இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீடு என்பது கடந்த காலங்களில் பல வகையான அரசியல் மற்றும் சமூக நிலைகளைக் கடந்து வந்துள்ளது.
1927 முதல் 1947 வரை இஸ்லாமியர்கள் நமது மாகாணத்தில் 16% சதவிகிதம் இடஒதுக்கீட்டை பெற்று வந்தனர். 1947 ம் வருடத்தில், முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களால் இந்த சதவிகிதம் 7%ஆக குறைக்கப்பட்டது. அதன் பிறகு, இந்த 7% சதவிகித இட ஒதுக்கீடு 1954ம் ஆண்டு வரை முஸ்லிம்களால் பெறப்பட்டது.
1954ம் ஆண்டு காமராஜர் அவர்கள் முதல்வராக இருந்தபோது இந்த 7% சதவிகித இட ஒதுக்கீட்டையும் தேவை இல்லை என நீக்கினார். "மத ரீதியான இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது" என்று காமராஜர் முடிவு செய்து முஸ்லிம் இட ஒதுக்கீட்டை சுத்தமாக நீக்கம் செய்த பிறகு, முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக காங்கிரசை வெறுக்கத் தொடங்கினார்கள்.
அந்த நேரத்தில்தான் "காமராஜர் தள்ளுபடி செய்த இட ஒதுக்கீட்டை நாங்கள் பெற்றுத் தருவோம்" என்று கூறி, எழுச்சி அடைந்த திராவிட முன்னேற்ற கழகத்தை முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக ஆதரித்து வெற்றி அடைய வைத்தனர். முஸ்லிம்கள் கண்ணை மூடிக்கொண்டு தி.மு.க.வை ஆதரித்ததற்கு இவ்வகையில் சமூகக் காரணம் இருந்தது என்பதை நாம் உணர வேண்டும்.
இந்திய அரசியலில், முதன் முதலில் மாநிலக் கட்சியாக ஆட்சியைப் பிடித்த தி.மு.க.வால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு விஷயத்தில் உடனடியாக செயல்பட முடியாமல் போனது. அதன் பின்னர், 1973ல் கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைமை ஏற்ற பின்பு, இஸ்லாமியர்களை அப்போது இருந்த 31% சதவிகித பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் இடம் பெற வைத்தார்.
அதன் பிறகும் இஸ்லாமியர்கள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து தனி இட ஒதுக்கீட்டிற்காக போராடி வந்தனர்
"மற்ற இந்து சமுதாயங்களோடு போட்டியிட்டு வாய்ப்புகளைப் பெறுவதில் எங்கள் சமூகம் கஷ்டப்படுவதால், தனி இட ஒதுக்கீடே எங்களுக்கு பயனளிக்கும்" என்ற அவர்களின் வாதம் தொடர்ந்து வந்த அரசுகளால் உணரப்படவில்லை.
பல வருடங்களுக்குப் பிறகு, 2008ஆம் ஆண்டில்தான் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இஸ்லாமியர்களுக்கு தனியாக 3.5% சதவிகிதத்தை அளித்தார்! அதன் காரணமாகவே சென்ற தேர்தலில் இஸ்லாமியர்கள் தி.மு.க. கூட்டணியை வெற்றியடைய வைத்தார்கள் என்பதை மறுக்க முடியாது.
இப்போதுள்ள நிலையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களை நிரப்புவதிலும், ஒதுக்கீட்டைச் சரியாக நடைமுறைப்படுத்துவதிலும் பலத்த சந்தேகங்களை இஸ்லாமியர்கள் எழுப்புகிறார்கள். எப்படி இருப்பினும், இஸ்லாமியர்களுக்கான சமூக நீதிப் பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது!
- தஞ்சை வெங்கட்ராஜ் ( thanjaivenkatraj@gmail.com)
தற்போதைய பதிவுகள்
Subscribe to:
Post Comments (Atom)