தே.மு.தி.க.,வுடன் அ.தி.மு.க., கூட்டணியா…??? ஜெ.,பரபரப்பு பேட்டி
சென்னை : “”தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை,” என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்தார்.
அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், ஜெயலலிதா, நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
* நடிகர் கார்த்திக் உங்களை சந்தித்து அ.தி.மு.க., விற்கு ஆதரவு அளித்துள்ளார். வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறீர்களா?
சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. கார்த்திக் தலைமையில் இயங்கும் கட்சியுடன் பேச்சுவார்த்தை நேற்று முடிந்தது. அவரது கட்சி, அ.தி.மு.க., கூட்டணியை ஆதரிக்கும். மற்ற கட்சிகளுடன் முடிவெடுத்தபின், ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும்.
* “ஸ்பெக்ட்ரம்’ அலைவரிசை ஒதுக்கீட்டில் தவறு நடக்கவில்லை என, கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளாரே?
சி.ஏ.ஜி., என்பது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. அப்படியிருக்கும் போது, மத்திய அமைச்சர் ஒருவர், தான் சார்ந்த அரசின் சி.ஏ.ஜி., அறிக்கையை தவறானது எனக் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல; கண்டனத்துக்குரியது; அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான செயல். சுப்ரீம் கோர்ட், சி.ஏ.ஜி., அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. தொலைத்தொடர்புத் துறை அமைச்சரின் தவறான விமர்சனம், சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் செயல்.
* சமீபகாலமாக, காங்கிரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இதன் மூலம் காங்கிரசுடன் கூட்டணிக்கான கதவு மூடப்பட்டு விட்டதாக கருதுகிறீர்களா?
மக்கள் விரோத நடவடிக்கையில் காங்கிரஸ் அரசு ஈடுபடும்போது, அதை எதிர்த்து கருத்துக்களை தெரிவிக்க நாங்கள் ஒரு போதும் தயங்கியது இல்லை.
* அப்படியென்றால் கதவு மூடிவிட்டதாக எடுத்துக் கொள்ளலாமா?
நான் எப்போது அ.தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி என தெரிவித்திருக்கிறேன்?
* மாற்றுக் கட்சியிலிருந்து அ.தி.மு.க.,வில் இணைந்தது எத்தனை பேர்? சட்டசபை தேர்தலில் எதை முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்யப் போகிறீர்கள்?
ஏழாயிரம் மாற்றுத்திறனாளிகள் சேர்ந்துள்ளனர். அவர்களால் வர முடியாததால், அவர்களின் சார்பில், 50 பிரதிநிதிகள் இணைந்துள்ளனர். மாற்றுக் கட்சிகளிலிருந்தும் இணைந்துள்ளனர். அ.தி.மு.க.,வினால் தான் அடுத்த ஆட்சி அமைக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மணல், கிரானைட் கொள்ளை காணப்படுகிறது. மக்கள் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லை. பட்டப்பகலில் கொலை நடக்கிறது. காவல் துறை, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. மக்கள் நரக வேதனையில் தவிக்கின்றனர். இருளில் மூழ்கிக் கிடக்கின்றனர். யாராவது கை தூக்கி விடமாட்டார்களா, இருளிலிருந்து காப்பாற்றி வெளிச்சத்திற்கு அழைத்து வரமாட்டார்களா, பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு நலமாக வாழ வைக்க மாட்டார்களா என, ஏங்குகின்றனர். இதைத் தான் மக்கள் முன் எடுத்துச் சொல்வோம். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க அ.தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும் என, மக்கள் விரும்புகின்றனர்.
* அ.தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க., வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
“நோ கமென்ட்ஸ்!’
* நடிகர் விஜய் உங்களை சந்திப்பாரா? அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவாரா?
விஜயின் தந்தை, என்னை சந்தித்தார். மற்றதைப் பற்றி அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.
* கடந்த ஆண்டில் ஆறு முறை பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது பற்றி?
நான் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளேன். பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து, அகில இந்திய அளவில் போராட்டம் நடத்துவது குறித்து நாளை (இன்று) டில்லியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், அ.தி.மு.க., – தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.
* தி.மு.க., அரசு இலவச கலர், “டிவி’க்களை வழங்கியுள்ளது. தற்போது கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் அறிவித்துள்ளது. இது, தி.மு.க.,விற்கு சாதகமா அமையும் என கருதுகிறீர்களா?
இதுவரை அறிவித்த திட்டங்களாக இருந்தாலும் சரி, புதிதாக அறிவிக்கப் போகும் திட்டங்களாக இருந்தாலும் சரி, எதையும் மக்கள் ஏற்கப் போவதில்லை. தி.மு.க., அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அரசை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
தற்போதைய பதிவுகள்
Subscribe to:
Post Comments (Atom)