திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Sunday, January 16, 2011

இஸ்லாமியர்கள் - அர்ப்பணித்தவர்களை மறக்க முடியுமா?

,
"இஸ்லாமியர்கள் தேசிய உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்" எனவும், "தேசத்தைப் பாதுகாக்க இந்திய பண்பாட்டைப் பின்பற்ற வேண்டும்" எனவும் இந்து மத சார்பு இயக்கங்கள் அறைகூவல் விடுவது வழக்கமாகி விட்டது. இஸ்லாமியர்கள் தேச நலனில் அக்கறை இல்லாதவர் போலவும், தேச வளர்ச்சியில் பங்களிக்காதவர்கள் போலவும் நினைக்க வைக்கிற முயற்சியே இந்த அறைகூவல்கள். இந்த சிந்தனையை இந்து மத சார்பு இயக்கங்கள் பரப்ப முடிவதற்கு காரணம் "தேச விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய பெரும் பணிகள்" பற்றி நம்மில் பெரும்பாலானவர்கள் மறந்து விட்டதுதான்.
 
மகாத்மா காந்தி 'கள்ளுக்கடை மறியல்' நடத்த அறிவித்தபோது மதுரையில் பங்கு பெற்றவர்கள் பத்தொன்பதுபேர். அதில் இஸ்லாமியர்கள் பத்துபேர்! கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்கள் சுதேசிக் கப்பல் வாங்க முடிவு செய்தபோது அதற்காக ஆரம்பித்த அறக்கட்டளையில் இருந்த தூத்துக்குடி ஹாஜி பக்கிர் முகம்மது அவர்கள் பத்து லட்ச ரூபாய் அளித்தார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது! மகாகவி பாரதியார் தனது பத்திரிக்கை மூலமாக வேண்டுகோள் விடுத்ததில் கிடைத்த நன்கொடை சில நூறு ரூபாய்கள்தான்! அதே போன்று, காந்திஜி "வெள்ளையர் அளித்த பட்டம் பதவிகளைத் துறக்க வேண்டும்" என அறிவுறுத்தியபோது பெருமளவில் முஸ்லிம்கள் தங்கள் கல்வி, பதவி, பட்டங்களைத் துறந்து தேச பக்தியை வெளிப்படுத்தினர். பலரும் ஆங்கிலேயர் கொடுத்த பட்டங்களைத் துறக்காமல் இருந்த நேரம் அது! அந்த நேரத்தில் காயிதே மில்லத் அவர்கள் தனது படிப்பை நிறுத்தி இருக்கா விட்டால் குறைந்த பட்சம் ஒரு பாரிஸ்டராகி இருக்க மாட்டாரா?
 
இந்திய தேசிய ராணுவத்தை (ஐ.என்.ஏ) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் துவங்கியபோது ரங்கூன் சென்று அங்குள்ள இந்தியரிடம் உதவி வேண்டியபோது, வள்ளல் ஹபீப் கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா? ஒரு கோடி ரூபாய் (அந்த காலத்தில்). மேலும், நேதாஜி அவர்கள் ஐ.என்.ஏ.வில் முதல் ராணுவ ஜெனரலாக நியமித்தது ஷா நவாஸ் கான் என்கிற வீரனைத்தான்! நேதாஜி அமைத்த "மாதிரி அமைச்சரவை"யில் இருபது மந்திரிகள் இருந்தனர். அதில் ஐந்து பேர் முஸ்லிம்கள்!  
 
சுதந்திரம் கிடைத்த நேரத்தில் (அந்த கடினமான காலத்தில்) இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள்தான்! இவ்வாறு இஸ்லாமியர்கள் செய்த தியாகங்களைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்! சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற நூற்றுக் கணக்கான முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த தியாகிகளைப் பற்றி படித்துப் பாருங்கள்! அர்ப்பணித்தவர்களை மறக்க முடியுமா?
 
- தஞ்சை வெங்கட்ராஜ் ( thanjaivenkatraj@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

0 comments to “இஸ்லாமியர்கள் - அர்ப்பணித்தவர்களை மறக்க முடியுமா?”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates