திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Saturday, November 20, 2010

முஸ்லிம்களின் வக்பு நிலத்தில் அம்பானியின் ஆன்டிலியா, ஒரு மர்ம மாளிகை.

,
ழை முஸ்லிம்கள் இருக்க இடமின்றி சேரிகளிலும் ,தெருவோரங்களிலும் வாழ்ந்து வரும் நிலையில், அந்த முஸ்லிம்களின் வக்பு நிலத்தை ஆக்கிரமித்து கடத்தப்பட்டு வரும் அம்பானியின் ஆண்டிலியா மாளிகை உலகின் மாபெரும் மாளிகை என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது! இது குறித்து மகாராஷ்டிரா சிறுபான்மை நலத்துறை கொடுத்த புகாரின் பெயரில் இன்று அம்பானியின் மாளிகையில் அரசு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக செய்திகள் வந்துள்ள நிலையில் ,இந்த மளிகை பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெறுகின்றன! அந்த வகையில் வினவு தளத்தில் வெளிவந்த கட்டுரை!


“ஓரோன் ஒண்ணு, இரோண் இரண்டு”… என்று வாய்ப்பாடு படித்து கூட்டலையும், கழித்தலையும், அதன் சுருக்கங்களான பெருக்கலையும், வகுத்தலையும் படித்திருக்கும் தேசமே! நீ படித்து தெளிய முடியாத கணக்குகளும் எண்களும் இங்கு உண்டு. சொத்துடைமையின் நதி மூலத்தை பின் தொடர்ந்தால் கண்ணுக்கு தெரியும் அந்த மாய மாட்ரிக்ஸ் உலகத்தை எந்த கணித வல்லுனனும் கட்டவிழ்க்க முடியாது. அது கணிதத்தின் தோல்வியா, கணிதத்தின் சட்டதிட்டங்களுக்கு அடங்காத ‘கலையா?

மக்கள் தொகை கணக்கெடுப்பில் மட்டும்தான் மக்கள் வருவார்கள். மற்ற கணக்கெடுப்புகளெல்லாம் பங்குகளின் முதல்வோரைகளைத்தான் சுற்றி வரும். கணிதத்தில் கூட வர்க்க வேறுபாடு துல்லியமாக நிலவுகிறது என்பது கணிதத்தின் குற்றமா, கணக்கு பார்க்க தெரியாத இந்த தேசத்தின் குற்றமா?

எங்கும் இறைந்து கிடக்கின்றன புள்ளிவிவரங்கள். நோய், சாவு, பசி, பஞ்சம், பட்டினி முதலான விவரங்களால் சலித்திருக்கும் உங்கள் கண்களை கனவோடு மின்ன வைக்கும் புள்ளிவிவரங்களும் இந்த உலகில் உண்டு. கனவிலும் எட்ட முடியாத அந்த கனவுகளின் கணக்குகளை வெளியிடுகிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. கேள்விப் பட்டிருப்பீர்களே, உலகின் பணக்காரர்களது பட்டியல்களை….

ஃபோர்ப்ஸ் பத்திரிகை செய்திருக்கும் மதிப்பீட்டின்படி 2014ஆம் ஆண்டில் உலகின் முதல் பணக்காரர் யார் தெரியுமா? அவர் முகேஷ் அம்பானி என்ற இந்தியன்தான் என்றால் உங்களுக்கு பெருமை இல்லையா? 70,000 கோடி ஊழல் பணமென்றாலும் காமன்வெல்த்தில் இந்தியா பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் வந்தபோது நீங்கள் பெருமைப்படவில்லையா என்ன? தகுதி, தராதரம் பார்த்தெல்லாம் நாம் பெருமைப்படுவதில்லை எனும் போது உலக பணக்கார வரிசையில் முதலிடம் ஒரு இந்தியனால் நிரப்பப்படப் போகிறது என்றால் சாதரணமா என்ன?

அந்த வரலாற்று சிறப்பைப் பெறப் போகும் முகேஷ் அம்பானி தன் தகுதியை முன் ஊகித்திருப்பாரோ தெரியவில்லை. இல்லையென்றால் அவரது தகுதிக்கேற்ப இத்தகைய பிரம்மாண்டமான மாளிகையை ஏழு ஆண்டுகளாக கட்டியிருக்க மாட்டார். 5000 கோடி ரூபாயில் கட்டப்பட்ட அந்த மாளிகை விற்பனைக்கு இல்லை என்பதால் உலகின் அதிக மதிப்பு வாய்ந்த வீடு என்று அதை புகழ முடியவில்லை என்று வருத்தப்படுகிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. ஆனால் மதிப்பெல்லாம் விற்பனையின் சாம்ராஜ்ஜியத்தில் அடங்காது என்பது அந்த பத்திரிகைக்கு மட்டுமல்ல அம்பானிக்கும் தெரியும்.

சில ஆயிரங்களை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் மராட்டிய விவசாயிகள் வாழும் விதர்பாவின் தலைநகரான மும்பையில் ஒரு பில்லியன் டாலர் செலவில் அம்பானி கட்டிமுடித்து புதுமனைப் போகும் அந்த மாளிகையின் அருமை பெருமையெல்லாம் ஊடகங்களில் நிரம்பி வழிகின்றன.

.
27 மாடிகள், 9 உயருந்துகள், மாளிகையை பராமரிக்க 600 ஊழியர்கள், மூன்று ஹெலிகாப்டர் இறங்கும் தளங்கள், நீச்சல் குளங்கள், கண்ணாடிகளால் செதுக்கப்பட்ட உணவகம், அதி நுட்பமான திரையரங்கம், உடற்பயிற்சியகம், 160 கார்கள் நிறுத்துமிடம், கார்களை பழுதுபார்க்குமிடம், சிறு மருத்துவமனை, விருந்தினர் அறைகள், கருத்தரங்க அறைகள் கிட்டத்தட்ட அங்கு ஒரு மேட்டுக்குடி ஹைடெக் நகரமே இருக்கிறது. இந்த மாளிகையில் மூன்று குழந்தைகளோடு அம்பானி தம்பதியினர் தங்கப்போகும் இடத்தின் பரப்பளவு 5,00,000 சதுர அடிகள்…
பத்துக்குப் பத்து இடத்தில் பத்து ஏணிக் கட்டில்களை வைத்து பொந்துகளைப் போல பதுங்கி வழியும் சேரிகளின் நகரத்தில் அரபிக் கடலைப் பார்த்தவாறு எக்காளத்துடன் எழுந்து நிற்கிறது இந்த மாளிகை. உலகின் முதல் பணக்காரர் தங்கப் போகும் அந்த மாளிகையை பல்லாயிரம் தொழிலாளிகள் ஏழு ஆண்டுகளாக கட்டி இல்லை இழைத்து இழைத்து உருவாக்கியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒரு ஆஸ்திரேலியா நிறுவனமும் பின்னர் ஒரு அமெரிக்க நிறுவனமும் இந்த பெருமை மிகு இந்தியனது மாளிகையை கட்டி முடித்திருக்கின்றன.

அக்டோபர் 28 இல் திறக்கபட உள்ள இந்த மாளிகையின் பால் காய்ச்சும் நிகழ்விற்கு பிரதமர் மன்மோகன் சிங் வருகிறாராம். மத்திய அரசின் பட்ஜெட்டே ரிலையன்சின் அலுவலகத்தில் திருத்தப்பட்டு வெளிவரும் காலத்தில் பிரதமர் ரிலையன்சின் உரிமையாளர் வீட்டு திருவிழாவிற்கு வருவது பொருத்தமானதுதான். மத்திய அரசு கிராமத்து மக்களுக்கு வீடு கட்டிக்க கொடுக்கும் திட்டத்தின்படி வீடு ஒன்றுக்கு ஒதுக்கியிருக்கும் தொகை அறுபதாயிரம் மட்டும்தான். இதேதொகை அம்பானி வீட்டில் எச்சில் துப்பும் ஒரு கிண்ணத்தின் விலையருகே கூட வராது. விருந்தினர்களில் பிரதமரே இருப்பதால் மற்றவர்களை இங்கே நாம் பட்டியலிட வேண்டியதில்லை.

நடுத்தர வர்க்கத்தின் கனவில் முதலிடம் பிடிப்பது வீடுதான். அந்தக் கனவிற்காக படும் ‘துன்பங்களை, தியாகங்களை’ பாலுமகேந்திராவின் “வீடு” திரைப்படத்தில் கண்டு உருகாதவர் எவருண்டு? இல்லை “காணி நிலம் வேண்டும், பராசக்தி” என்று பாரதியின் படிமங்களில் மூழ்காதவர் யார்? குழந்தைகளைப் பெற்று வளர்த்து, ஒரு வீட்டைக்கட்டி முடித்துவிடுவதிலேயே வாழ்க்கை கழிந்துவிடுமென்றாலும் அந்த இன்பமான துன்பத்தை நடுத்தர வர்க்கம் விரும்பித்தான் செய்கிறது.

அந்த நடுத்தர வர்க்கம் பிறந்த நாளுக்கு விழா வைத்து கொண்டாடும் இந்த நாட்டில்தான், இதே நாட்டில்தான் பிறந்த தேதி கூட தெரியாமல் கோடிக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். ஒண்டுவதற்கு ஒரு ஓட்டையில்லாதா கூரை கிடைக்குமா என்று தவிக்கும் மக்கள் வாழும் நாட்டில் ஒரு சொந்த வீடு குறித்த கனவும் அதை நிறைவேற்ற அழைக்கும் வங்கிக் கடன்களும் பார்ப்பதற்கு உறுத்தலாக இல்லையா?

ஆனாலும் அம்பானியின் மாளிகை சாதாரண நடுத்தரவர்க்க கனவின் வெளிப்பாடு அல்ல. அது பொருளாதார சாம்ராஜ்ஜியத்தின் வலிமையை பறைசாற்றும் ஒரு பிரகடனம். எனினும் அந்த மாளிகைக்கு அம்பானி வைத்த பெயர் ஆன்டிலியா. பொருள் என்ன? அட்லாண்டிக் கடலில் இருக்கும் ஒரு மர்மமான தீவின் பெயராம் அது. பொருத்தம் நன்றாகத்தான் இருக்கிறது. அதாவது அம்பானியின் ஆன்டிலியா, ஒரு மர்ம மாளிகை.

இந்திய முதலாளிகளிலேயே ஏமாற்று, மோசடி, அதிகார பலம், அரசியல் துஷ்பிரயோகம் அனைத்திலும் சாதனை படைத்து தனது பேரரசைக் கட்டியவர் செத்துப் போன அம்பானி. அவர் சேர்த்த சொத்து அனைத்தும் மொள்ளமாரி, முடிச்சவிக்கி வழியில் வந்ததுதான். அம்பானி வளர்ந்த கதையில் நதி மூலம் ரிஷி மூலம் பார்க்க முடியாது. ஆக அந்த வரலாற்றுக்கு உகந்த விதத்தில்தான் இந்த மர்ம மாளிகைக்கு ஆன்டிலியா பெயர் பொருத்தமாகவே இருக்கிறது.

விரைவில் ஆன்டிலியா மாளிகையின் அருமை பெருமைகள் குறித்து கிழக்கு பதிப்பகம் ஒரு புத்தகத்தை வெளியடலாம். ஊடகங்கள் அதன் சிறப்புகளை வியந்தோதி வரும் நாட்களில் பொழிப்புரை செய்திகளை தரலாம்.

ஆன்டிலியா உருவான விதம் குறித்த புள்ளி விவரங்கள் தினசரிகளை நிரப்பலாம். ஆனாலும் ஆன்டிலியாவின் பின்னே தூக்கில் தொங்கிய விவசாயிகளின் புள்ளிவிவரங்களும் இருக்கத்தான் செய்கின்றது. மதிப்பு பெறும் புள்ளிவிவரம் எதுவென்று சொரணை வரும்போது ஆன்டிலியாவின் மதிப்புக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்படும். அதுவரை புள்ளிவிவரங்கள் ஆபாசமாக ஆட்டம் போடும். இரசிப்பீர்களா, காறி உமிழ்வீர்களா?

கருத்து :
முஸ்லிம்களின் வக்பு சொத்துக்களை ஆலயத்தின் பெயரால் காவிக்கும்பலும், நீதி மன்றங்களும் , அரசுதுறைகளும், அறிவாலயத்தின் பெயரால் அரசியல்வாதிகளும் ,அபகரித்து கொண்டிருக்க அம்பானியும் தன்பங்குக்கு ,இவ்வளவு பெரிய இடத்தை வெறும் பதினாறு லட்சத்திற்கு பத்திரம் போட்டுள்ளார். அதிகார வர்கத்தின் அடிமைகளாக மாறிப்போய் ஊழலில் திளைக்கும் வக்பு வரியா உறுப்பினர்களை , அதிகாரிகளை , கடுமையாக தண்டிக்காத வரை இவை மாறப்போவதில்லை! அரசு இதை செய்ய விட்டால் அல்லாஹ்வின் சொத்துக்களை பாதுகாக்க முஸ்லிம்கள் அபாபீல் பறவைகளாக மாற வேண்டும். இன்ஷா அல்லாஹ் விரைவில் அந்நிலை வரும்!

0 comments to “முஸ்லிம்களின் வக்பு நிலத்தில் அம்பானியின் ஆன்டிலியா, ஒரு மர்ம மாளிகை.”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates