திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Saturday, February 5, 2011

'சமூகத் தீமைகள்' ஒரு பார்வை!

,

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ'
 
மனிதனின் அத்தியாவசியத் தேவையான உணவிற்காக, வயல்வெளியில் நடப்படும் தானியங்களின் வளர்ச்சியைக் கெடுக்க, அழையா  விருந்தாளியாக வந்து முளைக்கும் களைபோல, மனிதனின் இம்மை-மறுமை வாழ்வை நாசமாக்க, 'சமூகத் தீமைகள்' சங்கற்பமேற்று, மனித வாழ்வில்  சதிராட்டம் ஆடுகின்றன. இதில் வேதனை என்னவெனில், இத்தகைய சமூகத் தீமைகளை சக தோழனாக ஏற்று, மனிதன் அரவணைத்து ஆபத்தை  உணராமல் அன்றாட வாழ்வை  அழிவுக்குள்ளாக்கி  கொள்கிறான்  என்பதுதான். இத்தகைய சமூகத் தீமைகள் ஏராளம் உண்டெனினும், அதில் பிரதானமாக, வட்டி-வரதட்சனை-தீண்டாமை-ஆபாசம்-லஞ்சம்-ஊழல்-மது-புகையிலை-
சுரண்டல் ஆகியவை உள்ளன.
இவைகளிப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில், 'சமூகத்தீமைகள்' எதிர்ப்பு மாதம் பிப்-2011 என அறிவித்து, மக்களைக்  காக்க புறப்பட்டுள்ளது சமூக நலனில் அக்கறை கொண்ட இந்திய தவ்ஹீத்ஜமாஅத்.
 இத்தகைய சமூகத்தீமைகளின் விளைவை சுருக்கமாக காண்பதற்கு முன்னால், இறைத்தூதர்[ஸல்] அவர்களின் இனியமொழியைப்  பார்ப்போம்;
 
''அல்லாஹ் தன் வேதத்தில் எவற்றை  ஆகுமாக்கியுள்ளானோ அவை அனுமதிக்கப்பட்டதாகும். எவற்றை தடுத்துள்ளானோ அவை தடை செய்யப்பட்டதாகும். எவை பற்றி அவன் ஒன்றும் கூறவில்லையோ அவை சலுகையாகும். அல்லாஹ் அளித்திருக்கும் சலுகையை ஏற்றுக் கொள்ளுங்கள். நிச்சயமாக! அல்லாஹ் எதையும் மறப்பவனல்ல என்று கூறிவிட்டு, 'உமது இறைவன் எதையும் மறப்பவனல்ல'[19 ;64 ] என்ற வசனத்தை  ஓதிக்காட்டினார்கள்.
[நூல்; ஹாகிம்]
 
மேற்கண்ட பொன்மொழி, அல்லாஹ் தனது கூறிய ஏவல்-விலக்கல்களை மனிதன் கடைபிடிக்கவேண்டும் என நமக்கு உணர்த்துகிறது. அதுமட்டுமன்றி, '[இத்தூதர்] தூய்மையானவற்றை அவர்களுக்கு ஆகுமாக்குகிறார்; தூய்மைஇல்லாதவற்றை  அவர்களுக்கு தடை செய்கிறார்'[7 ;157 ] என்று கூறி, மனிதர்கள் மீது ஒன்றை ஆகுமாக்குவதற்கும், தடுப்பதற்கும், நபியவர்களுக்கு அதிகாரமுண்டு என்று அல்லாஹ் கூறுகின்றான்.எனவே நாம் செய்யும் செயல்கள் சிறியதோ- பெரியதோ அவை, அல்லாஹ்வின் வேதத்திற்கும்- அல்லாஹ்வின் தூதரின் வழிமுறைக்கும் உகந்ததா என்பதை மனித சமூகம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளது. அவ்வாறு சிந்திக்காததின்  விளைவே, சமூகத்தீமைகள்  சமூகத்தை ஆட்கொண்டதற்கு முதற்காரணமாகும். இந்த அடிப்படையை மனதில் கொண்டு சில தீமைகளை இப்போது அலசுவோம்.
 
வட்டி;
வட்டி என்பது மிகப்பெரிய பொருளாதார சுரண்டல் என்பது யாவரும் அறிந்த உண்மையே. மாதவட்டி- நாள்வட்டி-மீட்டர்வட்டி- சூப்பர்பாஸ்ட்  வட்டி என பல்வேறு பெயர்களில் பரிணமிக்கும் இந்த வட்டி மனிதனை சுரண்டுவதால்,உலக வங்கியில் வட்டிக்கு கடன் வாங்கி அரசு நடத்தும் அரசாங்கமே, கந்துவட்டிக்கு எதிராக சட்டம் கொண்டு வரும் அளவுக்கு கொடுமையான தீமையாக உள்ளது. இந்த வட்டி ஏழைகளுக்கு ஒரு உயிர்க்கொல்லி நோய் போன்றதாகும். மேலும், சிலர் பிறர் மெச்சவேண்டும் என்பதற்காக ஆடம்பர பொருட்கள் வாங்கிட- ஆடம்பரமாக திருமணம் நடத்திட- ஆடம்பர  சொகுசு வாழ்க்கை வாழ்ந்திட என இந்த வட்டி எனும் முதலை வாயில் தலை வைத்து, பின் வட்டி கழுத்தை இருக்கும் நிலை வருகையில் கயிற்றால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்துகொள்கின்றனர். இன்னும் சிலர் வட்டி எனும் புலிவாலை பிடித்து விடமுடியாமல் தவிக்கின்றனர். வட்டிக்கு கொடுத்த பாவி வாசலில் நின்று கேட்டு, படிப்படியாக படுக்கையறை வந்து பங்குபோடும்  அவலமும் ஏற்படுகிறது. இத்தகைய மாபாதக வட்டியை மாபெரும் பாவம் என வர்ணிக்கிறது மாமறை;
 
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள் நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.[2 ;278 ,279 ]
எனவே வட்டியை விட்டொழிப்போம். சிலர், 'வட்டிக்கு கொடுத்தால்தான் பாவம்;வட்டிக்கு வாங்கினால் பாவமல்ல' என்று கூறுவர். ஆனால் உண்மை  அதுவல்ல. இதோ உண்மைநபி[ஸல்] அவர்கள் பொன்மொழியை கவனியுங்கள்;
வட்டி வாங்குபவனையும்-வட்டிக்கு கொடுப்பவனையும்-அதற்கு கணக்கு எழுதுபவனையும்- சாட்சியாக இருப்பவனையும் நபியவர்கள் சபித்துவிட்டு, அக்குற்றத்தில் அனைவரும் சமமானவர்களே என்று கூறினார்கள்.[நூல்;முஸ்லிம்]
எனவே வட்டியைவிட்டும் எட்டி நிற்போம்.
வரதட்சனை;
இறைவனின்  படைப்பில் ஆண்-பெண் என இருபாலர் உண்டு. இவ்விருவரில் ஒருவரைவிட மற்றொருவர் மறையோனின் பார்வையில் மட்டமானவர்களில்லை.ஆனால், ஆண் ஏதோ  வாங்கப் பிறந்தவன் போன்றும், பெண் ஏதோ கொடுக்கப் பிறந்தவள் போன்றும் சமூகத்தில் ஒரு தோற்றத்தை உருவாக்கியதுதான் வரதட்சனை என்பதாகும். திருமணம் செய்யும் ஆணுக்கு, ரொக்கப்பணம்-நகைகள்-சீர்வரிசைகள்-கார்-வீடு- இவ்வாறு மணப்பெண் தரும் அவலநிலை. மார்க்கெட்டில் மாட்டிற்கு விலை ஏறுகிறதோ இல்லையோ,மாப்பிள்ளைக்கு விலை தாறுமாறாக எகிறுகிறது. படிப்பிற்கு ஏற்ப செய்யும் தொழிலுக்கு ஏற்ப மாப்பிள்ளை விலை உள்ளது. வசதிபடைத்த  கண்ணியர் கரையேறுகிறார்கள். வசதியற்ற கண்ணியர் கண்ணீரில் கரைகிறார்கள்.எதற்காகவும் எவரிடத்திலும் கையேந்தாத பெண்ணின் தந்தை, மகளின் மணவாழ்க்கையில் மாப்பிள்ளைக்கு வாய்க்கரிசி[வரதட்சனை] போட, [பள்ளி]வாசல் தோறும் கையேந்துகிறான். இத்தகைய சமூகத்தின் இழிவுக்கு காரணாமான வரதட்சனை பாவமாக கூட பார்க்கப்படாமல், கவுரவத்தின் அடையாளமாக காணப்படுவதுதான் வேதனையின் உச்சகட்டம். இதோ வல்ல ரஹ்மான் தன் வேதத்தில்;
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.[4 ;4] என்று கூறுகின்றான்.
அய்யகோ! இவ்வசனத்தை மேடைதோறும் முழங்கும் தவ்ஹீத்[வாதிகள்]வியாதிகள் சிலர், மணமகனாக வீற்றிருக்கும் வேளையில் வசதியாக மறப்பதுதான் வேடிக்கையாகும். எனவே வரதட்சனை ஒழித்து, பெண்ணுக்கு தட்சனை[மஹர் ] தந்து மணமுடிப்போம்.
தீண்டாமை;
'தீண்டாமை ஒரு பாவச்செயல்- தீண்டாமை ஒரு பெருங்குற்றம்- தீண்டாமை ஒரு மணிதத் தன்மையற்ற  செயல்' என்று பாடப்புத்தகம் நமக்கு பாடம் புகட்டினாலும், நடைமுறையில் இன்னும் இரட்டைக் குவளைகளும்- 'திண்ணியம்'களும்- தீண்டாமைசுவர்களும் இருக்கவே செய்கின்றன. மனிதன் எவராகினும், அவனது உதிரம் சிவப்பு  என்ற உயர்ந்தோனின் படைப்பில், ஏற்றத் தாழ்வு கற்பித்து, சூத்திர வர்ணம் பூசி ஒரு சாராரை தீண்டத்தகாதவர்களாக ஆக்கியது  மனுநீதி[!]. அத்தகைய தாழ்த்தப் பட்டவர்கள் என கருதப்பட்ட சமூகம், இன்று படிப்பு-பதவி என உயர்ந்த  நிலைக்கு வந்த பின்னும் அவர்கள் மீது பூசப்பட்ட தீண்டாமை வர்ணம் இன்னும் மாறவில்லை என்பதே உண்மை.இன்றைய சனாதனவாதிகளையும் தாண்டிய குலப்பெருமை கொண்ட அறியாமைக்கால மக்களுக்கு அழகாய் சொன்னது அருள்மறை;
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்.[4 ;1]
இந்த அறைகூவல்தான், உயந்த குலம் என அறியப்பட்ட குறைஷிக்குலத்தைச்  சேர்ந்த உமர்[ரலி] எனும் வேங்கை, எத்தியோப்பிய கருப்புநிற அடிமையான பிலால்[ரலி] அவர்களை 'என் தலைவர்' என சொல்லச்செய்து, ஒருதாய் மக்களாக்கி, தீண்டாமை சுவருடைத்து, தீன் சுடர் ஒளிரச்செய்தது. ஆம்! தீண்டாமை ஒழிப்போம்.
 
ஆபாசம்;
 ஆபாசம் இன்றைக்கு அவசியப் பொருளோ என அஞ்சும் அளவுக்கு மனிதனின் வாழ்வில் இரண்டற கலந்துவிடும் அபாய நிலையில் உள்ளது. ஒரு காலத்தில் முழம் கணக்கில் கட்டப்பட்ட சேலை, பின்னர் மீட்டர்களாகி, மிடிகளாகி, இப்போது இரு கச்சைகளில் நிற்கிறது. ஒரு பெண் சற்றே அரைகுறை ஆடையணிந்து தெருவில் வந்தால், ஆபாசம் என அலறுபவர்கள் கூட, இரு கச்சைகளுடன் ஒரு பெண் திரையில் வந்தால் 'கலை' என்கிறார்கள். ஒரு பெண் பல ஆண்களுடன் தொடர்பு கொண்டால், அவளை 'பரத்தை' என்பவர்கள் கூட, பரந்த திரையில் 'படுக்கையறை' காட்சிவரை நடிப்பவரை பாராட்டி பதக்கம் அளிக்கின்றனர். ஆக ஆபாசம் பெயர் மாற்றப்பட்டு சேட்டிலைட் வழியாக நமது வரவேற்பறையில் வந்து அமர்ந்துவிட்டது.  இத்தகைய ஆபாசத்தின் நுழைவாயில் தவறான பார்வையாகும். முடிவு விபச்சாரமும்- பரிசு எயிட்ஸ் ஆகவும் உள்ளது. எனவே இந்த ஆபாசத்தை நுனிமுதல் அடிவரை கிள்ளி எறிகிறது மார்க்கம்;
 
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.[24 ;30 ,31]
 
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.[17 ;32 ]
 
எனவே ஆபாசத்தை அடியோடு ஒழிப்போம்.
 
ஊழல்;
உழைக்காமல் பொருளீட்டுவதற்கும், தவறானவற்றை நியாயப் படுத்துவதற்கும் உருவானதுதான் ஊழல். சில நூறுகளில் தொடங்கிய ஊழல் இப்போது கோடிகளில்தான் எனும் அளவுக்கு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த அளவுக்கு லஞ்சம்-ஊழல் தலைவிரித்து ஆடுவதற்கு காரணம், என்னதான் விசாரணை-கைது என்றாலும், சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிவிடலாம் என்ற அசாத்திய நம்பிக்கையே.சில நூறு ரூபாய்கள் கையூட்டு பெற்றவன் மீது காட்டும் கடுமை, கோடிகளை சுருட்டிய கேடிகள் மீது காட்டப்படுவதில்லை. முறைகேடாக பொருளீட்டிய பல இந்தியர்களின் கருப்புப் பணம் பலகோடிகள் பன்னாட்டு வங்கிகளில் பதுங்கிக் கிடக்கிறது என்பதுதான் பரபரப்பு செய்தியாக உள்ளது. நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை என்ற ஒன்று இருந்தாலும், அதனால் பெரிய அளவில் எந்த பலனுமில்லை.இத்தகைய லஞ்சம்-ஊழல் ஊற்றுக் கண்களை உறுதியாக அடைக்கிறது இஸ்லாம்;

அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்;. மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.[2;188 ]

அது மட்டுமன்றி, 'எந்த வழியில் சம்பாதித்தாய்; எந்த வழியில் செலவு செய்தாய்' என்றும் மறுமையில்  விசாரிக்கப்படும் என்றும் கூறி, தவறான வழியில் பொருளீட்டுவதை தடுக்கிறது இஸ்லாம்.எனவே லஞ்சம்-ஊழல் எனும் சமூகத்தீமையை ஒழித்திடுவோம்.

மது;
'மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உடலுக்கு கேடு' என்று ஒருபுறம் எழுதிவைத்துக்கொண்டு அத்தகைய கேடானதை விற்பதற்கென 'டாஸ்மாக்' நிலையங்களை உருவாக்கி அதில் படித்த பட்டதாரிகளையும் பணியாளர்களாக்கி அரசு கஜானாவை நிறைத்துவருகிறது தமிழக அரசு. அரசின் பட்ஜெட் தேவையை நிறைவேற்றுவதில் மது வியாபாரம் முக்கிய இடத்தில் இருந்து வருகிறது. இந்த மது அருந்துபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதையும், வரும் பத்தாண்டுகளில் மது அருந்ததாதவர்களை காண்பது அரிதாகிவிடும் என்று ஆய்வுகள் சொல்லும் அளவுக்கு, பெரியவர்களில் தொடங்கி, சிறார்கள் வரை இந்த மது எனும் சமூகத்தீமை ஆட்கொண்டுள்ளது.அது மட்டுமன்றி நாகீகம் என்ற பெயரில் மது பென்களையும் கவர ஆரம்பித்துள்ளது ஆபத்தின்  அறிகுறியாகும். இத்தகைய மதுவை ஒருகாலத்தில் மறைந்திருந்து குடித்தவர்கள், இன்று பட்டப்பகலில் தேநீர் அருந்துவதுபோல் பொது  இடத்தில் அருந்துகின்ற அளவுக்கு இந்த தீமை சகஜமாகிவிட்டது. மதுவால் எத்தனை லட்சம் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளன. எத்தனை குற்றங்களுக்கு இந்த மது காரணியாக உள்ளது என்பதைப் பற்றி எல்லாம் எவரும் கவலை கொள்ளும் நிலையில் இல்லை. ஆனால் இத்தகைய சமூகத்தீமையான  மதுவை,  குடம் குடமாக குடித்த மதுப்பிரியர்களை ஒரு வசனத்தின் மூலம், திருத்திக் காட்டியது இஸ்லாம்;

அனஸ்[ரலி] அவர்கள் அறிவித்தார்கள்;
நான் அபூ தல்ஹா(ரலி) வீட்டில் மக்களுக்கு மது பரிமாறுபவனாக இருந்தேன். அந்த நாள்களில் பேரீச்சம் பழ மதுவை (பேரீச்ச மரக்கள்ளை)யே அவர்கள் குடித்து வந்தனர். (மதுவைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பட்டவுடன்), இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவரை அழைத்து, '(மக்களே!) மது தடை செய்யப்பட்டுவிட்டது" என்று அறிவிக்கும்படி கட்டளையிட்டார்கள். அபூ தல்ஹா(ரலி) என்னிடம், 'வெளியே சென்று இதை ஊற்றிவிடு" என்று கூறினார்கள். நான் வெளியே சென்று அதை (சாலையில்) ஊற்றி விட்டேன். மதீனா நகரின் தெருக்களில் அது ஓடியது.
[நூல்;புகாரி]

இத்தகைய மதுவின் தீமைகளை மக்களுக்கு சொல்லவேண்டிய   முஸ்லிம்களில் சிலரும் மது அருந்துபவர்களாக  இருப்பது வேதனைக்குரியதாகும். எனவே குடியைக் கெடுக்கும் குடியை ஒழிக்க முன்வருவோம்.

புகையிலை-புகை;

புகையிலையை பயன்படுத்துவதுநாகரீகத்தின் அடையாளமாக கருதும் அளவுக்கு பெரும்பாலோரை ஆட்கொண்டுள்ளது. இந்த புகையிலை நாகரிக வளர்ச்சிக்கேற்ப பல்வேறு பரிமாணங்களில் தனது உயிர்கொல்லி வேலைகளை கச்சிதமாக செய்துவருகிறது. ஒரு காலத்தில் புகையிலையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்து, பின்பு சுருட்டாக, பின்பு பீடியாக, சிகரெட்டாக, பான்பராக்காக, குத்காவாக, போதை தரும் பீடாக்களாக இவ்வாறான பல்வேறு முகங்கள் இந்த புகையிலைக்கு உண்டு. இதில் புகையிலையை, புகையிலையாக பீடாக்களாக பான்பராக்குகளாக பயன்படுத்துவதை பொருத்தமட்டில், யார் அதை உட்கொள்கிறாரோ அவரை மட்டுமே பாதிக்கும். ஆனால் புகைப்பதை பொருத்தமட்டில், புகைப்பவர் மட்டுமல்லாது அவருக்கு அருகாமையில் உள்ளவரையும் சேர்த்தே பாதிக்கும்.

ஒரு புகைபிடிப்பவர் அருகே புகை பிடிக்காதவர் ஒருவர் இருந்தால், புகைப்பவர் விடும் புகையை இவர் சுவாசித்து, புகைக்காத மனிதருக்கும் நோய் வரும் நிலை. சிகரெட் புகைக்காமல் அடுத்தவர் பிடித்த சிகரெட் புகையால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 6 லட்சம் பேர் பலியாகி வருவது தெரிய வந்துள்ளது. அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 30 சதவீதம் ஆண், பெண் அடங்குவர்.

மேலும், இதயநோயினால் 3 லட்சத்து 79 பேரும், 1 லட்சத்து 65 பேர் மூச்சு கோளாறு சம்பந்தப்பட்ட நோயினாலும், 36 ஆயிரத்து 900 பேர் ஆஸ்துமாவினாலும், 21 ஆயிரத்து 400 பேர் நுரை யீரல் புற்று நோயினாலும் ஆண்டுதோறும் மடிகின்றனர்.
புகைப்பவர் ஒரு முஸ்லிமாக இருந்தால் அவர் மற்றவருக்கு தீங்கை நாடுவதால் அவர் சிறந்த முஸ்லிமாக ஆகமாட்டார்.

நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்;
'பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தா
ர்.[நூல்;புஹாரி]
எனவே புகையிலை-புகைப்பழக்கம் ஒழிப்போம்.

இறுதியாக மேற்கண்ட தீமைகள் மட்டுமல்லாது ஏராளமான சமூகத் தீமைகள் நமக்கு மத்தியிலே மலிந்து காணப்படுகின்றது. அத்தகைய தீமைகளை செய்யாமல் வாழும் சில நல்லவர்கள், நாம்தான் எந்த தீமையும் செய்வதில்லையே; எவன் எக்கேடுகெட்டுப் போனால் நமக்கென்ன..? என்று பாராமுகமாக ஒதுங்கிச்செல்வதை பார்க்கிறோம். ஒரு முஸ்லிம்  இவ்வாறு ஒதுங்கிச்செல்ல முடியாது. ஏனெனில் அல்லாஹ்,

[நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக் குள்ளாக்கினோம்

(அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், "அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்); "எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்.

அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம்.[7 ;163-166 ]
என்று கூறுகின்றான். 

எனவே சமூகத்தீமைகளை களமிறங்கி ஒழித்து, சமூகத்தை பாதுகாப்போம். இறைவனின் பாதுகாப்பைப் பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.

0 comments to “'சமூகத் தீமைகள்' ஒரு பார்வை!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates