திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Wednesday, November 24, 2010

மார்க்கம் என்பது பிறர் நலம் பேணுவதே!

,
ஒருவருக்கொருவர் கூடி வாழும் ஒற்றுமையான வாழ்க்கை முறைக்கு உதாரணமாக இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் மிக அழகாக மனித உடலை உதாரணம் காட்டுகிறார்கள்.

தங்களிடையே கருணை காட்டுவதிலும் தங்களிடையே அன்பு செலுத்துவதிலும் தங்களிடையே இரக்கம் கொள்வதிலும் இறை நம்பிக்கையாளர்களை ஒரு உடல் போல் நீர் காண்பீர். உடலில் ஓர் உறுப்புக்குச் சுகவீனம் ஏற்பட்டுவிட்டால் அவ்வுடலின் மற்ற உறுப்புகள் உறங்காமலும் காய்ச்சல் ஏற்பட்டும் நோய்வாய்ப்படுகின்றன என்று நபி(ஸல்) கூறினார்கள்.

(அறிவிப்பாளர்: நுஃமான் இப்னுபஷீர் (ரலி). ஆதாரம்: புகாரி-6011, முஸ்லிம்-4685, அஹ்மத்-17632)

உடலின் ஒரு பாகத்தில் பூச்சி ஒன்று கடித்துவிட்டால் ஐம்புலன்களும் யோசனை செய்ய நேரம் எடுத்துக்கொண்டிராமல் நொடிப்பொழுதில் சுதாரித்து எழுகிறது. கடித்த அப்பூச்சியை உடனடியாக அடித்துக் கொல்லவோ, விரட்டி அடிக்கவோ உடலின் மற்ற பாகங்கள் விரைகின்றன. கடிபட்ட இடம் உடலின் ஒரு நுனிதானே என்றெல்லாம் எண்ணி பிற பாகங்கள் சும்மா இருப்பதில்லை. கடித்த பூச்சியை அடித்துக்கொன்று விடுவதோடு, காயம் ஏற்பட்ட இடத்தின் வலியைப் போக்க தடவியும் கொடுக்கிறது. அப்படியும் கடியின் ரணம் குறையவில்லையெனில் அடுத்த கட்டமாக வலியைப் போக்கும் நிவாரண முறைகளுக்குத் தாவுகிறது. வலியின் பாதிப்பு அதிகமாக இருக்குமானால் அதனால் ஏற்படும் வேதனையின் கடுமையினால் உடல் முழுவதும் காய்ச்சல் ஏற்பட்டுவிடுகிறது.

உலகில் ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு சமூகமோ அநியாயமான முறையில் பாதிக்கப்பட்டால் அதனை தொலைவில் இருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் பிற சமூகத்தினர், பாதிக்கப்பட்டவன் எப்படிப் போனால் எனக்கென்ன? அந்த பாதிப்பு தனக்கு ஏற்படாத வரையில் கவலையில்லை என்று மனிதாபிமானமற்ற நிலையில் கண்களை மூடிக் கவனத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டிருக்காமல் பாதிக்கப்பட்டவனது அல்லது அச்சமூகத்தினரது பாதிப்புக்களைக் குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும். மார்க்கம் என்பது பிறர் நலம் பேணுவதே என்ற நபிகளாரின் பொன்மொழிக்கேற்றபடி சமூகத்தில் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்

அத்துடன், சுதந்திரமாகவும், கண்ணியமாகவும், கௌரவத்துடனும் இச்சமூகம் நிலை பெறுவதென்பது அநியாயக்காரனுக்கு முன் "நீ செய்வது அநியாயம்" என்று அச்சமின்றிச் சொல்லும் ஆற்றல் மிக்க வீரர்களால் மட்டுமே சாத்தியமாகும். பாதிப்படைந்த சகோதரன் ஒருவனுக்கு இந்நிலையை ஏற்படுத்திய அநியாயக்காரனைக் கண்ட பின்னும் ஒரு சமூகத்தில் எப்போது அச்சமின்றி சத்தியத்தை எடுத்துரைக்கும் ஒரு கூட்டம் இல்லையோ அப்போது ஒட்டு மொத்த சமுதாயமும் வீழ்ச்சியை சந்திக்கும்.

தனது சகோதரனின் துயரத்தில் பங்கு கொள்ளாமல், சிந்தும் கண்ணீரைத் துடைக்காமல் அலட்சியப்படுத்தி சுயநல வாழ்க்கை வாழும் மனிதன் அடையப்போகும் சஞ்சலம், கைசேதம் மற்றும் இறுதி நாளில் இது பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதிலைப் பற்றி சிறிது சிந்திக்கவேண்டும். மறுமை நாள் வந்தபின் இவ்வுலகிற்கு மீண்டு வர இயலுமா என்ன?


ஆக்கம்: அபூ ஸா

0 comments to “மார்க்கம் என்பது பிறர் நலம் பேணுவதே!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates