திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Saturday, December 25, 2010

விலைக்கு வாங்கப்படும் தீர்ப்புகள் : ஊழல் மலிந்துவிட்ட நீதித் துறை!

,
ந்தியாவில் அதிக அதிகாரம் படைத்த அமைப்புகளில் நீதிமன்றங்களும் அடக்கம். 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு மற்றும் மத்திய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனம் குறித்த வழக்குகளில் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்ததே நீதிமன்றங்களின் அதிகாரத்திற்குச் சான்றாகும். இருப்பினும் சில நீதிமன்றங்களில் நீதி விற்கப்படுவதாக வெளியான செய்தியால்  நீதித் துறையிலும் ஊழல் மலிந்து விட்டது எனச் சமீபகால நிகழ்வுகள் வலுப்படுத்துகின்றன.

மனுநீதிச் சோழனின் மகன் ஊர் உலாச் சென்ற போது அவனது தேர்ச்சக்கரத்தில் அடிபட்டுத் தன் கன்றை இழந்து பரிதவித்த தாய்ப்பசு வேதனையுடன் மனுநீதிச் சோழனின்ஆராய்ச்சி மணியை அடித்து முறையிட்டதாகவும் அத்தாய்ப் பசுவின் வேதனை அறிந்த மனுநீதிச் சோழன் தன் மகனையும் அவ்வாறு தேர்ச்சக்கரத்தை ஏற்றிக் கொன்று நீதி வழங்கியதாகவும் படித்துள்ளோம்.

தன் மகனைக் கொன்று பசுவுக்கு நீதி வழங்கிய மனுநீதிச் சோழனின் சிலையை நீதிக்கு அடையாளமாக வைத்துள்ள சென்னை உயர்நீதி மன்றத்தில்,போலி மதிப்பெண் குறித்த கிரிமினல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவருக்குச் சாதகமாக நடந்து கொள்ள மத்திய அமைச்சர் ஒருவரின் பெயரைச் சொல்லி  நீதிபதி ரகுபதியை பார் கவுன்சில் தலைவர் சந்திர மோகன் மிரட்டியதாகக் கடந்த வருடம் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து நீதிபதி ரகுபதி தெரிவிக்கையில், மத்திய  அமைச்சர் ஒருவரைத் தொலைபேசியில் அழைத்து,அவருடன் பேசும்படித் தம்மிடம் சந்திரமோகன் வற்புறுத்தியதாகவும் தாம் அமைச்சருடன் பேசாமல், எல்லாம் சட்டப் படி நடைபெறும் என்று தெரிவித்ததாகவும் கூறி இருந்தார். சம்பந்தப் பட்ட அமைச்சரின் பெயரை நீதிபதி குறிப்பிடவில்லை. கடந்த வாரம்  நீதிபதியை மிரட்டிய வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், நீதிபதி ரகுபதியை மிரட்டிய --குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞரும் பார்கவுன்சில்  தலைவருமான-- சந்திரமோகனை பார்கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து நீக்கி அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்துள்ளனர்.

மேலும் நீதிபதி ரகுபதி தாம் மிரட்டப் பட்டது குறித்து அனுப்பிய புகார்க் கடிதம் மீது முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பால கிருஷ்ணன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றசாட்டு எழுந்தது. இது குறித்துப் பேட்டியளித்த முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பால கிருஷ்ணன், நீதிபதி ரகுபதியை மத்திய அமைச்சர் ஒருவர் நிர்பந்தம் செய்ய முயற்சி செய்தது குறித்த செய்தி கேட்டு உடனேயே அப்போதைய சென்னை உயர்நீதிமன்றத் தலைமை  நீதிபதி கோகலேவிடம் விளக்கம் கேட்டதாகவும், கோகலே அளித்த விளக்கத்தில் நீதிபதி ரகுபதியை நிர்பந்தம் செய்ய முயன்ற  மத்திய அமைச்சரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்தார். முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பால கிருஷ்ணனின்  இந்தக் கருத்துக்கு அப்போதைய சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கோகலே மறுப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிர்பந்தம் செய்ய முயன்ற  விவகாரத்தில் நீதிபதி ரகுபதி தமக்குக் கடிதம் எழுதியதாகவும் அந்தக் கடிதத்தில் மத்திய அமைச்சர் ராசாவின் பெயரைக் குறிப்பிட்டிருந்ததாகவும் ரகுபதியின் கடிதத்தையும் இணைத்தே தாம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு விளக்கக் கடிதம் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார் அப்போதைய சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கோகலே. கோகலேவின் மறுப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பால கிருஷ்ணன், நீதிபதி ரகுபதி தமக்குக் கடிதம் எழுதவில்லை என்றுதான் கூறியதாகவும் கோகலே சரியான அறிக்கைதான் அனுப்பி இருப்பார் என்றும் பல்டி அடித்துள்ளார்.

மேலும் நீதிபதி ரகுபதி தம்மை நிர்பந்திக்க  முயன்ற அமைச்சரின் பெயரைத் தெரிவிக்காத  நிலையில் குற்றசாட்டு எழுந்த சில நாட்களில் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா நீதிபதி ரகுபதியை நிர்பந்தம் செய்ய முயன்றது அமைச்சர் ராசாதாம் என்று போட்டுடைத்தார். தற்போது நம் முன் எழும் கேள்வி நீதிபதி ரகுபதிக்கும் அப்போதைய சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கோகலேவுக்கும் மட்டும் தெரிந்த உண்மை ஜெயலலிதாவுக்குத் தெரிந்தது எப்படி? ஜெயலலிதா அனுமானமாக ராசாவின் பெயரைச் சொன்னாரா அல்லது சம்பந்தப் பட்ட நீதிபதிகள் ராசாதான் போனில் பேச முயற்சி செய்தார் என்று ஜெயலலிதாவுக்குத் தெரிவித்தார்களா?

சட்டத்தைத் தமது அதிகாரத்தால் மிரட்டிப் பார்க்க முயன்றதாகச் சொல்லப்படும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவும் அடிப்படையில் சட்டம் பயின்ற ஒரு வழக்கறிஞரே.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள  ராசா, தாம் நீதிமன்றத்தை மதிப்பதாகவும் தாம் எந்தவொரு நீதிபதியையும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவருக்குச் சாதகமாக நடந்து கொள்ளுமாறு வற்புறுத்த வில்லை என்றும் நீதிபதியை நிர்பந்திக்குமாறு யாரிடமும் சொல்ல வில்லை என்றும் மறுத்துள்ளார். சந்திரமோகன் போன்று தமக்குப் பல நண்பர்கள் இருப்பதாகவும் யாரையும் தம் பெயரைப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தாம் சம்பந்தப் பட்ட வழக்கே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் தம்முடைய அதிகாரத்தை ஒருபோதும் தவறாகப் பயன்படுத்த வில்லை என்றும் ராசா தெரிவித்துள்ளார்.
மேலும் ராசா இதில் சம்பந்தப் பட்டு இருந்தாலும் சம்பந்தப் படாமல் இருந்தாலும் இது போல ஒரு ராசா இல்லை பல ராசாக்கள் தங்கள் அதிகாரம் மற்றும் பண பலத்தால் சட்டத்தை வளைத்து நீதியை நிதி கொடுத்து வாங்கி  வருகின்றனர். தம் தந்தை மற்றும் உறவினர்கள் நீதிபதிகளாக இருப்பதால் சில வழக்கறிஞர்கள்  தங்களுக்குச் சாதகமான தீர்ப்பை விலைக்கு வாங்கி அந்தப் பணத்தில் விலை உயர்ந்த சொகுசு கார்கள், ஆடம்பர பங்களாக்கள் என வாங்கி உல்லாசமாக வாழ்ந்து வருவதாக அலஹாபாத் உயர்நீதிமன்ற பெஞ்ச் மீது  உச்ச நீதிமன்றம் பரபரப்புக் குற்றசாட்டைக்  கூறி இருப்பது தீர்ப்புகள் விலைக்கு விற்கப்படுவதை உறுதி செய்துள்ளது.

அண்மையில் தெஹெல்கா பத்திரிக்கைக்குப் பேட்டியளித்த முன்னாள் சட்டத்துறை  அமைச்சர் சாந்திபூஷனின் மகன் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் 16 பேரில்  8 பேர் ஊழல் பேர்வழிகள் என்று தெரிவித்துள்ளார்.  பிரசாந்த் பூஷன் மீது உச்ச நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் பிரசாந்த் பூஷனின் தந்தை சாந்திபூஷன் தம்மையும் அந்த வழக்கில் இணைத்துக் கொள்ளுமாறு பிரமாணப்  பத்திரம் தாக்கல் செய்துள்ளார். மேலும் 8 ஊழல் நீதிபதிகள் குறித்த ஆதாரங்களையும் உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளார்.  இதிலிருந்து நீதித் துறையின் நம்பகத்தன்மையை நாம் எடை போட்டுக் கொள்ளலாம்.
டெல்லி உயர்நீதிமன்ற  முன்னாள் நீதிபதியும் டெல்லியின் பொறுப்புத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவருமான விஜேந்தர் ஜெயினிடம் தமக்குச் சாதகமான தீர்ப்பைப் பெறுவதற்காக ஒருவர்   ரூ 9 கோடி கொடுத்ததாக ஏர்  இந்தியாவின் முன்னாள் தலைவர் சுனில் அரோரா, அரசியல் தரகர்  நீரா ராடியாவிடம் கூறிய உரையாடலும் தற்போது வெளிவந்துள்ளது. பணம் பத்தும் செய்யும்; பணத்தால் எதையும் வாங்கலாம் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தப் பணத்தைக் கொண்டு தீர்ப்பையே விலை கொடுத்து வாங்குவதை நம் கண்ணால் கண்டும் வருகிறோம்.

நில மோசடிப் புகாரில் சிக்கி உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெறும் வாய்ப்பை இழந்த கர்நாடக மாநில முன்னாள் தலைமை நீதிபதி தினகரன் தற்போது சிக்கிம் மாநிலத்தில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். தினகரனைச் சிக்கிம் மாநிலத் தலைமை நீதிபதியாக நியமித்தது தினகரனுக்கான தண்டனையா அல்லது சிக்கிம் மாநில மக்களுக்கான தண்டனையா எனத் தெரிய வில்லை. இது போன்று முறைகேடுகளில் ஈடுபட்டு வெளிவராமல் எத்தனை நீதிபதிகள் உள்ளனரோ?

நீதித் துறையில் பல கருப்பு ஆடுகள்,  அரசு தரும் வீட்டு மனைக்காகவும் சில அற்ப ஆதாயங்களுக்காகவும் தம் பதவியின் கண்ணியத்தை அரசியல்வாதிகளிடம் அடகு வைத்து வருகின்றனர். பொதுமக்களுக்கு அநீதி இழைக்கப் பட்டால் நீதிமன்றம் சென்று முறையிடலாம். நீதிமன்றமே தவறு செய்தால் எங்கு சென்று முறையிடுவது? கறை படிந்த நீதிமன்றங்கள்  கழுவப்பட வேண்டும். கருப்பு ஆடுகள் அகற்றப் பட வேண்டும். இல்லையேல் தீர்ப்புகள் பகிரங்கமாக விலை கூவி விற்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
நன்றி ;இந்நேரம்

0 comments to “விலைக்கு வாங்கப்படும் தீர்ப்புகள் : ஊழல் மலிந்துவிட்ட நீதித் துறை!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates