தனி மனிதன் வாழ்விலிருந்து, குடும்பம், சமுதாயம், ஊர், நாடு, உலகம் என அனைவரின் வாழ்விலும் இரண்டறக் கலந்து உறவாடி வருவது காசு, பணம் என்ற பொருட் செல்வங்களாகும். அவரவரிடமுள்ள பொருட் செல்வத்தினால் அவனுக்கு, குடும்பத்திற்கு, சமுதாயத்திற்கு, ஊருக்கு, நாட்டிற்கு சிறப்பு ஏற்படுவதாக உலகியல் ரீதியாக கணிக்கப்படுகிறது. பொருட் செல்வத்தின் ஆதாரத்தில் தனி மனிதன் முன்னேற்றம் முதல் உலக முன்னேற்றம் வரை கணிக்கின்றனர்.
பணமில்லாதவன் பிணம்:
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே;
பணம் பத்தும் செய்யும்;
பணம் பாதாளம் வரை பாயும்;
பொருளில்லாருக்கு இவ்வுலகமில்லை;
இல்லாளை இல்லாளும் , ஈன்ற பெற்றாளும் வேண்டாள்;
போன்ற பழமொழிகள் செல்வத்தின் முக்கியத்துவத்தையும், சிறப்பையும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
ஒவ்வொரு மனிதனும் விபரம் தெரிந்த நாள் முதல் அவனது கடைசி மூச்சு பிரியும் வரை தனனால் இயன்ற அளவு பொருட்செல்வத்தை சேகரிப்பதிலும், அதன் மீது ஆழ்ந்த பற்று வைப்பதிலும், அதனைத் தனது வளமான வாழ்க்கைக்கு, உலக ஆசாபாசங்களுக்கு செலவழிப்பதிலும், தான் சம்பாதித்தது குறைந்து விடாமல் வளர்வதற்கான வழிவகைகளைத் தேடுவதிலும் கண்ணும் கருத்துமாய் இருக்கிறான். ஏனெனில், அவனிடமுள்ள பொருட் செல்வத்தை வைத்தே இன்றைய சமுதாயத்தில் அவனுக்கு மதிப்பு, மரியாதை கிடைப்பதாக நினைக்கிறான். மனிதனின் மனோபாவம் இப்படியிருக்க…..
இஸ்லாத்தைத் தவிர மற்ற எல்லா சமயங்களும், மதங்களும் பொருட் செல்வத்தின் மீது ஆசை வைப்பதையும், சேகரிப்பதையும், அதன் (பெண், பொன், பொருள்) மூலம் இன்ப, துன்பங்கள் அனுபவிப்பதையும் சிறப்பாகக் கணிப்பதில்லை. எல்லா மதத் தலைவர்களும், சித்தர்களும், குருக்களும் பொருட்செல்வம், உலக ஆசாபாசங்கள் இறைவழியான ஆன்மீக சக்தியைப் பெற உலகியல் ஆசைகளை விட்டுத்துறவறம் பூணுவதே சிறப்பு என்கின்றனர். அச்சமயங்களில் (மதங்களில்) உலக ஆசைகளை விட்டு, தனித்திருந்து, பசித்திருந்து, விழித்திருந்து, பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடித்து, இறைதியானத்தில் ஈடுபடுபவர்களையே சிறந்த பக்திமானாக, ஆன்மீக சக்தி பெற்றவராக, பின்பற்றத்தகுந்த மதத்தலைவராக, வழிகாட்டியாக தேர்ந்தெடுக்கின்றனர். சிலர் உலக செல்வங்களைச் சேகரிப்பதையும், அதை அனுபவிப்பதையும் பாவமாகவும் கருதுகின்றனர்.
பசி, பினி, நோய், மூப்பு போன்ற இயற்கை உபாதைகளுக்குக் காரணமும் உலக ஆசைதான். ஆசையை விட்டால் முக்தி பெறலாம் என்று அறிவுரை கூறுவோரும், அதனைத் தங்களது மதத்தின் முக்கிய கோட்பாடாக கொண்டிருப்போரும் உண்டு. அவ்விதம் முக்தி பெற தனது பேராசையை விட்டு, மணந்த மனைவியைப் பிரிந்து, பிரியமான குழந்தையை ஒதுக்கி, உலக ஆசைகளை ஓரம்கட்டி, காட்டிற்குச் சென்று இறை தியானத்தில் முக்தி பெற்றதாக கூறப்படும் சரித்திர சான்றுகளும் நம்மிடமுள்ளன. இத்தகைய சரித்திரத் துணுக்குகள் மற்ற மதத்திலன்றி நமது இஸ்லாத்திலுமிருப்பதாகக் கூறி அங்ஙனம் வாழ்ந்த சில ஸுபிகளின் சரித்திரங்களையும் காணலாம். இக் கோட்பாடு நமது இஸ்லாமிய கொள்கையுடன் எந்த அளவு வேறுபட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
நமது முதல் தந்தை ஆதம்(அலை) அவர்கள் தவறு செய்து, அல்லாஹுவால் பூமியில் இறக்கப்பட்ட போது “உங்களுக்கு பூமியில் தான் வசிக்க இடமுண்டு; அதில் சிறிது காலம் வரையில் சுகமும் அனுபவிக்கலாம்” (அல்குர்ஆன் 2:36)எனக்கூறி அனுப்பினான். இப்புவியுலக வாழ்வில் சுகமுண்டு; அதனைச் சிறிது காலம் அனுபவிக்கலாமெனக் கூறிய அல்லாஹ் என்னென்ன ஏற்பாடுகளை பூமியில் செய்தான் என்பதனையும் அவனே கூறுவதைப் பாரீர்:-
அவன்தான் (அல்லாஹ்) பூமியிலுள்ள யாவற்றையும் உங்களுக்காக (மனிதனுக்காக) படைத்தான் (அல்குர்ஆன் 2:29)
வானங்களிலும், பூமியிலுள்ள யாவற்றையும் அவன் (அல்லாஹ்) தன் அருளால் (நன்மை பயக்க உபயோகமாகும்படி) கட்டுப்படுத்தித் தந்தான். சிந்தனையாளர்களுக்கு இதில் பல படிப்பினைகள் உள்ளன. (அல்குர்ஆன் 45:13)
பெண்கள், மக்கள், பொன் வெள்ளிக் குவியல்கள், உயர்ந்த குதிரைகள், (ஆடு,மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகள், விவசாய வேளாண்மை ஆகியவற்றின் மீது ஆழ்ந்த பற்றுக்கொள்வது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. இவை(யாவும்) இவ்வுலக வாழ்வின் இன்பங்களே! (அல்குர்ஆன் 3:14)
ஆதமுடைய மக்களே! உங்களது மானத்தை மறைக்கக்கூடிய ஆடையையும், அலங்காரத்தையும் நிச்சயமாக நாம் அருள் புரிந்தோம். (அல்குர்ஆன் 7:26)
மேலே கூறிய இறைவசனங்களில் அல்லாஹ் இவ்வுலக வாழ்வில் பூமி, வானங்களிலுள்ளவைகளை நமக்காக படைத்து, அதில் நாம் அனுபவிக்க பற்பல வசதிகளையும், ஆடை, ஆபரணங்களையும் அருட்கொடையாக அளித்து, அதனை கட்டுப்படுத்தி வாழும் திறமையையும் தந்து, இச்செல்வங்களில் நாம் பற்று பாசம் வைப்பதையும், அழகாக்கியிருப்பதை அறியலாம். அல்லாஹுவால் கொடுக்கப்பட்ட, அருட்கொடையாக அளிக்கப்பட்ட இச்செல்வங்கள் எமக்கு வேண்டாமெனக் கூறவோ, அதனை அவமதித்து உதறித்துறந்து செல்லவோ அல்லாஹுவின் நல்லடியானுக்கு உரிமையில்லை. எனவேதான் உலகச் செல்வங்களை பெண்,பொன், பொருள் ஆசைகளை துறந்து துறவியாக போகிறவர்களை நோக்கிக் கேட்கும்படி அல்லாஹ் நமக்கு ஆணையிடுகிறான்.
(நபியே!) “அல்லாஹ் தன் நல்லடியார்களுக்கு (இவ்வுலகில் செல்வச் செழிப்பால்) வெளியாக்கியுள்ள (ஆடை) அலங்காரத்தையும், தூய்மையான(உயர்ந்த) ஆகாரத்தையும்(ஹராமென) தடுப்பவன் யார்? என்று கேட்பீராக!
அது இவ்வுலக வாழ்வில் இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு (ஆகுமானதே! இன்னும்) மறுமையில் (அவர்களுக்கு மட்டுமே) சொந்தமானது, என்று பதிலளிப்பீராக! அறிவுடையோருக்கு (நம்) வசனங்களை இவ்வாறு விளக்குகிறோம். (அல்குர்ஆன் 7:32)
இவ்விதம் இவ்வுலக பொருளனைத்தையும், அவனது அருட்கொடையாக நமக்காப் படைத்த அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? என்பதை அல்லாஹ்வே கூறுகிறான்.
எனக்கு வழிபட்டு என்னை வணங்குவதற்காகவேயன்றி நாம் ஜின் வர்க்கத்தையும், மனித வர்க்கத்தையும் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)
“அனைத்தையும் படைத்துன் உனக்காக, உன்னைப் படைத்தேன் என்னை வணங்க” என்ற கருத்தை இரத்தின சுருக்கமாக கூறியிருப்பதைப் பாருங்கள். அல்லாஹ்வின் அருட்கொடையாக உலகச் செல்வங்களை அவன் கூறிய, நபி(ஸல்) காட்டிய வழியில் ஈட்டி, செலவழித்து வாழ்வதும், அதற்கென அல்லாஹ்வின், தூதரின் ஆணைப்படி நடப்பதுமே அவன் நமக்களித்த இவ்வுலக (அற்ப) சுகத்திற்கு நாம் காட்டும் நன்றியாகும்.
அல்லாஹுவால் அருளப்பட்ட இவ்வுலக ஆசாபாசங்களில் பங்கெடுத்து அதே நேரத்தில் அல்லாஹுவை மறந்து விடாமல் அவனையும் நினைத்து வாழ்பவனே நபி(ஸல்) வழி நடப்பவன் என்பதை கீழ்க்காணும் ஹதீஸ் நமக்கு தெளிவாக்குகிறது.
ஒரு தடவை மூன்று நபர்கள் நபி(ஸல்) அவர்களின் இல்லம் சென்று நபியவர்களின் தினசரி வணக்கங்கள் எப்படியிருந்தது என வினவினார்கள். நபியவர்களின் இறைவணக்கங்கள் சாதாரணமாக, நடுநிலையாக இருப்பதை அறிந்த அம்மூவரும் நபி(ஸல்) அவர்களின் முன், பின் பாவங்களனைத்தும் மன்னிக்கப்பட்டு விட்டன. எனவே அவர்களது வணக்க வழிப்பாடுகள் நடுநிலையாக இருக்கலாம். அவர்களுடன் ஒப்பிட்டு நாம் அங்ஙனம் வணங்குவது மிக மிக குறைவாகும் என நினைத்து ஒருவர் ” நான் இனி இரவு முழுவதும் (விழித்திருந்து நின்று) வணங்குவேன் என்றார். இரண்டாமவர் இடைவெளியின்றி பகலில் (பசித்திருந்து) நோன்பு வைப்பேன் என்றார், மூன்றாமவர் இனி நான் மங்கையின்பம் காணவோ, மணமுடிக்கவோ மாட்டேன் என்றார். இவர்கள் இவ்விதம் கூறியதைக் கேட்டுக் கொண்டு வீட்டினுள் நுழைந்த அருமை(நபி)ஸல். நீங்கள் இன்னின்ன (நற்)செயல்கள் செய்வதாக கூறினீர்கள் அல்லவா? நிச்சயமாக உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன். அவனுக்குரிய கடமைகளைச் செய்கிறேன். நான் நோன்பு வைக்கிறேன். வைக்காமலுமிருக்கிறேன். இரவில் நின்று வணங்குகிறேன், உறங்கவும் செய்கிறேன். நான் மணமுடித்து இருக்கிறேன். இது எனது வழி. எவனொருவன் இவ்வழி நடக்கவில்லையோ அவன் என்னைச் சார்ந்தவனில்லை” என்றார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக்(ரழி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
“மார்க்க வணக்க வழிபாடுகளில் அளவுக்கதிகமாக அபரிமிதமாக செய்பவன் நாசமாவான்” என்று மூன்று தடவைகள் நபி(ஸல்) கூறினார்கள் “ஹலக்கல் முத்தநத்திவூன்”
அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊது(ரழி) ஆதாரம் : முஸ்லிம்
மேற்கண்ட நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளிலிருந்து “தனித்திருந்து, விழித்திருந்து, பசித்திருந்து துறவற வாழ்வு வாழ்வது தடுக்கப்பட்டுள்ளதை அறியலாம். ஒரு தடவை நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் நுழைந்த போது இரு தூண்களுக்குமிடையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். இது என்ன கயிறு? என நபி(ஸல்) அவர்கள் வினவ அவரது அருமைத் தோழர்கள், இது (தங்களது அன்பு மனைவி) ஜைனப்(ரழி) கட்டி வைத்துள்ளார்கள். அவர்கள் தொழும் போது அசதி ஏற்பட்டால்(சாய்ந்து) ஓய்வெடுப்பதற்காக கட்டியுள்ளனர் என்றார்கள். இதனைச் செவியுற்ற நபி(ஸல்) அக்கயிறை அறுத்தெறியுங்கள்; உங்களால் முடிந்தவரை தொழுகுங்கள், அசதி ஏற்பட்டால் (சென்று உறங்கி) ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.
அறிவிப்பாளர்: அனஸ்(ரழி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
இறை வணக்கங்களின் பெயரால் நபி(ஸல்) அவர்கள், உம்மத்தினர் தமது உடலை வருத்திக் கொள்வதையும் வரவேற்கவில்லை என்பதை அறியலாம். இவ்விதம் ஒவ்வொருவரும் உடல், உள்ள செளகர்யத்துடன், உலகியல் இன்பங்களை அனுபவித்துக் கொண்டு, நன்றாக உண்டு, உறங்கி வாழ்வதுடன் இறைவனை இடைவிடாமல் நினைப்பதையே நல்ல இறைவணக்கமாக நபி(ஸல்) காட்டித் தந்துள்ளனர். அதுவே அல்லாஹ் நமக்களித்த உலக செல்வங்களுக்கு நாம்தரும் இறை நன்றியுமாகும். அல்லாஹ் நம்மை நன்றியுள்ள அடியார்களாக இருக்க அருள்புரிவானாக. ஆமீன்.