சண்டிகரில் இருந்து வெளியாகும் முக்கிய நாளிதழான ஜன்சட்டாவின் ஆசிரியர் ஓம் தன்விக்கு அதிகாலையில் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. தொலைபேசியில் அழைத்த நபர் தன்விக்கு சட்டிஸ்கரின் பிரதான இடத்தில் ஒரு வீட்டு மனையை இலவசமாகத் தருவதாகக் கூறுகிறார். இதனால் அதிர்ச்சியும் திகைப்பும் ஏற்பட்டாலும் அதை மறைத்தவாறு தன்வி நகைச்சுவையாக வீட்டுமனை கிடைத்தாலும் அதில் வீடு கட்ட தன்னிடம் பணம் இல்லையென்று கூறுகிறார். விடாப்பிடியாக அம்மனிதர் இரண்டு வீட்டுமனைகளைத் தருவதாகவும் ஒன்றை விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு வீடு கட்டிக் கொள்ளலாம் என்றும் கூறுகிறார்.
அப்போதைய ஆளும் அரசின் ஊழல்களை சில பத்திரிக்கைகள் எதிர்த்து எழுதுவதை நிறுத்த வீட்டுமனை இலவசமாய் கொடுக்க முன்வந்தது இச்சம்பவம் நடந்த 1980களில் வேண்டுமானால் ஆச்சரியமாய் இருக்கலாம். ஆனால் தற்போது வெளியாகியுள்ள நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் ஊடகங்களும் ஊழலுக்கு அப்பாற்பட்டவை அல்ல என்பதை நிரூபித்துள்ளமை வேதனையான ஒன்று. “ஆரம்ப காலங்களில் தனி நபர்கள் தங்கள் தனிப்பட்ட நலன்களுக்காக தவறான செய்தி கொடுப்பார்கள். ஆனால் ஒழுங்கமைக்கப்பட்ட வடிவில் கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தூதர்களை போல் ஊடகவியலாளர்கள் நடந்து கொண்டது மன்னிக்க முடியா குற்றம்" என்கிறார் ஓம் தன்வி.
அரசியல்வாதிகளும் பத்திரிகையாளர்களும் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள முடியா தம்பதிகளாகத் தான் இருக்க முடியும் (Journalists and politicians make odd bed fellows) என்று சொன்ன காலம் ஒன்று இருந்தது. நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் இப்பிம்பத்தைத் தகர்த்துள்ளது மட்டுமின்றி ஊடகவியலாளர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு அரசியல்வாதியின் கைப்பாவையாக செயல்படுகிறார்களோ எனும் சந்தேகத்தை ஆழமாய் விதைத்துள்ளது.
பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகளோடு அடிக்கடி பழகுவது, பேட்டி எடுப்பது போன்றவற்றால் அரசியல் அதிகாரத்தின் மீது ஒரு வகை காதல் ஏற்பட்டு விடுவதால் சில சமயம் அதன் ருசியை அனுபவிக்க அரசியலில் குதித்து விடுகிறார்கள் போலும். தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் நிறைய நபர்கள் தங்கள் தொழிலாக பத்திரிகையியலைக் குறிப்பிட்டிருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று. பல பத்திரிகைகள், சேனல்கள் நடத்தும் லோக்மத் (Lokmath) குழுமத்தின் தலைவர் விஜய் தர்தா 1998ஆம் ஆண்டிலிருந்து காங்கிரஸின் ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். அது போல் பயோனியர் (Pioneer) குழும தலைவர் மித்ரா பி.ஜே.பியின் ராஜ்யசபா உறுப்பினராக இருக்கிறார். 2 ஜி அலைக்கற்றை ஊழலை வெளிக்கொணர்ந்ததில் பயோனியருக்கு அதிக பங்கு உள்ளதாக சொல்லப்படுவதில் ஆச்சரியமில்லை.
கேரளாவின் புகழ் பெற்ற மாத்ருபூமியின் (Mathrubhoomi) தலைவர் வீரேந்திர குமார் மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மஹாராஷ்டிரா டைம்ஸ் ஆசிரியர் பாரத் குமார் ரவுத் சிவசேனாவின் ராஜ்யசபா உறுப்பினராவும் சென்ட்ரல் க்ரோனிகல் மற்றும் நவ்பாரத் ஆசிரியர் பிரபுல்ல மகேஸ்வரி காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினராகவும் செயல்படுகின்றனர். ஹித்தாவதா ஆங்கில நாளேட்டின் ஆசிரியர் பன்வாரிலால் புரோஹித் மூன்று முறை பாஜக உறுப்பினராக நாக்பூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கென்று தனித்தனியே ஊடகம் வைத்துள்ளதும் அதன் நடுநிலைத்தன்மைகளும் அனைவரும் அறிந்த ஒன்று. மூத்த பத்திரிகையாளர் சயீத் நக்வி இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது "ஒரு காலத்தில் பத்திரிகையாளனிடம் இருந்த நேர்மை, துணிவு, தொழில் விழுமியங்களை பாதுகாத்தல் போன்றவை தற்போது குறைந்து வருகிறது. நீரா ராடியா போன்ற அரசியல் தரகர்கள் பத்திரிகையாளர்களை வளைக்க ஆரம்பித்துள்ளது அபாயகரமான அறிகுறி" என்று வேதனை தெரிவித்துள்ளார்.
இச்செய்தியை முதன் முதலில் வெளியிட்ட நியூ போஸ்ட் இந்தியா இணையதளம் தன்னுடைய வலை பக்கத்தில் "ஓபன் மற்றும் அவுட்லுக் பத்திரிகைகள் இந்திய ஊடகத் துறையின் தேவ தூதர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்களை கையும் களவுமாக பிடித்துள்ளது. இவ்வுரையாடல்கள் இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர்களான என்.டி.டி.வியின் பர்கா தத், சி.என்.என் - ஐ.பி.என்னின் ராஜ்தீப் சர்தேசாய், ஹிந்துஸ்தான் டைம்ஸின் வீர் சாங்வி, இந்தியா டுடேவின் பிரபு சாவ்லா மற்றும் அரசியல் கட்சிகள், அதிகார மையங்கள் மற்றும் கார்பரேட் நிறுவனங்களுக்கிடையான தரகு கூட்டணியை அம்பலப்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளது.
இதில் அதிர்ச்சியளிக்க கூடிய விஷயம் என்னவென்றால் சிறு விஷயமென்றாலும் 2,3 நாட்கள் நேரடி ஒளிபரப்பு செய்து பரபரப்பாக்கும் ஊடகங்கள் இவ்விஷயத்தைக் குறித்து மெளனம் சாதிப்பது தான். அவுட்லுக், ஓபன் இதழ்கள், வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் இணையதள இதழ்களில் தான் இச்செய்தி வெளியானதே தவிர பிரபல ஆங்கில் ஊடகங்களான டி.ஆர்.பி ரேட்டிங்க்குக்காக எதையும் செய்யத் துணியும் ஆங்கில செய்தி ஊடகங்களான என்.டி.டி.வி, சி.என்.என் - ஐ.பி.என், டைம்ஸ் நவ், ஹெட்லைன்ஸ் டுடே (NDTV, CNN-IBN, Times Now, Headlines Today) போன்றவை இச்செய்தியை இருட்டடிப்பு செய்தன. ஏனென்றால் பொதுமக்களிடம் பிறரின் ஊழலைக் கொண்டு செல்லும் இந்த ஊடகங்கள் தங்கள் ஊழலை மறைக்க மெளனம் காத்தது கண்டிக்கத்தக்கது.
ஜனநாயக நாட்டில் வாழும் நாம் சுதந்திரமான ஊடகத்துக்கு உத்தரவாதமுள்ளதாக சொல்லப்படுகின்ற வேளையில் இச்செய்தி ஒரு சில ஊடகங்களிலும், இணைய தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வராமலே இருந்திருந்தால் நீரா ராடியா சம்பந்தப்பட்ட செய்தியே அமுக்கப்பட்டிருக்கும். ஒரு சில கார்பரேட் ஊடகங்கள் நினைத்தால் மிகப் பெரும் ஊழலையே மக்கள் பார்வையிலிருந்து மறைக்க முடியும் எனும் நிலை ஆரோக்கியமான ஒன்றல்ல. இத்தோடு தான் தாஜ் ஹோட்டல் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் அந்தஸ்து மிக்கவர்கள் என்பதால் தான் ஊடகங்கள் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தன எனும் சல்மான்கானின் பேட்டியை நினைத்து பார்க்க வேண்டியிருக்கின்றது.
எல்லோராலும் மதிக்கப்படக்கூடிய பத்திரிகையியலுக்காக விருதுகளை வாங்கியுள்ள பர்க்கா தத்தோ தான் எவ்விதியையும் மீறவில்லை என்றும் வெறும் தகவல்களை மட்டும் பெற்றதாகவும் தன் செயலுக்கு நியாயம் கற்பிக்கின்றார். பத்திரிகையியல் பணியை மட்டும் செய்ததாக ட்விட்டரில் எழுதுவதற்குப் பதிலாக தன் என்.டி.டி.வி சேனலில் தொலைபேசி உரையாடலை ஒளிபரப்பட்டுமே. அவர் பத்திரிகையாளனின் பணியை தான் செய்தாரா அல்லது குலாம் நபி ஆஸாதிடம் ராசாவுக்காக பேசியது காங்கிரஸுக்கு செய்யும் சமூக சேவையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டுமே. அதை விடுத்து ஓபன் பத்திரிகை மேல் என்.டி.டி.வி குழுமம் வழக்கு போடுவதாக மிரட்டுவது என்ன பத்திரிகை தர்மம்?
வெறும் ஜோல்னா பையை மாட்டி கொண்டு எதை பற்றியும் கவலைப்படாமல் உண்மையை உலகுக்கு எடுத்து சொல்லும் சித்திரமாக பத்திரிகையாளன் இருந்தது தற்போது கனவாக உள்ளது. பத்திரிகைத் தொழில் என்பது தற்போது அதிகாரத் தொடர்பு, கார்பரேட் நெருக்கம், அரசியல் வாய்ப்பு என கவர்ச்சிகரமான ஒன்றாக மாறியுள்ளது. சில கட்சிகள் மற்றும் அரசுகள் பத்திரிகைகளை தங்கள் பக்கம் வளைக்க அரசு விளம்பரங்கள் அளித்தல் போன்றவற்றைத் தாண்டி நேரடியாக பத்திரிகையாளனையே வளைக்க இலவச மனைகள், ரயில், விமான பாஸ்கள், மலிவு விலையில் விருந்தினர் விடுதிகள் எனப் பல வசதிகளை செய்து தருகின்றன. கார்பரேட்டுகளும் பண்டிகை அன்பளிப்புகள், கவர் என பல வழிகளில் பத்திரிகையாளர்களை தங்கள் வசம் வளைக்கப் பார்க்கின்றன.
தற்போது வெளியாகியுள்ள தொலைபேசி உரையாடலில் அதிகார தரகரான நீரா ராடியா எப்படி அம்பானி, டாடா குழுமங்களுக்காக மத்திய அரசையும், அதிகார வர்க்கத்தையும் வளைக்கிறார் என்பது பிரமிப்பாக உள்ளது. மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு என்ன பதவி என்பதை தீர்மானிக்கும் அளவுக்கு அரசியல் தரகர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதைப் பார்க்க முடிகிறது. மேலும் வீர் சாங்வியுடன் அவர் பேசும் உரையாடலில் அனில் அம்பானிக்கு எதிராக பத்திரிகையில் என்ன எழுத வேண்டும் என்பதைக் கட்டளையிடும் அளவுக்கு அதிகாரம் செலுத்துவதையும் பார்க்க முடிகிறது. தன் மனதிற்கு பட்டதை தயங்காமல் சொல்வது தான் பத்திரிகையாளனின் பணியாக இருக்க வேண்டுமே தவிர பிறர் சொல்லுக்கேற்ப தன் எழுதுகோலை வளைப்பவன் பத்திரிகையாளனாய் இருக்க முடியாது என்பது வீர் சாங்விக்கு எப்படி மறந்து போனது என்பது புலப்படவில்லை.
“சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்” என்ற பழமொழிக்கேற்ப பிறரின் குறைகளைச் சுட்டிக் காட்டும் ஊடகங்கள் தாங்கள் முதலில் சுத்தமானவர்களாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு சில கறுப்பு ஆடுகளால் நேர்மையான பத்திரிகையியல் தர்மத்தோடு இதழியல் நடத்தும் நல்ல ஊடகங்களையும் மக்கள் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலைக்கு தள்ளப்படுவர். இது சமூகத்துக்கும் ஊடக துறைக்கும் ஆரோக்கியமான ஒன்றல்ல. இதைத் தவிர்க்க ஊடகத் துறையில் உள்ளவர்கள் அரசியல் தரகர்கள், கார்பரேட்டுகள், அரசியல் கட்சிகளுடன் வரைமுறை தாண்டிய நெருக்கம் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இதற்கான முயற்சிகள் பத்திரிகையாளர்கள் சங்கங்களிலிருந்து தொடங்கப்பட வேண்டும். உண்மையை உலகுக்கு எடுத்து சொல்லும் முயற்சியில் இணைய செய்தி ஊடகங்களின் பங்கும் அதிகப்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் இவர்களின் ஸ்டிங் ஆப்பரேஷன்களையே மக்கள் இன்னொரு ஸ்டிங் ஆப்பரேஷன் மூலம் பரிசோதிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுவர். நன்றி ;இந்நேரம்