திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Tuesday, October 25, 2011

ஆதார் அடையாள அட்டைக்கான பதிவு இன்று முதல் துவக்கம்

,
ஆதார் அடையாள அட்டைக்கான பதிவு இன்று முதல் துவக்கம்
சென்னை : "ஆதார் அடையாள அட்டை' பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணி, இன்று முதல் துவக்கப்படுகிறது. இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்துடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இந்திய தபால் துறை அடையாள அட்டை வழங்குவதற்கான பதிவு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது. இந்த அடையாள அட்டை மூலம் பல்வேறு பணிகள், பயன்களைப் பெற முடியும். வங்கி கணக்கு துவக்கவும், மருத்துவத்துக்கும், மொபைல்போன் இணைப்பு பெறவும், இந்த ஆதார் அடையாள அட்டை பயனுள்ளதாக இருக்கும்.
அடையாள அட்டை பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணியை, தமிழக உள்துறை முதன்மைச் செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா, இன்று சென்னையில் துவக்கி வைக்கிறார். தமிழக தபால் வட்டம் துவக்கும் இப்பதிவுப் பணி, சென்னையில் மயிலாப்பூர், தி.நகர் மற்றும் பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைமை தபால் நிலையங்களுக்கும், நவ., 1ம் தேதி முதல் விரிவுப்படுத்தப்படும்.


மேலும், நவ., 21ம் முதல் தமிழகத்தில் உள்ள 31 மாவட்ட தலைமை தபால் நிலையங்களுக்கும், அடுத்த 30 நாட்களில் 154 முக்கிய தபால் நிலையங்களிலும் விரிவுப்படுத்தப்படவுள்ளது. இந்த ஆதார் அடையாள அட்டையை இலவசமாக, பொதுமக்கள் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்து, மேலும் விவரங்களை அறிய, 044-28582798, 0431-241245,0452-2526398,0422-2558204 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தமிழக வட்ட தலைமை தபால் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
-நன்றி;தினமலர்                                                                                                                                                  

கைரேகை, கருவிழிப் பதிவுடன் தேசிய அடையாள அட்டை                                                     


சென்னை : தமிழ்நாட்டில் அஞ்சலகங்கள் மூலமாக கைரேகை, கருவிழிப்பதிவுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணியை முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி தொடங்கி வைத்தார்.  சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற இந்த  விழாவில் கோபால்சாமி பேசியதாவது:

குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம் என பல்வேறு அடையாள அட்டைகள் இருந்தாலும். அவற்றை எல்லா இடங்களிலும் ஆவணமாக பயன்படுத்த முடியாது. அதிலும் பாஸ்போர்ட்டில் முதலில் அப்பா பெயர் இடம்பெற்றிருக்கும், மற்ற அட்டைகளில் இனிஷியலுடன் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கும். பெண்கள் என்றால் திருமணத் திற்கு முன்பு அப்பா பெயருடன் எழுதுகின்றனர். பின்னர் கணவனின் பெயர்.

இந்த மாற்றங்களை ஒவ்வொரு முறையும் விளக்கி சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இவற்றுக்கெல்லாம் தேசிய அடையாள அட்டை தீர்வாக இருக்கும். அனைத்து தேவைகளுக்கும் ஆதாரமாக பயன்படுத்தலாம். இந்த அட்டையில் இரண்டு விதமான பிரிவுகளுடன் பதிவு ‘சிப்’ இருக்கும். ஒன்றில் வேண்டும்போது தகவல்களை படிக்கலாம், மாற்ற முடியாது.  பிறப்பு, ரேகை பதிவு என நிரந்தர தகவல்கள் இன்னொரு பிரிவில் படிக்கலாம். அவ்வப்போது புதிய மாற்றங்களை பதிவேற்றிக் கொண்டே இருக்கலாம். இதற்கிடையில் இப்படி தகவல்களை தருவது ரகசியமாக வைக்கப்படுமா என்ற சந்தேகங்கள் விவாதமாகி வருகின்றன.

தகவல்கள் குறித்து ரகசியம் காப்பது அவசியம். இப்பணியை நாடு முழுவதும் கிளைகளை வைத்திருக்கும் அஞ்சலகங்கள் மூலம் செய்வதுதான் சரியானது. பொதுவாக சிற்றூரில் வாழும் மக்களுக்குதான் இருப்பிட ஆதாரம் உள்ளிட்ட சான்றுகள் கிடைப்பது கடினம். எனவே அவர்களுக்கு இந்த தேசிய அடையாள அட்டை விரைவாகவும், எல்லோருக்கும் கிடைக்க செய்வது அவசியம்.

இவ்வாறு அவர் பேசினார்.  வரவேற்று பேசிய சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் எம்.எஸ்.ராமானுஜம், Ô‘தேசிய அடையாள அட்டை Ôஆதார்Õ வழங்கும் பணியை மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்துகிறது. அடையாள அட்டை பெற அஞ்சலகங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். கட்டணம் ஏதும் கிடையாது. முதல் கட்டமாக அண்ணா சாலை அஞ்சலகத்தில் தொடங்குகிறோம்.

ராஜாஜி சாலை பொது அஞ்சலகம், மயிலாப்பூர் தலைமை அஞ்சலகம், பூங்காநகர் தலைமை அஞ்சலகம் ஆகியவற்றின் மூலமாக வழங்க உள்ளோம். தொடர்ந்து நவம்பர் 3வது வாரத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு தலைமை அஞ்சலகம் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்படும். பின்னர் படிப்படியாக அனைத்து அஞ்சலகங்களிலும் இந்த வசதி கிடைக்கும். ஒரு நாளைக்கு 60 பேர் என 2012ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தமிழ்நாட்டில் 2 லட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்க திட்டமிட்டுள்ளோம்Õ’ என்றார்.

நன்றி தெரிவித்து பேசிய வாகன அஞ்சல் சேவை மண்டலத்தின் அஞ்சல் துறை தலைவர் டாக்டர் ராமசந்திரன், Ôதேசிய அடையாள அட்டை விண்ணப்பம் இலவசம். நிரந்த கணக்கு அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் என 17 சான்றுகளில் ஏதாவது ஒன்று, குடும்ப அட்டை உள்ளிட்ட 28 முகவரி சான்றுகளில் ஒன்று, பிறந்த தேதி சான்று அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆகிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் நேரில் வர வேண்டும்.

அவரது இடது கையில் நான்கு விரல்களின் ரேகையும், இரண்டு கைகளின் பெருவிரல் ரேகையும் நகலெடுக்கப்படும். மேலும் கண்ணின் கருவிழியும் பதிவு செய்யப்படும். இவை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. விண்ணப்பங்கள், அடையாள அட்டை வழங்கும் துறைக்கு அனுப்பப்பட்டு அவர்கள் அவற்றை சரிப்பார்த்த பின்னர் அஞ்சலகங்கள் மூலம் வினியோகம் செய்யப்படும்Õ’ என்றார்.
-நன்றி. தினகரன்            

0 comments to “ஆதார் அடையாள அட்டைக்கான பதிவு இன்று முதல் துவக்கம்”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates