திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Sunday, January 16, 2011

முஸ்லிம்கள் பற்றி செய்தி வெளியிடுவதில் பொறுப்பின்மை

,
திருக்குரானின் அடிப்படையிலும், நபிகள் நாயகத்தின் போதனைகளை வைத்தும் 'இஸ்லாம் தீவிரவாதத்தை என்றும் அனுமதிப்பதில்லை' என்று பல அறிஞர்கள் தொடர்ந்து எடுத்துக் கூறி வருகிறார்கள். அப்படி இருந்தாலும், தீவிரவாதம் பற்றிய செய்திகள் வரும்போது முஸ்லிம்கள் பெயர் மட்டும் ஹைலைட் செய்யப்படுவது வழக்கமாகி விட்டது. இவ்வாறான செய்திகள் ஊடகங்களில் வெளிவருவதால், உளவியல் ரீதியாக  முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் ஒரு விதமான மன அழுத்தம் ஏற்படுகிறது. எனவே, இது ஒரு பொதுவான சமூகப் பிரச்சினை என்று கருதப்பட வேண்டும்! இளம் மனங்களில் சந்தேகமும், குழப்பமும் இருந்தால், அது அவர்களது முன்னேற்றத்தை பெருமளவு பாதிக்கும்.

ஊடக நண்பர்கள் ஒரு கருத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் அல்லாத பல இயக்கங்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றன. அவ்வாறான சக்திகள் தீவிரவாத செயல்களில் ஈடுபடும்போது, அந்தந்த அமைப்புகள் பெயரில்தானே செய்திகள் வெளியிடப்படுகின்றன? அப்போதெல்லாம், செய்திகளில் அந்த இயக்கங்களின் பெயர்கள் வெளி வருமே அன்றி அவர்கள் சார்ந்த மதம் பற்றி குறிப்பிடப்படுவதில்லை. நம் நாட்டில் காஷ்மீரில் மட்டுமா தீவிரவாதம் இருக்கிறது? அஸ்ஸாமிலும், மேகாலயாவிலும், நாகாலாந்திலும், பீஹாரிலும், ஆந்திராவிலும், மேற்கு வங்கத்திலும் ஏராளமான தீவிரவாத சக்திகள் செயல்படுவதை செய்திகளில் பார்க்கிறோம்.  திரும்ப திரும்ப இந்த மாதிரியான தவறான செய்திகள் வரும்போது, சாதாரண மக்களும் முஸ்லிம்களைப் பற்றி சந்தேகம் கொள்வது இயற்கையாக நிகழ்கிறது. இது ஒரு ஜனநாயக நாட்டில் நடக்கலாமா? யோசித்துப் பாருங்கள்!

இன்னொரு விஷயத்தை கவனிக்க வேண்டும். தீவிரவாத நாச வேலைகளால் பாதிப்புகள் ஏற்படும்போது எல்லா மதத்தினரும் துன்பப்படுகிறார்கள். உதாரணமாக, காஷ்மீரில் தாக்குதல் நடந்தபோது அங்கே பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டவர்கள் அங்கே வாழும் முஸ்லிம்கள்தான். பாகிஸ்தானுக்கு செல்லும் ரயிலில் குண்டு வைத்தபோதும், ஐதராபாத் பள்ளி வாசலில் குண்டு வைத்தபோதும் அதிக அளவில் இறந்தவர்கள் முஸ்லிம்கள்தானே? எனவே, தீவிரவாதத்தை எதிர்க்கும் அவசியம் முஸ்லிம்களுக்கு பெருமளவு இருக்கிறது. தீவிரவாதம் முஸ்லிம்களுக்கும் ஒரு பெரிய பிரச்சினைதான், மற்றவர்களுக்கு மட்டுமல்ல - என்பதை அனைவரும் உணர வேண்டும்!

அடிப்படையாக நோக்கினால் ஒன்று தெளிவாகப் புரியும் - சிந்தனைகளில் கோளாறு ஏற்படும் நேரங்களில் மனிதன் தீவிரவாதியாக மாறுகிறான். இதில் மதம் பற்றி பேசுவது சற்றும் சரியாக இருக்காது. எந்த மதமும் அந்த மாதிரி மனிதர்களை நியாயப்படுத்துவதில்லை. எனவே தீவிரவாதம் பற்றி கருத்துக்கள் கூறும்போது ஒரு மதத்தைப் பற்றி அவதூறாகப் பேசுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. "பொறாமை, துவேஷம், வெறுப்பு ஆகியவற்றை இதயத்திலிருந்து அகற்றி அதைத் தூய்மைப்படுத்த வேண்டும். குறிப்பாக ஏழைகள், தேவையுள்ளோர், அனாதைகள் ஆகியோர் மீது கருணை காட்டி அவர்களின் மனதில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிலவச் செய்ய வேண்டும்" என்று நம்புகிற முஸ்லிம் நல்உள்ளங்களை புண்படுத்தும் செயல் அறவே கைவிடப்பட வேண்டும்!

- தஞ்சை வெங்கட்ராஜ் ( thanjaivenkatraj@gmail.com)
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

0 comments to “முஸ்லிம்கள் பற்றி செய்தி வெளியிடுவதில் பொறுப்பின்மை”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates