திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, December 5, 2011

தாய் தந்தையரின் முக்கியத்துவம்

,

தாய் தந்தையரின் முக்கியத்துவம்

Post image for தாய் தந்தையரின் முக்கியத்துவம்


“(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். (17 :23)
தாய் தந்தையரின் முக்கியத்துவத்தைத் தெளிவாக விளக்கும் மிக ஆழமான வசனம். ஆனால் இன்று மனிதர்களில் பெரும்பாலோரும் ஏன்! ஓர் இறைவனை வணங்கும் நிலையில் முதன்மை தரத்தை உடைய மக்களில் பெரும்பான்மையினோரும் பெற்றோர்கள் விஷயத்தில் தான் தாழ்ந்து நடந்து கொள்கின்றனர். இவ்விசயம் அவர்களை சுவனத்திற்கு செல்லும் நிலையை தடுக்கும் சக்தி கொண்ட மிக முக்கியமான ஒரு அம்சம் என்று அவர்கள் அறியாததினாலே! அல்லது அறிந்தும் அசட்டையாக  இருப்பதே!
நம்மைப் போலவே அவர்களும் இளவயதுகளைக் கடந்து இன்று காலத்தின் வேகத்தால் முதுமையை அடைந்திருக்கின்றனர். அவர்களுடைய இளம் வயதில் நம்மை, அதாவது அவர்களுடைய பிள்ளைச் செல்வங்களை நன்றாக வளர்த்து நல்ல ஒரு நிலைக்கு ஆளாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளையே கொண்டு வாழ்ந்தனர். அவர்களின் முயற்ச்சிக்கு தக்கவாரோ அல்லது கூடுதல், குறைவாகவோ இறைவன் அவர்களுக்கு அருளியதைக் கொண்டு நம்மை வளர்த்து நமது இன்றைய நிலைக்கு முக்கியமான கருப்பொருளாக இருக்கின்றனர். இதை நாம் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இன்று பெரும்பான்மையோரின் கூற்றுக்களை ஆராய்வோமேயானால் மிகப் பெரும் ஆச்சரியமாக இருக்கும்; அதாவது:-
“எங்களுடைய பெற்றோர்கள் எங்களுக்கு எதையுமே விட்டு வைக்கவில்லை,” அதனால் தான் நாங்கள் இவ்வளவு கஷ்ட்டப்படுகிறோம்”
என்பதே அக்கூற்று இக்கூற்றுக்காரர்கள் ஒரு முக்கியமான விசயத்தை மறந்து விடுகின்றனர். அதாவது இவர்களுடைய பிள்ளைகளும் நாளைக்கு இதே கூற்றைத் தானே மொழிவார்கள்! இதன் பின்னணி என்ன என்பதைக் காண்போம்.
எந்த ஒரு மனிதனாயினும் அவனுடைய முயற்சிகள் அத்தனையும் பிரயோகித்து எப்படியாகிலும் நாம் ஒரு நல்ல நிலையை அதாவது ஒரு வசதியான வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றே முயற்சி செய்கிறான். அப்படி முயற்சி செய்யும்பொழுது இறைவனின் நாட்டப்படி சிலர் நல்வழியில் சம்பாதித்து முன்னேறுகிறார்கள். சிலர் தீயக் காரியங்களில் முயற்சித்து அந்நிலையை அடைகிறார்கள். சிலர் எந்நிலை முயன்றும், முன்னேறாமல் எப்பவும் போல் ஒரே நிலையில் இருக்கிறார்கள்.
இறைவனின் நாட்டப்படியே அனைத்தும் நடக்கிறது என்பதை அறிகின்ற விசுவாசிகளான மனிதர்கள், மேற்சொன்ன மூன்றாவது நிலையை அடைகின்ற பெற்றோர்கள் எந்நிலையிலும் அவ்வாழ்க்கைக்கு அவர்கள் முழுப் பொறுப்பல்ல என்பதை உணர வேண்டும். இதை மேலும் உணர வேண்டுமாயின் ஒவ்வொருவரும் தத்தமது நிகழ்கால வாழ்க்கையையே உதாரணமாகக் கொள்ளலாம். அதாவது நமது முயற்சி எப்படிப்பட்டது? அதற்காக நாம் செய்கின்ற தியாகங்கள் முதலியன. இதிலிருந்து நாம் எந்த அளவு இன்றைய நிலையில் முயற்சிக்கிறோமோ! அதை போலவே அல்லது அதைவிடக் கூடுதலாகவே நம் பெற்றோர்களும் முயற்சித்து இருக்கலாம். ஆனால் இறைவனின் நாட்டப்படி அவர்களுக்கு உண்டானதை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இதை நாம் முற்றிலும் நன்கு ஆராய்ந்து உணர்ந்தவர்களாக பெற்றோர்களை குற்றஞ்சாட்டுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். மேலும் இறைவன் நமக்கு அருளிய இவ்வாழ்வில் ஒவ்வொருவருடைய தனிப்பெரும் செயலாகவே பொருளீட்டுவதைக் கொள்ள வேண்டும் என்பதை ஆணித்தரமாக கீழ்கண்ட வசன மூலம் அறிகிறோம்.
“தொழுகை முடிவு பெற்றால், பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; நீங்கள் சித்தியடையும் பொருட்டு அடிக்கடி அல்லாஹ்வை நினைவுகூறுங்கள்.” (62:10)
இதை நினைவுகூர்ந்தவர்களாக பெற்றோரை குறை கூறும் தீய வழக்கத்தை மாற்றி, ஒவ்வொருவரும் நல்வழியில் முயற்சி செய்து முன்னேற முயல வேண்டும்.
தாய் தந்தையரிடம் பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வது, பின்னவர்களின் இரு உலக வாழ்க்கைக்கும் மிகப் பெரும் வெற்றியை பெற வழிவகுக்கின்றது. பிள்ளைகளின் மேல் வாழ்க்கைக்காக இருவருமே தங்களைக் கூடுமானவரை அர்ப்பணித்திருக்கிறார்கள். இதை உணர்த்தும் விதமாகவே இறைவன்:
“தனது தாய், தந்தை(க்கு நன்றி செய்வது) பற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து, (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள். (அவன் பிறந்த) பிறகும் இரண்டு வருடங்களுக்கப் பின்னரே அவனுக்கு பால் மறக்கடித்தாள். (ஆகவே. மனிதனே) நீ எனக்கும், உன்னுடைய தாய், தந்தைக்கும் நன்றி செலுத்தி வா, (முடிவில் நீ) என்னிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது. (31:14)
இன்று பெரும்பான்மையான இளைஞர்களின் பெற்றோருடைய தொடர்பு மிக ஒரு மோசமான நிலையிலேயே அமைந்துள்ளது. இதற்கு பெற்றோர்களும் முக்கிய காரணமாக அமைகிறார்கள். காரணம், மார்க்க விசயங்களில் அவர்கள் அக்கறை காட்டாததினாலே இந்நிலை அமைகிறது. இறைக் கட்டளைகளை அறிந்து, அதன்படி நடக்க வேண்டும், மேலும் அதில் தான் வெற்றியிருக்கிறது என்று நினைத்து பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை வளர்த்து இருந்தால், இந்நிலைகளை அடைய வாய்ப்பில்லாமல் போயிருக்கும். இதைத் தவிர்த்துத் தங்களின் மனோ இச்சைகளின்படி இறைவனுடையக் கட்டளைகளை மறந்து அல்லது தங்களுடைய வசதிக்குத் தக்கபடி இறைக்கட்டளைகளை ஏற்று நடக்கும்பொழுது, அவர்கள் வளர்க்கும் பிள்ளைகளும் வாழ்க்கையில் ஒரு பற்றுதல் இல்லாமல் அதாவது மறுமையைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல் ஏதோ வாழ்கிறோம் என்ற நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்நிலைக்குத் தள்ளப்படும் பிள்ளைகள் காலப்போக்கில் தாய் தந்தையரை மதிக்காமல் அசட்டையாகவே வாழ முற்படுகிறார்கள்.
இதை தவிர்க்க வேண்டுமெனில் ஒவ்வொருவரும் இறைக்கட்டளைகளின்படி வாழ முழு முயற்சி செய்தவர்களாக தாங்களும் நல்வழியில் நடந்து தத்தமது பிள்ளைகளையும் அந்நிலையில் வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். அப்படியே ஏதோ காரணங்களினால் பெற்றோர்களே தவறுகள் செய்திருந்தாலும் (மனித இயல்புத்தானே!) பிள்ளைகள் அவற்றை மறந்து, அவர்களை அறவணைத்து வாழ முற்பட வேண்டும். இது இரு சாரருக்கும் பொருந்தும். தவறு செய்பவர்களிடம் அல்லது செய்தவர்களிடம் நாம் மென்மையாக எடுத்துச் சொல்லி அவர்களின் தவறுகளைக் களைய முயல வேண்டும். நமது தளராத அரவணைப்பால், காலப்போக்கில் அவர்களே தங்களின் தவறுகளை உணர்ந்து நமக்காக வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கும் ஒரு நிலைக்கு ஆளாகிவிடுவார்கள்.
நாம் இவ்வுலகில் வாழும் காலமெல்லாம், பெற்றோர்களுக்கு நம்மால் இயன்றவரை உதவிகளை செய்வதை நமது தலையாயக் குறிக்கோளாக கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் கூறும் நல்ல ஆலோசனைகளை அது இறைக்கட்டளைக்குட்பட்டதாயின் செவியேற்ற அமுல் நடத்த முற்பட வேண்டும். இதன் தராதரத்தை அறியும் விதமாகவே இறைவன் :
தாய் தந்தைக்கு நன்மை செய்யும் விதமாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றோம். (எனினும்) நீ அறியாத (எவ்வித ஆதாரமும் இல்லாத)வைகளை எனக்கு இணையாக்குபடி (மனிதனே!) அவர்கள் உன்னை நிர்ப்பந்திப்பதால், (அவ்விஷயத்தில்) நீ அவ்விருவருக்கும் வழிபடாதே! (என்னிடமே) நீங்கள் திரும்ப வேண்டிதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி அது சமயம் நான் உங்களுக்கு அறிவிப்பேன்.  (29:8)                                                         மேலும் நபி (ஸல்) கூறுகிறார்கள்.
பெரும்பாவங்களான: அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோருக்கு இடர் செய்தல், கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவைகளாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (அப்துல்லாஹ்பின் அம்ரு(ரழி) புகாரீ)
மேற்காண்பவற்றிலிருந்து பெற்றோர்களை அரவணைத்து நடப்பது, நமது இரு உலக வாழ்க்கைக்கு ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது என்பதை அறிகிறோம். இதை உணர்ந்தவர்களாக, பெற்றோர்களிடம், அன்பாகவும், கனிவாகவும், மேலும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை நம்மால் இயன்றவரை செய்து நமது இரு உலக வாழ்க்கையிலும் வெற்றி பெற்றவர்களாக வாழ சகோதர, சகோதரிகள் முன் வருவார்களாக! அல்லாஹ் உதவி செய்ய போதுமானவன்.


M. நிஃமத்துல்லாஹ், பூச்சிக் காடு

0 comments to “தாய் தந்தையரின் முக்கியத்துவம்”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates