திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Saturday, June 18, 2011

கணவனின் மகன் மனைவியின் மகளுக்கு மஹ்ரமா?

,
கேள்வி:-
இரண்டாம் திருமணம் செய்த  இருவரின் தத்தம் முந்தய திருமணம் மூலம் பிறந்த பிள்ளைகள் ஒருவருக்கொருவர் மணம் புரிந்து கொள்ள விலக்கப்பட்டவர்களா? ஆகுமாக்கப்பட்டவர்களா?
- சகோதரி ஃபைஹா (பின்த் ஸல்ஹா)

பதில்:-
உறவுகள் என்பன பிறப்பாலும் திருமண உறவாலும் ஏற்படுகின்றன.
திருமணம் செய்து கொள்ளத் தடை செய்யப்பட்ட உறவுகளைத் தெளிவாகத் தெரிந்து கொண்டால், மற்றவர் யாவரும் ஆகுமானவர்கள் என்பதை எளிதாக விளங்கிக் கொள்ளலாம். மணம் கொள்ளத் தடுக்கப்பட்டவர்களை அல்லாஹ், இறைமறை 4:23இல் கூறுவதன் பட்டியல்:
(ஆண்களான) உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்:
  1. உங்களைப் பெற்றெடுத்த (அல்லது உங்கள் தந்தையின் மனைவியரான) தாய்கள்
  2. உங்கள் புதல்வியர்
  3. உங்கள் (தாய்-தந்தைக்குப் பிறந்த உங்கள்) சகோதரிகள்
  4. உங்கள் தந்தையின் சகோதரி(அத்தை)கள்
  5. உங்கள் தாயின் சகோதரி(பெரிய/சின்னம்மா)கள்
  6. உங்கள் (சொந்தச்) சகோதரரின் புதல்வியர்
  7. உங்கள் (சொந்தச்) சகோதரியின் புதல்வியர்
  8. உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்கள்
  9. உங்கள் பால்குடிச் சகோதரிகள்
  10. உங்கள் மனைவியரின் தாய்கள் (மாமியார்கள்)
  11. உங்கள் மகன்களின் மனைவியர் (மருமகள்கள்)
  12. உங்கள் மனைவியாக உயிரோடிருக்கும் பெண்ணின் சகோதரி(கொழுந்தி)கள்
  13. உங்களுக்கு (முழு)மனைவியாவதற்கு முன்னர் வேறொருவருக்கு மனைவியாக இருந்தபோது அவ்விருவருக்கும் பிறந்த பெண்மக்கள்
பட்டியலில் இறுதியாக (13இல்) கூறப்பட்ட "முழு மனைவி" என்பதன் பொருள் இல்லற உறவு கொண்டுவிட்ட பெண்ணைக் குறிப்பதாகும். திருமணமான பின்னர் இல்லற உறவு கொள்ளாத நிலையில் மணமக்கள் இருவருள் ஒருவருக்கு, நிறைவேறிய திருமணத்தில் உடன்பாடு இல்லாமல் மணமுறிவு ஏற்பட்டால், அப்பெண்ணின் மகளைத் திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதி உண்டு. மணமுறிவு ஏதுமின்றி இல்லற உறவு ஏற்பட்டுவிட்டால் அந்த மனைவியின் முன்னாள் கணவருக்குப் பிறந்த பெண்மக்கள் அனைவரும் இந்தப் புதுமனைவியின் புதிய கணவருக்குத் திருமணம் செய்து கொள்வதற்கு விலக்கப்பட்ட மஹ்ரம்களாவர்களே அன்றி புதிய கணவரின் மகன்களுக்கல்ல.
எனவே, தந்தை மணமுடித்த மனைவியின் (மாற்றுத் தாயின்) முந்தைய கணவருக்குப் பிறந்த பெண்மக்கள், மகனுக்கு மணமுடிக்க ஆகுமானவர்களே. மணமுடித்துக் கொள்வதற்குத் தடையேதுமில்லை. அல்லாஹ்வும் அவன் தூதரும் தடை செய்யாத உறவுகளை, "பேணுதல்" எனும் பெயரில் நாம் தடைசெய்யலாகாது.
முற்றாக அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!
oOo
மணம் புரிந்து கொள்ளத் தடை செய்யப்பட்டுள்ள 'மஹ்ரம்'கள் பற்றிய கூடுதல் விளக்கங்கள்:
பட்டியல் வரிசை 11இல் இடம்பெறும் மகன்களின் மனைவியரான "மருமகள்கள்" என்போர் இஸ்லாத்தின் பார்வையில் சொந்த மகளின் உறவுத் தகுதியை உடையோராவர். ஒருவர் தம் மகன்களின் மனைவியரான மருமகள்களை எக்காலத்திலும் திருமணம் செய்து கொள்ள முடியாது.
பட்டியலில் 10ஆவதாக இடம்பெறும் "மாமியார்" என்பவர் இஸ்லாமியப் பார்வையில் தாயை ஒத்தவராவார். ஒருவரின் மனைவி மணவிலக்குப் பெற்றுவிட்டாலோ இறந்து விட்டாலோ அன்றியும் மாமனார் இறந்துவிட்டாலோ மாமனாரிடமிருந்து மாமியார் மணவிலக்குப் பெற்றுவிட்டாலோ மனைவியின் தாயான மாமியாரை எக்காலத்திலும் திருமணம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது.
மஹ்ரம்கள் வரிசையில் (பட்டியல் 9) பால்குடிச் சகோதரிகள் என்பவர்கள், வேறு வேறு பெற்றோருக்குப் பிறந்து ஒரே செவிலித் தாயிடம் பாலருந்தியவர்களாவர். ஒரு செவிலித் தாயிடம் பாலருந்திய ஆண்-பெண்களுக்கு, சொந்தச் சகோதரன்-சகோதரி உறவை இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது. எனவே, இவ்வகை ஆண்-பெண்கள் எக்காலத்திலும் திருமணம் செய்துகொள்ளக்கூடாது. பால்குடி உறவை அறியாமல் திருமணம் முடித்திருந்தாலும் அது ரத்துச் செய்யப்படும்! அதற்கான நபிவழிச் சான்று:
நான் அபூஇஹாப் இப்னு அஸீஸ் அவர்களின் மகளை மணந்திருந்தேன். ஒரு பெண் என்னிடம் வந்து, "உனக்கும் நீ மணந்த பெண்ணுக்கும் நான் பாலூட்டியிருக்கிறேன்" என்று கூறினார். நான், "நீ எனக்குப் பாலூட்டியதை நான் அறியமாட்டேன்; (நான அவளை மணந்தபோது) நீ எனக்கு (இதைச்) சொல்லவில்லையே!" என்று கூறிவிட்டு, அபூஇஹாபின் குடும்பத்தாரிடம் (இது உண்மைதானா என்று) கேட்டனுப்பினேன். அவர்கள், "எங்கள் (குடும்பத்துப்) பெண்ணுக்கு அவள் பாலூட்டியதாக நாங்கள் அறியவில்லை" என்று கூறினர். உடனே (மக்காவில் இருந்த) நான், (மார்க்கத் தீர்ப்புப் பெறுவதற்காகப்) பயணித்துச் சென்று மதீனாவிலிருந்த நபி(ஸல்) அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், "(பால் புகட்டியவராலேயே) சொல்லப்பட்டுவிட்ட பிறகு, (நீங்கள் இருவரும் இணைந்து வாழ்வது) எப்படி (செல்லும்)?" என்றார்கள். எனவே; நான் அவளைப் பிரிந்துவிட்டேன். அவள் வேறொருவரை மணந்தாள். - அறிவிப்பவர் உக்பா இப்னு ஹாரிஸ் (ரலி) (நூல் - புகாரி 2640, திர்மிதீ).
வரிசை 12க்குரியோரான கொழுந்தியர் பற்றி நபிமொழி கூறுவதாவது:
நான் (என் கணவர்) நபி(ஸல்) அவர்களிடம், "இறைத்தூதர் அவர்களே! என் சகோதரியான அபூசுஃப்யானின் மகளைத் தாங்கள் மணந்துகொள்ளுங்கள்!" என்று கூறினேன். அதற்கவர்கள், "இதை நீயே விரும்புகிறாயா?" என்று (வியப்புடன்) கேட்டார்கள். நான், "ஆம்! (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்" என்றேன்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், "எனக்கு அ
(வளை மணப்ப)து அனுமதிக்கப்பட்டதன்று" என்று கூறினார்கள். நான், "இறைத்தூதர் அவர்களே, அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அபூஸலமாவின் மகள் துர்ராவை மணக்க விரும்புவதாக எங்களிடையே பேச்சு நடைபெறுகிறதே!" என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், "(என் துணைவியார்) உம்முஸலமாவுக்கு (மூத்த கணவன் மூலம்) பிறந்த மகளையா?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "ஆம்" என்று பதிலளித்தேன். நபியவர்கள், "அவள் என்னுடைய மடியில் (வளர்ப்பு மகளாக இருந்துவருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும்கூட, எனக்கு அவள் (மணமுடிக்க) அனுமதிக்கப்பட்டவள் அல்லள். (ஏனெனில்) அவள், பால்குடி உறவு முறையில் என் சகோதரரின் மகளாவாள். எனக்கும் (அவளின் தந்தை) அபூஸலமாவுக்கும் ஸுவைபா என்பார் பாலூட்டினார். எனவே, என்னிடம் உங்கள் பெண் மக்களையோ, உங்கள் சகோதரிகளையோ (மணந்துகொள்ளுமாறு) பரிந்துரைக்க வேண்டாம்" என்று கூறினார்கள்.
-அறிவிப்பாளர்: உம்மு ஹபீபா (ரலி) (நூல்கள்: புகாரி 5107. முஸ்லிம் 2867, 2868, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்)
உங்களுடைய பெண்மக்களையோ, சகோதரிகளையோ (மணந்துகொள்ளுமாறு) என்னிடம் பரிந்துரைக்காதீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பது - மனைவியின் முந்தய கணவருக்குப் பிறந்த பெண்மக்கள், தாயை மணந்தவருக்கு மஹ்ரமாகி விடுவார்கள். அதுபோல், ஒருவர் ஒரேநேரத்தில் இரு சகோதரிகளை மனைவிகளாகச் சேர்ப்பது கூடாது என்கிற - 4:23வது வசனத் தொடருக்கு விளக்கமாகவுள்ளது.
நம் சமுதாயத்தில் பரவலாக, சகோதரியின் கணவரோடு கொழுந்தியர் பழகும் முறைபற்றி இங்குச் சொல்லியே ஆகவேண்டும். பெரும்பாலும் நம் சமுதாய ஆண்களுக்கு 25 வயது வாக்கில் திருமணம் நடைபெறுகிறது. மணகளுக்கு 20 வயது எனக் கொள்வோம். மணமகளின் மூத்த சகோதரிகளுள் திருமணம் ஆனவர்கள் தம் சகோதரியின் கணவரை விட்டு விலகி, ஹிஜாபைப் பேணிக் கொள்வதும் சிறுமிப் பருவத்தவர் தம் சகோதரியின் கணவரோடு சகஜமாக எதிரில் வந்து நின்று கேலிப் பேச்சுகள் பேசி விளையாடுவதும் இயல்பாக நடைபெறுகிறது. இதுவரையிலும் தவறில்லை. ஆனால், பருவமெய்திய பிறகும் ஹிஜாப் இல்லாத பழைய நிலையே பல குடும்பங்களில் இயல்பாகத் தொடர்வதை நாம் பார்க்கிறோம். அதிலும் சகோதரியின் கணவர் ஏற்கனவே (அத்தை மகன் போன்ற) உறவுக்காரராக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். இன்னொரு தலைகீழ் மாற்றமும் நம் குடும்பங்களில் நிலவுவதுண்டு. பெற்ற தாயை ஒத்த உறவுடைய மாமியார், தம் மருமகனுக்கு இயல்பாக எதிரில் வராமல் மறைவிலிருந்தோ முழு ஹிஜாபுடனோ பேசுவார். அவ்வாறு இருப்பது 'கூடுதல் பேணுதல்' என்றாலும் மாமியாருக்குக் கட்டாயமன்று; பருவமடைந்த கொழுந்திகளுக்குத்தான் கட்டாயமாகும். ஏனெனில், "கொழுந்தியர் மஹ்ரம்" எனும் நிலை தற்காலிகம்தான். மணமுடித்த பெண் இறந்துவிட்டாலோ மணவிலக்குப் பெற்றாலோ கொழுந்தியர் அனைவருமே மணம் கொள்ளத் தக்கவர்களாவர். எனவே, பருவமடைந்த கொழுந்தியர், தம் சகோதரியின் கணவருக்கு ஹிஜாபைப் பேணிக் கொள்ளும் நிலை, கட்டாய மாற்றமாக நம் சமுதாயத்தில் வரவேண்டும்.
அவ்வாறே, கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கைப்படும் பெண், தன் சிறுவயதுக் கொழுந்தர்கள் வளர்ந்து பெரியவர்களான பிறகும் அவர்களோடு ஹிஜாபைப் பேணாத பழைய நிலையிலேயே தொடர்ந்து பழகுவது நமது சமுதாயத்தில் பரவலாகக் காணப்படுகின்றது. பெரியவர்களாகிவிட்ட கொழுந்தர்களோடு பேசிப் பழகுவது குற்றமன்று; ஆனால், அவர்களோடு பழகும்போது ஹிஜாபைப் பேணிக் கொள்ளக் கூடிய மாற்றமும் நம் சமுதாயப் பெண்களிடம் கட்டாயம் வரவேண்டியதாகும். ஏனெனில், சகோதரரின் மனைவி, அவரின் பிற சகோதரர்களுக்கு மஹ்ரமல்லள்.

0 comments to “கணவனின் மகன் மனைவியின் மகளுக்கு மஹ்ரமா?”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates