திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Saturday, November 20, 2010

ஸலாம் கூறுவதன் சிறப்பு.......

,
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

(இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)


இஸ்லாத்தில் சிறந்தது:
இந்த உலகத்தைப் படைத்து அதில் பலவகையான உயிரினங்களைப் உருவாக்கி அவற்றிலே மிகச்சிறந்த படைப்பாக மனிதனைப் படைத்த இறைவன் அவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்ற அழகிய வழிமுறைகளையும் அவனது இறுதிதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகத் தந்துள்ளான். அவற்றில் ஒன்று தான் முகமன் (ஸலாம்) கூறுதல் ஆகும்.
இன்றைய காலக்கட்டங்களில், நம்மிடையே ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் கூறுதல் என்பது மிக அரிதாகிவிட்டது. அப்படியே சொன்னாலும் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு பார்த்து ஸலாம் கூறி வருகிறோம். நபி (ஸல்) அவர்கள் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருக்கும் ஸலாம் கூறுவதை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் ஸலாம் சொல்வதுமாகும்’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி),
ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி 6236
''இறைவன் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து, அங்கே இருந்த வானவர் (மலக்கு)களிடம் சென்று அவர்களுக்கு ஸலாம் கூறும்படியும், அதற்கு அவர்கள் என்ன பதில் கூறுகின்றார்கள் என்று செவியேற்கும்படியும், அதுதான் உமக்கும் உமது வழித்தோன்றல்களுக்கும், முகமன் (கூறும் முறை) என்றும் சொன்னான். அப்போது ஆதம்(அலை) அவர்கள், அவ்வாறே 'அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூற, வானவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி என்று கூறி ரஹ்மதுல்லாஹி என்பதை அதிகப்படுத்திச் சொன்னார்கள் என்று நபி (ஸல்)  அவர்கள் கூறினார்கள்"
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
(நூல்: புகாரி, முஸ்லிம்)  
அல்லாஹ் கூறுகிறான் :
"உங்களுக்கு வாழ்த்துக் கூறப் பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்"
-  (அல்குர்ஆன் 4 : 86)   ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிம்முக்கு செய்ய வேண்டிய கடமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிம்­முக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து ஆகும். அவை ஸலாமுக்குப் பதிலுரைப்பது. நோயாளியை நலம் விசாரிப்பது. ஜனாஷாவை பின் தொடர்வது. விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. துமமுபவருக்கு பதிலுரைப்பது ஆகியவை ஆகும்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி)
நூல் : புகாரி (1240)
 
முழுமையாக ஸலாம் கூறுவதன் சிறப்பு: -
”நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ”அஸ்ஸலாமு அலைக்கும் ” என்று கூறினார். நபியவர்கள் அவருக்கு பதில் ஸலாம் கூறினார்கள். பின்னர் அவர் உட்கார்ந்தார்.  நபி (ஸல்) அவர்கள் (இவருக்கு) பத்து (நன்மைகள்) என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் கூறியவுடன் அவர் அமர்ந்தார். நபியவர்கள் ”(இவருக்கு) இருபது (நன்மைகள்)” என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ்‎” என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் பதில் கூறினார்கள். பிறகு அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்) அவர்கள் ”(இவருக்கு) முப்பது (நன்மைகள்)” என்று கூறினார்கள்.”
அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹசைன் (ரலி)
நூல் : அபூ தாவூத் (4521)

’நீங்கள் இறை விசுவாசம் கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும் வரை, நீங்கள் இறை விசுவாசிகளாக  ஆக முடியாது. நீங்கள் எதைச் செய்தால் அன்பு செலுத்திக் கொள்வீர்களோ,அதை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது) உங்களுக்கிடையே ஸலாம் கூறுவதை பரப்புங்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : முஸ்லிம், ரியாளுஸ்ஸாலிஹீன்  848

 ’மனிதர்களே! ஸலாம் கூறுவதை பரப்புங்கள். பசித்தவனுக்கு உணவளியுங்கள். உறவினர்களை ஆதரியுங்கள். மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் தொழுங்கள். ’ஸலாம் கூறுவது மூலம் சொர்க்கத்தில் நுழையுஙகள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர் : அப்துல்லா இப்னு ஸலாம்(ரலி)
ஆதாரம் : திர்மிதீ, ரியாளுஸ்ஸாலிஹீன்: 849
வீடுகளில் நுழையும் முன் ஸலாம் கூறுவதன் அவசியம்: -
அல்லாஹ் கூறுகிறான்: -
"நீங்கள் உங்கள் இல்லங்களில் நுழையும் போது, அல்லாஹ்விடமிருந்து வழங்கப்பட்ட அருள் மிகு நல்வாழ்த்தை(அமைதியை) கொண்டு ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொள்ளுங்கள். அல்லாஹ் தமது வசனங்களை நீங்கள் விளங்கி கொள்வதற்காக உங்களுக்கு தெளிவாக்கியுள்ளான்.                                                                                       - (அல்குர்ஆன் 24 : 61)

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).                     - (அல்குர்ஆன் 24 : 27)

 ”மகனே! உன் குடும்பத்தாரிடம் நீ சென்றால், நீ ஸலாம் கூறு! அது உனக்கும், உன் வீட்டில் இருப்போருக்கும் அபிவிருத்தியாக இருக்கும்” என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர் :  அனஸ் (ரலி)
நூல் :  திர்மிதீ, ரியாளுஸ்ஸாலிஹீன்: 861

”நபி (ஸல்) அவர்கள் (சபையோருக்கு அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) ஸலாம் கூறினால் மூன்று முறை ஸலாம் கூறுவார்கள்.”
அறிவிப்பவர் : அனஸ் (ரலி­)
நூல் : புகாரி (6244)

ஸலாம் கூறுவதில் முந்திக் கொள்பவரே சிறந்தவராவார்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” மக்களில் அல்லாஹ்விடத்தில் மிகவும் நெருக்கத்திற்குரியவர் அவர்களில் முத­ல் ஸலாம் கூறுபவரே ஆவார்”
அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி
­)
நூல் : அபூதாவூத் (4522)
''இரண்டு பேர் சந்தித்து இவர் அவரைப் புறக்கணித்து; அவர் இவரைப் புறக்கணித்து (இப்படி) ஒரு முஸ்லிம் தன் சகோதரரான இன்னொரு முஸ்லிமை மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பது கூடாது. (இந்நிலையில்) அவ்விருவரில் எவர் முதலில் 'ஸலாம்" (சொல்லிப் பேச்சை) ஆரம்பிக்கிறாரோ, அவரே சிறந்தவர் என்று நபி (ஸல்)  அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஅய்யூ அல் அன்ஸாரி (ரலி­)
நூல் : புகாரி, முஸ்லிம், அபூ தாவூத்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”இரண்டு முஸ்­ம்கள் சந்தித்து முஸாஃபஹா செய்தால் அவர்கள் இருவரும் பிரிவதற்கு முன்னால் அவர்களுடைய (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.
அறிவிப்பவர் : பரா பின் ஆஸிப் (ரலி
­)
நூல் : திர்மிதி (2651)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” உன்னுடைய சகோதரனைச் சிரித்த முகத்தோடு சந்திப்பது உட்பட நற்காரியங்களில் எதனையும் இழிவாகக் கருதிவிடாதே”
அறிவிப்பவர் : அபூதர் (ரலி
)
நூல் : முஸ்லி­ம் (4760)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”சிறியவர் பெரியவருக்கும் , நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும் , சிறுகுழுவினர் பெருங்குழுவினருக்கும் (முத­ல்) ஸலாம் சொல்லட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி­) 
நூல் : புகாரி (6231)

அனஸ் (ரலி­) அவர்கள் சிறுவர்களைக் கடந்து செல்லும் போது அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள். இன்னும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள் என்றும் கூறினார்கள்
நூல் : புகாரி ( 6247 )
 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ” உங்களில் ஒருவர் தன்னுடைய சகோதரரை சந்தித்தால் அவருக்கு ஸலாம் கூறட்டும். அவர்கள் இருவருக்கும் மத்தியில் ஒரு மரமோ, அல்லது சுவரோ அல்லது கல்லோ குறுக்கிட்டு பிறகு அவரைச் சந்தித்தாலும் மீண்டும் அவருக்கு ஸலாம் கூறட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி
­) 
நூல் : அபூ தாவூத் (4523)
இன்றைய காலக்கட்டத்தில் வழக்கத்தில் வணக்கம், நல்ல காலை பொழுது அல்லது நல்ல மாலைப் பொழுது, காலை, மாலை வணக்கம் போன்ற பலவிதமான முகமன்கள் இருக்கின்றன. அவைகளை எல்லா நேரங்களிலும் அல்லது எல்லா சூழ் நிலைகளிலும் பொருந்தக் கூடியதா என்றால் நிச்சயமாக இல்லை. ஒருவருடைய மனைவியோ அல்லது வேறு உறவினரோ இறந்து அவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்ற வேளையில் அவரிடம் சென்று Good Morning அல்லது Good Evenining என்று கூறினால் அது எப்படி அவரை கேலிக்குரியதாக்கும் என நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு மனிதர்களால் உருவாக்கப்பட்ட முகமன்கள் அனைத்தும் குறையுடைதாகவே இருக்கிறது.
ஆனால் அனைத்தும் அறிந்தவனான அல்லாஹ் நமக்கு கற்றுத்தந்த இந்த அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) என்ற இந்த முகமன் காலை, மாலை, இரவு போன்ற எந்த நேரத்திலும், துக்கம், இன்பம் போன்ற எல்லா சூழ்நிலைகளிலும் ஒருவருக்கு கூறுவதற்கு மிகப் பொருத்தமானதாக இருக்கிறது.
எனவே சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வால் அருளப்பட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட சலாத்தை நாம் ஒவ்வொருவரும் மற்றவரிடம் பரப்பி நம்முடைய உள்ளங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வல்ல அல்லாஹ் அருள்புரிவானாகவும்.  மணலி . அஷ்ஃபாக்                                                                                                                                                 

0 comments to “ஸலாம் கூறுவதன் சிறப்பு.......”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates