இறைவனின் மாபெரும் அருட்கொடையான அறிவுச் செல்வம், மனித சமுதாயத்துக்கு வழங்கப்பட்டிருப்பதன் நோக்கம் யாதெனில், சிந்தித்துச் செயல்படுவதற்கே! ஆம்! மனிதன் தன் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் சிந்தித்துச் செயல்படுவதற்கே!
‘சிந்தனை’ – இதனை ஆக்கப்பூவமான நல்வழியில் – இறை நம்பிக்கையுடன் கூடிய சிந்தனையாக – மனிதன் எப்பொழுது செயல்படுத்தத் தொடங்குகின்றானோ அப்பொழுது அவன் முழுமை பெற்ற மனிதனாக திகழ்கின்றான்!
“(அல்லாஹ்) தான் விரும்பியவர்களுக்கே (கல்வி) ஞானத்தைக் கொடுக்கின்றான்; ஆதலால், எவர் (கல்வி) ஞானம் கொடுக்கப் பெறுகின்றாரோ அவர், உறுதியாக எண்ணற்ற நன்மைகளைப் பெற்று விடுவார். ஆயினும் (இந்நத ஞானக் கல்வியைக் கொண்டு) அறிவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உணர்ச்சி பெற மாட்டார்கள்”
-(அல்குர்ஆன் 2 : 269)
இந்த இறைவசனத்திலிருந்து மிகத் தெளிவாகக் கல்வி – அறிவு எவருக்கு வழங்கப்படும் என்றும், அதனைக் கொண்டு உணர்ச்சி பெறுவோர் யார் என்பதையும் தெளிவாகவே அறிந்து கொண்டோம்.
இவண், ஒன்றை மட்டும் நாம் அறியவேண்டும். தான் பெற்ற கல்வி அறிவால் மமதை கொண்டு – தலைக் கணத்தால் தானே மன்பதையில் பேரறிஞர் என்று உலா வருகின்ற அறிவு சூனியங்களும் உண்டு என்பதையும் அறிய வேண்டும். இத்தகைய அறிவாளி(?)களால் சமுதாயத்தில் ஏற்படுகின்ற குழப்பங்களும் குதர்க்கங்களும் எண்ணிலடங்கா!
பத்தாம் பசலித் தன்மைகளை பாரினிலே பரப்பி – இஸ்லாத்தின் அடிப்படை ஏகத்துவ நெறிக்கு ஆழக்குழி தோண்டி வாழுகின்றவர்களை இனங்கண்டு கொள்வது காலத்தின் கட்டாயமாகும்!
தான் பெற்ற அறிவினை – பகுத்தறிவினை எவனொருவன் சமுதாயத்தின் மத்தியில் உண்மைகளை உரைக்கப் பயன்படுத்துகின்றானோ அவனே அறிஞன்! அவனே கல்வி அறிவால் உணர்ச்சி பெற்றவன்!
அறிவிலிகள் உண்மை அறிஞர்களை கிண்டலும், கேலியும் செய்ய நாடி _ சுவைக்குதவாத உரையாடல்களால் ‘தர்க்கம்’ செய்ய நாடுவதையும் நாம் காண்கின்றோம். அவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அல்லாஹ் நமக்குக் கற்றுத் தருகின்றான்!
“ரஹ்மானுடைய (நன்றி மிக்க) அடியார்கள் (எவரென்றால்) பூமியில் (அடக்கமாகவும்) பணிவாகவும் நடப்பவர்களே! மூடர்கள் அவர்களுடன் வாக்குவாதம் செய்ய முற்பட்டால், ‘ஸலாமுன்’ என்று கூறி (அவர்களை விட்டு விலகி) விடுவார்கள்’. (அல்குர்ஆன் 25 : 63)
“அன்றி அவர்கள் வீணாண வார்த்தைகளைச் செவியுற்றால், (அதில் சம்பந்தப்படாது) அதனைப் புறக்கணித்து விட்டு, “எங்கள் காரியங்கள் எங்களுக்கும், உங்களுடைய காரியங்கள் உங்களுக்கும் (சிறந்தவை) உங்களுக்கு ஸலாம்! அறிவீனர்களை (அவர்களுடன் தர்க்கிக்க) நாங்கள் விரும்புவதில்லை” என்று கூறுவார்கள்”
(அல்குர்ஆன் 28 : 55)
அறிவாளி – அறிவிலி ஆகியோரின் தன்மைகளை நாம் ஒருவாறு புரிந்து கொண்டோம். எனவே, “அல்லாஹ் ஒருவன், அவனே ஆற்றல்கள் அனைத்துக்கும் முழுமையான சொந்தக்காரன்! அவனே மனிதர்கள் வணங்குவதற்கு தகுதியானவன்!’ என்பதை நம்பி – உணர்ந்து தெளியும் ஏகத்துவ வாதிகள் எதற்கும்- அல்லாஹ் அல்லாத மற்றெவர்க்கும் அஞ்சசத் தேவையில்லை!
போலி ஞானிகள் – கபட வேடதாரிகள் யாரென்று அழுத்தமான இறை நம்பிக்கையுடைய ஏகத்துவ வாதிகள் எளிதில் புரிந்து கொள்வார்கள்! உண்மையும் பொய்யும் – அசலும் – நகலும் -நன்மையும் – தீமையும் – அறிவாளியும் – அறிவிலியும் ஒரு போதும் ஒன்றுபடா – ஒன்று சேர மாட்டார்கள்!