திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Wednesday, November 24, 2010

ஹஜ் எனும் புனிதப் பயணம்

,


காட்சி ஒன்று:

* அது ஒரு வனாந்தரம்....புல்லுமில்லை, நீருமில்லை, மக்களுமில்லை, மனிதமும் இல்லை...வெயில் கொளுத்தும் பாலையில் நிழலுக்கும் தாகமெடுக்கும் கோடை. திருமணம் முடித்து குழந்தையும் பிறந்த பின், பச்சை மண்ணையும் அதன் தாயையும் பாலைவன மண்ணில் விட்டுவிட்டு திரும்பியும் பாராமல் நடக்கிறார் கணவன்*...

காட்சி இரண்டு:

* பசித்தது பிள்ளைக்கு, பொட்டலத்தில் இருந்ததும் தீர்ந்து போய் நா வறண்டு அழுத தாய்க்கு உதவி செய்யவோ அல்லது என்னவென்று விசாரிக்கவோ எவரும் இலர். தவமிருந்து பெற்ற தங்கப் பாலகனை தனியே கொதி மணலில் விட்டு விட்டு மலைகளின் நடுவில் ஓட ஆரம்பித்தாள் தாய்**...


காட்சி மூன்று:

* கட்டளை கிடைத்தது கனவில், கொல்லும்படி தன் உயிரினும் மேலான மகனை. பிறந்த சில வருடங்களிலேயே இறைவனுக்காக தாயையும் தந்தையையும் வளர்த்த ஊரையும் பிரிந்த தனயனுக்கு தன் மகனை கொல்லும்படி கனவு வந்ததும் அஞ்சவில்லை, அசரவில்லை, உயிரினும் மேலாய் நேசித்த தன் மகனை தானே பலியிடவும் தயக்கமின்றி புறப்பட்டார் அத் தந்தை*...

காட்சி நான்கு:

* அழைத்தவர் தந்தையானாலும் எதற்கு என்று எதிர்க் கேள்வியில்லை. உன்னை பலியிடவே அழைத்துப் போகிறார், சொன்னது சாத்தான். கேட்டவுடன் புத்தி மாறவில்லை, தந்தையுடன் விவாதம் செய்யவில்லை, மாறாக சாத்தானை கல்லால் அடித்தார் மகன், தந்தையின் பாசத்தை அறிந்தவராதலால் கூறினார் தந்தையிடம் என்னை குப்புற படுக்க வைத்து பலியிடுங்கள் அப்பா... என் முகத்தை பார்த்தீரானால் ஒருக்கால் உங்கள் நெஞ்சம் இளகி இறைவனுக்கு மாறு செய்ய துணிந்து விட்டால்...தன்னையே பலியிட யோசனை கூறியவர் அந்த குடும்பத்தின் அடுத்த தியாகி, மகன்***...

காட்சி ஐந்து:

* யாரை அழைப்பது, யார் வந்து தொழுவர் இந்த ஆலயத்தில், எங்கிருந்து வருவர், எதன் மீதேறி வருவர், என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்காது என் கடன் பணி செய்வதே என ஆலயத்தை எழுப்பினர் தந்தையும் தனயனும், அதன் மீதேறி அழைப்பும் விடுத்தனர், நெஞ்சின் துடிப்பை அறிந்த இறைவன் கூறினான், இந்த அழைப்பினை உலகின் கடைசி மனிதன் வரை நான் கொண்டு செல்வேன்....அவர்கள் யாவரும் வருவர் இங்கே தொழ...இறைவனின் வாக்கு பொய்ப்பதில்லை...


தியாகங்களுக்கு பேர் போன அக்குடும்பத்தினரை அந்தரத்தில் விட்டானா இறைவன்? இல்லையில்லை, அனைவரின் வாழ்விலும் அவர்களைப் போல வாழ்வதும், அவர்களின் வேர்வையில் எழுப்பப்பட்ட இறையில்லத்தை தொழுவதும் எம்மவர் வாழ்வில் கடமையாக்கினான். இதோ அந்த தந்தை, தாய், தனயனின் வாழ்வை, சில காலமேனும் வாழ்ந்து பார்க்கவும், அந்த இறையில்லத்தில் தொழுதிடவும் வேளை வந்துவிட்டது நம்மில் பலருக்கு. என் அம்மியும், அப்பாவும் இவ்வருடம் இந்த புனித பயணத்திற்கு தயாராகிறார்கள் இன்ஷா அல்லாஹ்.

இன்னும் இரண்டு நாட்களில் பயணம், என் உயிர் அங்கிருக்க உடல் மட்டும் கொண்டிங்கு வேதனையுடன் இருக்கின்றேன்....அந்த புனித பயணத்திற்கு வழியனுப்பி வைக்க முடியாத சூழ்னிலை....அந்த பரவசத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை...கண்ணீரும், உற்சாகமும் பீரிடும் அந்த வேளையை கூடவே இருந்து சுவைக்க முடியாத் ஓர் நிலை....எனினும் அம்மி, அப்பா...இருவரிடத்திலும் மீண்டு கூறுகிறேன்...எனது பாக்கியம் நான் தங்களுக்கு பெண்ணாய் பிறந்தது, எனது சுவர்க்கம் தங்களுடன் என் பால்யத்தையும், விவாகம் வரைக்கும் உண்டான காலத்தை கடந்தது, என் வெற்றிகள் அனைத்திற்கும் வேராய் இருந்த தங்களின் ஹஜ் சுகமானதாய் அமையவும், அல்லாஹ்வினிடத்தில் கபூல் செய்யப்படவும், உடலும் மனமும் சுகமாய் நீங்கள் இருவரும் ஊர் திரும்பிடவும், எல்லாம் வல்ல அர் ரஹ்மான் அருள் புரிவானாக. ஆமீன். சகோதரிகளே, சகோதரர்களே...என் தாய் தந்தைக்காகவும், இன்னும் இந்த வருடம் ஹஜ் செய்யும் யாவருக்காகவும் து'ஆ செய்வீர்களாக.
யாவரின் ஹஜ்ஜையும் கபூல் செய்து, எந்த வித அசம்பாவிதங்களும் இன்றி, யா அல்லாஹ் அனைவரையும் திருப்தியுடனும், உடல் மற்றும் மன நலத்துடன் ஹஜ்ஜை முடித்தும் தருவாயாக. ஆமீன். ஆமீன். யாரப்புல் ஆலமீன்.
homeschoolingintamil

0 comments to “ஹஜ் எனும் புனிதப் பயணம்”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates