யும் மனப்பான்மை , அரசியலில் சுய ஆதாயம் அடையும் நோக்கமின்மை, அதனால் வஞ்ச லாவண்யத்துக்கு அடிமையாகாமல் இருந்த நற்பண்பு இவற்றை இன்றைய அரசியல்வாதிகளில் யாரிடமாவது காட்ட முடியுமா? எளிதில் புரிந்து கொள்வதற்கு இதை சுட்டிக்காட்டியுள்ளோம்.
இன்று பகுத்தறிவு மனிதனிடம் மிகைத்துக் காணப்படுவது ஐயறிவு பிராணிகளிடம் கூட காணப்படாத கேடு கெட்ட நிலை. போதை, ஆட்டம், பாட்டம், களியாட்டம், சூது, மாது இவை தான் இன்றைய மனிதனின் கேடுகெட்ட நிலை. தான் பிறந்த நோக்கத்தையே மறந்த நிலை. தன் இனத்தையே அதிலும் அப்பாவிகள், குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள் என்று கூட பாராமல் வன்செயல்கள், குண்டுகள் மூலம் ஈவிரக்கம் சிறிதும் இல்லாமல் கொன்றொழிக்கும் மனிதனை மனிதன் என்பதா? மிருகங்களை விட கேடு கெட்ட மிருகம் என்பதா? இந்த கேடு கெட்ட மிருக நிலைக்கு அவர்களை வார்த்தெடுத்தது யார்?
அகிலங்களிலுள்ள அனைத்தையும், மனிதனையும் படைத்து நிர்வகிக்கும் ஏகன் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இடைத்தரகர்களாக கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களை அவதாரங்களாகவும், கடவுள் குமாரனாகவும், கடவுள் நேசர்களாகவும் (அவுலியா) கற்பனை செய்து, அந்தப் போலிக் கடவுள்களை காட்டி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் புரோகிதர்கள் ஒரு பக்கம்; இந்தப் புரோகிதர்களின் தயவில் ஆட்சியைக் கைப்பற்றி பல தலைமுறைகளுக்குச் சொத்து சேர்க்கும் அரசியல் புரோகிதர்கள் மற்றொரு பக்கம், இந்தப் பொய்க் கடவுள்களையும், மதத்தின் பெயராலும், அரசியலின் பெயராலும் மக்களை ஏமாற்றி, சுரண்டிப் பிழைக்கும் எத்தர்களையும், ஏமாற்றுக்காரர்களையும் ஒழித்துக் கட்ட புறப்பட்டுள்ளோம் என்று கூறிக் கொண்டு கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுடன் உண்மையான ஒரேயொரு, இணை துணை இல்லாத, தேவை எதுவும் இல்லாத இறைவனையும் ஓழித்துக் கட்ட முயலும் நாத்திகர்கள்; இந்த மூன்று சாராரும் தான் இன்றைய உலகின் இழி நிலைக்கு காரணமாகத் திகழ்கிறார்கள்.
இந்த மூன்று சாராரின் தவறான போதனை, வழிகாட்டல் காரணமாகத்தான் மனிதன் ஐயறிவு மிருகத்திலும் கேடுகெட்ட நிலைக்கு தாழ்ந்து கொண்டிருக்கிறான். அழிவுப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறான்.
உண்மையில் மனிதன் முன்னேற ஆசைப்படாமல், இவ்வுலகில் மனிதனாக, மனிதப் புனிதனாக, அமைதி, சுபீட்சம், சுகம் அனைத்துடன் இவ்வுலகில் வாழ்வதுடன், மகத்தான பேற்றை அடைய விரும்பினால், அவன் இந்த மூன்று சாரார்களிடமிருந்தும் விடுபட்டாக வேண்டும்.
மதங்களை வைத்து மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் மதப்புரோகிதர்களிடமிருந்து விடபட வேண்டும். தொண்டு செய்வதாகக் கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றி பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்க்கும் போலி அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து விடுபட வேண்டும். கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களை ஒழிக்கப் புறப்பட்டு, ஒரு உண்மைக் கடவுள்களையும் மறுக்கும் நாத்திகர்களின் பிடியிலிருந்தும் விடுபட வேண்டும். மனிதனே மனிதனுக்கு நேர்வழி காட்ட முடியும் என்பது திருடனே திருடனுக்கு நேர்வழி காட்டுவதற்கு ஒப்பாகும்; பரீட்சை எழுதும் மாணவனே கேள்வித்தாள் தயாரிப்பதற்கு ஒப்பாகும்; எனவே படைத்த ஓரே இறைவனை மட்டும் இறைவனாக ஏற்று அவனது இறுதி வழிகாட்டல் நூல் – நெறிநூல் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன்படி நடக்க முன் வந்தால் மட்டுமே மனிதன் மனிதனாக வாழ முடியும்.