- க. குணசேகரன்.
நம் நாட்டின் சாமானிய இந்தியனுக்கும் உதவிட விரும்பாத தேசிய வங்கிகள் சிக்கன நிர்வாக நடவடிக்கை என்ற பேரில் 40% மக்களுக்கு வங்கிச் சேவையைத் தர மறுத்தன. இதன் விளைவாக ஆங்காங்கே தொண்டு நிறுவனங்கள் புற்றீசல் போல தோன்றி கிராம அளவில் பெருகியிருக்கும் வறுமையை விரட்டப் போகிறோம் என்று கூறி கிராமப்புறங்களில் நிதியுதவிகளை அளித்து தொழில் செய்ய உதவின. கூடுதலாக நிதி தேவைப்பட்டபோது அவை வங்கிகளை அணுகின.
வங்கிகள் தங்கள் விதிமுறைப்படி முன்னுரிமைக் கடன் வழங்கும் திட்டங்களின் அடிப்படையில் தொண்டு நிறுவனங்களுக்கு உதவின. வங்கி வழங்கிய நிதி எந்த பிசிறுமில்லாமல் முறையாக வங்கிகளுக்குத் திரும்பின. தனியார் பெரிய நிறுவனங்கள் பெறும் கடன்கள் முறையாகத் திரும்பாமல் வாரக் கடன் பட்டியலில் சேர்ந்து வங்கிகளை சங்கடத்தில் ஆழ்த்திய நிலையில் தொண்டு நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் நடந்த சிறு கடன் பரிவர்த்தனை சிக்கலில்லாமல் நடந்ததால் பல தேசிய வங்கிகளும் முதலீடு செய்ய முன்வந்தன.
பின்னர் அதே தொண்டு நிறுவனங்கள் வங்கிகளிடம் குறைந்த வட்டியில் பணம் பெற்று வட்டியை கூடுதலாக்கி ஏழைகளுக்கு உதவின. தொண்டு நிறுவனங்களின் கூடுதல் வட்டி, முறையான பரிவர்த்தனையால் கணிசமான லாபம் தொண்டு நிறுவனங்களுக்குக் கிடைத்தன.
சுரண்டல் பூதங்கள் எப்போதும் திடீரென்று பாய்ந்து பிடுங்க மாட்டார்கள். சுற்றி நடக்கும் நிகழ்வை கூர்ந்து பார்ப்பார்கள். எதில் உழைப்பு இல்லாமல் சுளையாக லாபம் பார்க்க முடியும் என்பதை நன்கு அறிந்து கொண்டு சமயம் வரும்போது கொக்கு கொழுத்த மீனுக்கு காத்திருப்பது போல் காத்திருந்து அள்ளிக் கொள்வார்கள்.
தொண்டு நிறுவனப் போர்வையில் பல தனியாரும் மக்கள் சேவைக்கு வருவதாகத் தங்களை பதிவு செய்தனர். சேரிகள், ஏழைகள் வசிக்கும் காலனிகள், வங்கிச் சேவை வாசனையே இல்லாத விவசாய கிராமங்கள் என தங்கள் ஆதிக்கத்தைப் பரப்பினர். அரசிடமிருந்து குறைந்த வட்டியில் நிதியைப் பெற்று அதிக வட்டிக்கு ஏழைகள் மீது கடன்களைத் திணித்தனர். தேடித்தேடி கடன் தந்தனர். இனிக்க, இனிக்கப் பேசினர். மக்களும் எந்தவித சிக்கலும் இல்லாமல் சுலபமாக நிதி கிடைத்ததால் திரண்டு நின்று கடன் வாங்கினர். பெண்களை குழுக்களாகத் திரளச் சொன்னார்கள். இதற்கு சுய உதவிக் குழுவென்றும் பெயரிட்டனர். இந்தியாவில் நிதி தொடர்பான பரிவர்த்தனைகள் எதுவானாலும் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்திட வேண்டும். ஆனால் ரிசர்வ் வங்கி எதனையும் கண்டு கொள்ளவில்லை. வங்கிகளும் தங்களிடம் குறைந்த வட்டிக்கு பணம் பெற்று அதிக வட்டிக்கு தரும் நிறுவனங்களை கண்டிக்கவில்லை.
ஏழைகள் உழைப்பு முழுவதும் வட்டி கட்டவே பயன்பட்டது. வாங்கிய அசல் தீர்ந்த பின்னும் வட்டி கட்ட வேண்டிய கொடுமை ஏழைகளுக்கு ஏற்பட்டது. கடன் கட்ட இயலாதவர்களின் வீட்டுக்கதவுகள் நடு இரவில் தட்டப்பட்டன. ஆடு, மாடு, கலப்பை எந்திரம் பறிமுதலானது. மானத்துக்கு அஞ்சிய சாமானியர்கள் சாவைத் தவிர வேறு வழியில்லை என கொத்துக் கொத்தாக மடிந்தனர். இதை எழுதும் ஐந்து தினங்களுக்கு முன்பு கூட ஆந்திராவில் ஏழைகளான கணவன் மனைவி தங்களின் ஏழு வயது, ஐந்து வயதுள்ள இரு பெண் குழந்தைகளை அநாதையாக்கிவிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
நாட்டில் 24 மாநிலங்களில் கந்துவட்டியை விட மோசமான சுரண்டல் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் தமிழகம் உட்பட இயங்கிச் சுரண்டுகின்றன. இவற்றால் 22,700 கோடி ரூபாய் இத்தொழிலில் புரள்கிறது. மாதந்தோறும் ஆயிரக்கணக்கான கோடிகள் வட்டியாகச் சுரண்டப்படுகின்றன.
மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் 10,000 பணம் தந்தால் அதை 52 தவணைகளில் கூட்டு வட்டியோடு இரக்கமில்லாமல் கறக்கின்றனர். அசல் குறைய குறைய வட்டி குறைய வேண்டும். ஆனால் இங்கே அசல் குறையும். ஆனால் வட்டி மட்டும் நிலையாகப் பெறப்படும்.
10,000-திற்கு 3,500 ரூபாய் முதல் 5,000 வரை தமிழகத்திலேயே வட்டியை சுரண்டுகின்றனர். இதுபோன்ற மோசடி சுரண்டல் திட்டங்களில் பெண்களை சேர்த்து மயக்கிட அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டி வேலை செய்கின்றனர்.
மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் சுரண்டல் ஆந்திராவில் அதிகரித்ததின் காரணமாக அங்கு ஏராளமான தற்கொலைகள் நிகழ்ந்ததால் இந்த நிதி நிறுவனங்களின் சுரண்டல் வெளி உலகிற்குத் தெரிந்தது. உடனடியாக அங்குள்ள அரசு புரிந்து கொண்டு சுதாரித்து கடந்த 15.10.2010 அன்று மைக்ரோ பைனான்ஸ் அனுமதி பெற்ற நிறுவனங்கள் மற்றும் அனுமதி பெறாமல் நடக்கும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாணை வெளியிட்டது.
வட்டி விகிதம், வசூலிக்கும் வழிகள், செயல்பாடு, கடன் வழங்கிய விவரங்கள் பலவற்றையும் அனுப்பி உடனடியாக அரசு ஒப்புதல் பெற வேண்டும் எனப் பல நிபந்தனைகள் அந்த அரசாணையில் இருந்தன. சுரண்டல் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் அதிர்ந்து போயின. ஏனென்றால் சென்ற நிதியாண்டு கால அளவில் வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் இந்திய ஏழைகளின் உழைப்பை வட்டியாக உறிஞ்சிட எஸ்.கே.எஸ். நிறுவனத்தின் சகோதர நிறுவனமான சான்ட்ஸ்டேன் கேப்பிடல், எஸ்.வி.பி. இந்தியா கேப்பிடல் அண்ட் கிஸ்மத் கேப்பிடல் முதலிய நிறுவனங்களில் மட்டும் 75 மில்லியன் டாலரை போட்டுள்ளன. இதைப் போலவே உஜ்ஜிவன் பைனான்ஸ் சர்வீசில் 18.47 மில்லியன் டாலரையும், ஈக்கிடஸ் மைக்ரோ பைனான்சில் 11.44 மில்லியன் டாலரும் தமிழகத்தில் திருச்சியிலிருந்து இயங்கும் கிராம விடியல்!? நிறுவனத்திற்கு மைக்ரோ வெஸ்ட் எனும் அயல்நாட்டு நிறுவனம் 4.25 மில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளது. ஹேண்ட் இன் ஹேண்ட், பெல்ஸ்டார் இன்வெஸ்ட்மென்ட் முதலிய சென்னை நிறுவனங்களுக்கு இன்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன் 17.5 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன.
ஆசை ஆசையாக இதுபோல வட்டி சுருட்ட நினைக்கும் நினைப்புக்கு ஆந்திராவின் அரசாணை தடை விதித்துள்ளதால் தற்போது இவைகள் தமிழகத்திற்குள் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் எட்டாயிரம் டாஸ்மாக் கடைகள் ஆண்களின் ஊதியத்தை உறிஞ்சி விடுவதால் அப்பாவி குடும்பப் பெண்கள் வீட்டைப் பராமரிக்க இதுபோன்ற சுய உதவிக் குழுக்களில் சேர்கின்றனர். ஆனால் பாவம்! தங்கள் வீட்டு ஆண்களை டாஸ்மாக் போலவே சுரண்டும் மைக்ரோ பைனான்ஸ் வலைக்குள் இவர்களும் சிக்குகின்றனர்.
இதுபோல் கூடுதல் வட்டி, கூட்டு வட்டி, மிரட்டல் வட்டி, பொருள் அபகரிப்பு, அவமானம், தற்கொலை, அரசாணை, ஆய்வுக்குழு என நடக்க என்ன காரணம்?
கடைக்கோடி இந்தியனையும் கைதூக்கிவிட வேண்டும் என்ற உணர்வு மரத்துப் போன தேசிய வங்கி நிர்வாகங்கள், அவற்றின் சோம்பல் பிடித்த நிர்வாகிகள், இவர்களுடன் வரும் கேட்டை உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை எடுக்காமல் தூக்கத்தில் உள்ள ரிசர்வ் வங்கி நிர்வாகம், நாட்டின் நிதிச் செயலகம், மாநிலமெங்கும் உள்ள நிதிச் செயலகங்கள், சமூக நலத்துறைகள் பலவும் உண்மையான கடமை உணர்வுடன் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் செயல்படுவதால்தான் இந்த நிகழ்வுகள் மக்களை கொடூரமான கந்துவட்டி வலைக்குள் சிக்க வைக்கின்றன. சமூக நோக்கு இல்லாமல் வெறும் வட்டி மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள பிணந்தின்னிகளுக்கு இந்திய சோம்பல் நிர்வாகங்கள் ஊக்க மருந்தாக உள்ளன. மக்களாக தங்கள் சகிப்புத் தன்மையை உதறினால்தான் விடிவு பிறக்கும்.
-நன்றி சமூகநீதிமுரசு