பணவீக்கம், காவிரிப் பிரச்சினை,கன்னட பிரசாத், நொய்டா படுகொலைகள் போன்ற தலைப்புச் செய்திகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி பங்களாதேஷ் இந்தியாவை வென்றதை தலைப்புச் செய்தியாகவும் அதற்கான காரண காரியங்கள் பற்றிய அலசலும் டி.வி. ரேடியோ, இணையம் என எல்லா ஊடகங்களிலும் விவாதிக்கப் படுகிறது. நம் இளைஞர்களின் தற்போதைய கவலையெல்லாம் இந்தியா சூப்பர்-8 க்கு தகுதியாகி விட வேண்டும் என்பதுதான்!
பண்டைய கிரேக்க மன்னர்களுக்கு எதிராக இளைஞர்கள் திரும்பிவிடக் கூடாதென்பதால் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டு,அதில் இளைஞர்களின் கவனத்தை செலுத்தியதாக சொல்லப்படுவதுண்டு. ஆங்கிலேயர்கள், குளிர் காலங்களில் இரத்த ஓட்டம் சீராக வைத்திருக்க நாள்முழுதும் விளையாடக் கூடிய கிரிக்கெட் விளையாட்டைக் கண்டுபிடித்தார்கள் என்றும் சொல்லப் படுகிறது.
கிரிக்கெட் தவிர்த்த மற்ற விளையாட்டுக்களில் போட்டியாளர்கள் உடலால் கடுமையாகப் போராடி திறமையைக் காட்டி வெல்கின்றார்கள். கிரிக்கெட் விளையாட்டிலும் திறமை, உடல் வலிமை அவசியமாகப் பட்டாலும் மற்ற விளையாட்டுக்களை விட குறைவு.சமீப காலங்களில் அணியின் வெற்றி Match Fixing எனும் சூதாட்டத்தால் நிர்ணயிக்கப்பட்டது. மற்ற துறை விளையாட்டுக்களைவிட கிரிக்கெட் வீரர்கள் சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாக அல்லது அதிகமான ஊதியம் பெறுகிறார்கள். கிரிக்கெட் வீரர் இல்லாத விளம்பரங்களே இல்லை எனும் அளவுக்கு கிரிக்கெட் மோகம் அனைவரையும் ஆக்கிரமித்துள்ளது.
பத்தாண்டுகள் பள்ளி வாழ்க்கையின் தலைவிதியை நிர்ணயிக்கும் SSLC மற்றும் தொழிற்கல்வி தேர்வு நேரத்தில், தேர்வு ஜுரத்தைவிட கிரிக்கெட் ஜுரம் மாணவர்களையும் வாட்டுகிறது. மெகா சீரியல்களால் சிறைவைக்கப் பட்டுள்ள தாய்மார்களையும் ‘குர்குரே’ கொரிக்க வைத்து கிரிக்கெட் ரசிகர்களாக மாற்றிய வல்லமை உலகக்கோப்பைக் கிரிக்கெட்டிற்கு உண்டு.
இரவு-பகல் போட்டிகள் நம் நாட்டு நேரத்தில் நள்ளிரவில் ஒளிபரப்பப் படுகின்றன. இரவு முழுவதும் கண் விழித்து மறுநாள் அலுவலகம், கல்லூரி என எல்லாப் பணிகளும் கண் எரிச்சலுடன் நடைபெறுகின்றன. மொபைல் போன்களிலும் கிரிக்கெட் பற்றிய SMS, FLASH NEWS எனப் பரிமாறப்பட்டு தொழில்நுட்பம் விரயம் செய்யப்படுகிறது. |