திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Tuesday, March 8, 2011

முஸ்லிம் லீக் 1 சீட் டமார்

,
          தி மு க கூட்டணியில்    மானம் இழந்து நிற்கும் முஸ்லிம் சமுதாயம் 
 முஸ்லிம் சமுதாயத்தின் பாது காவலர்  மு .கருணா{நீதி}யின் நீதியினை பாரீர்    பா.ம.க., தனக்கு ஒதுக்கப்பட்ட 31 தொகுதிகளிலிருந்து ஒரு தொகுதியையும், முஸ்லீம் லீக் தனக்கு ஒதுக்கிய மூன்று தொகுதியிலிருந்து, ஒரு தொகுதியையும்,எடுத்து காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்க உதவியுள்ளதாம் 
-ஆவடியார்  


                       ஏன் இளைத்தாய் என் எழுச்சிமிகு சமுதாயமே?

"பேட்டை முதலாளி" என்று செல்லமாக அழைக்கப்பட்டவரும் தோல் வியாபாரத்தில் தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்தவருமான கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள், தமது உடல், பொருள், ஆவி அத்தனையும் இஸ்லாமிய சமூகத்திற்காக அர்ப்பணித்தவர். தமிழகத்தில் மட்டுமல்லாது முஸ்லிம்களை இந்திய அளவில் தலைநிமிர்ந்து நிற்க வைத்த பெருமை படைத்த அப்பழுக்கற்ற அரசியல்வாதி. நாட்டுப்பற்று மிக்கவர். தமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜி, பகுத்தறிவுப் பகலவன் பெரியார், ஏழைப்பங்காளன் காமராஜர் போன்றவர்களுடன் இணையாகப் பேசப்பட்டவர் காயிதே மில்லத் அவர்கள். 1967ஆம் ஆண்டு நான் புதுக்கல்லூரி மாணவனாக இருந்தபோது நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக எவரும் எதிர்பார்க்காத அமோக வெற்றியை ஈட்டியது. பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பினை ஏற்றபோது குரோம்பேட்டையிலிருந்த காயிதே மில்லத் அவர்களது வீடு தேடிச் சென்று வாழ்த்துப் பெற்றார். அந்த அளவிற்கு உயர்ந்தவர் காயிதே மில்லத் இஸ்மாயில் ஸாஹிப். தனது நீண்ட மேலாடையில்(ஓவர்கோட்) மெலிந்த உருவமானாலும் உயர்ந்து விளங்கினார்.

அவருக்கு உறுதுணையாக சிம்மக் குரலோன் திருப்பூர் மொய்தீன், ரவணசமுத்திரம் பீர்முகம்மது, இலக்கியச் செல்வர் அப்துல் லத்தீப், முகவை எஸ்.எம். ஷரீஃப், வந்தவாசி வஹாப், பத்திரிக்கையாளர் மறுமலர்ச்சி யூஸுஃப், கொள்கைச் செம்மல் ஏ.கே அப்துஸ்ஸமது, இளைஞர் சிங்கம் செங்கம் அப்துல் ஜப்பார் போன்றவர்கள் அனைவரும் அப்போது ஒருமித்து இருந்ததால் இந்திய நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனித்தன்மையுடன் இரட்டைப்படை எண்ணிக்கையில் பதவி வகித்து, சமுதாயத்தின் குரலினை ஒலிக்கச் செய்தது.

ஆனால் அதே முஸ்லிம் லீக், இன்று தங்கள் கட்சியினைத் தேர்தல் அங்கீகாரம் பெறமுடியாத அளவிற்கு காயிதே மில்லத்தின் பேரன் தாவூத் மியாகானுடைய ஒரு சிறுகட்சி, சவால் விடுவதும் தி.மு.கவின் பின்னால் ஒளிந்து கொள்ளும் அளவிற்குத் தேய்து விட்டதும் பரிதாபமாக இல்லையா?

சமீபத்தில் கள் இறக்க போராட்டம் நடத்திய, தமிழகத்தின் மேற்குப் பகுதியில் மட்டும் பெரும்பான்மை சமூகமாக உள்ள கொங்கு வேளாளர் கட்சிகூட 2011 தேர்தலில் போட்டி போடுவதற்கு ஏழு இடங்களைப் பெற்று விட்டது. வட மாவட்டங்களில் மட்டும் பெரும்பான்மை சமூகத்தினை வைத்திருக்கும் பா.ம.க மற்றும் விடுதலை சிறுத்தைக் கட்சிகள் முறையே 31, 10 இடங்களைப் பெற்றுக் கொண்டன. ஆனால் தமிழகம் முழுதும் பரவலாக வாழும் ஏழு சதவீத முஸ்லிம்களுக்கும் அரசியல் ரீதியில் கட்சிகளாகத் கண்ணுக்குத் தெரியக் கூடிய முஸ்லிம் லீக் கட்சியும் த.மு.மு.கவின் மனித நேயக் கட்சியும் முறையே தி.மு.க மற்றும் அதிமுக கூட்டணிகளில் இணைந்து போட்டிபோட வெறும் தலா மூன்றே மூன்று தொகுதிகள் பெற்று இளைத்திருப்பதிற்கும் ஏற்கனவே நல்ல பங்கு ஒதுக்கப் பட்டவர்கள் "எங்களுக்கு இன்னும் வேண்டும்" என்று கேட்டால் பிடுங்கிக் கொடுப்பதற்கு, 'இருக்கவே இருக்கிறது
இளிச்சவாய் முஸ்லிம் கட்சி' என்று நினைப்பதற்கும் யார் காரணம் சகோதரர்களே?

சரி, தலா மூன்று தொகுதியில் போட்டி போடும் வோட்பாளர்கள் ஆறு முஸ்லிம்களும் வெற்றி பெற்று விடுவார்கள் என்பதற்கு உறுதி ஏதுமில்லை. காரணம், அந்தத் தொகுதிகளை ஒதுக்கிய தி.மு.கவும் அதிமுகவும் போட்டியிட ஒதுக்கும் இடங்களில் இரு முஸ்லிம் கட்சிகளும் எதிரெதிராக மோதிக் கொள்வர். ஆகவே கடைசியில் மிஞ்சப் போவது இரண்டு முஸ்லிம் வேட்பாளர்கள் இப்போது இருப்பது போலத்தான் இருக்கும் என்பதே நம் சமுதாயத்தின் யதார்த்த நிலை.

ஒரு நாட்டில் தேர்தல் நடக்கும்போது, கட்சிகளின் கொள்கைகளை அந்தந்தக் கட்சிகள் தேர்தல் அறிக்கையாக வெளியிட வேண்டும். அதுபோன்ற கொள்கைப் பட்டியலில்,
  • முஸ்லிம்களுக்கு 5 சதவீத ஒதுக்கீடு வேண்டும்,
  • இதுவரை 3.5 சதவீத ஒதுக்கீட்டில் பயனடைந்த முஸ்லிம்களின் பட்டியலினை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்,
  • முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் முன்னேற பிரதமரின் 15அம்ச சிறப்பு கொள்கையின் படி முஸ்லிம்களுக்கு தனி தொழில் பேட்டைகள் ஆரம்பிக்க வேண்டும்,
  • ஆக்கிரமிப்பில் உள்ள வக்ஃபுச் சொத்துகள், மற்றும் கணக்கில் வராத தர்ஹாச் சொத்துக்கள் கைப்பற்றப்பட வேண்டும்.
ஆகிய நியாயமான உரிமைக் கோரிக்கைகளை, முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையாக வெளியிட முடியுமா?
ஒருக்காலும் முடியாது! காரணம், முஸ்லிம் லீக் தனிச் சின்னத்தில் போட்டியிட முடியாமல் தி.மு.கவின் சின்னத்தில்தான் போட்டியிட முடியும். தமுமுகவின் மனிதநேயக் மக்கள் கட்சியின் பிரதான அதிமுக, நான் மேலே குறிப்பிட்ட முஸ்லிம் நலத் திட்டங்களுக்கு எதிரானது என்பதால் ம.ம.கவும் மேற்காணும் கொள்கை விளக்கம் வெளியிட முடியாது.

ஒரு சமுதாயக் கட்சியினை நடத்துகிறவர்கள், அந்தச் சமுதாயம் மேம்பட அரசியல்வாதிகளாக மட்டுமல்லாது அந்தச் சமுதாயத்தினை மேம்படுத்த, முற்போக்குத் திட்டங்களைச் செயல்படுத்தும் செயல் தலைவர்களாக இருக்க வேண்டும். அதாவது ஆங்கிலத்தில் சொல்வதென்றால் வெறும் Politiciansகளாக இல்லாமல் Statesmenஆக இருக்க வேண்டும். சமுதாய இயக்கங்களை அரசியல் கட்சிகள் தங்கள் இஷ்டம்போல ஆட்டிப்படைக்கவும் கருவேப்பி்லையாகக் கருதவும் நாம் அனுமதிக்கலாமா?

நமது சமுதாயத்திற்கு என்று ஒரு எம்.பி. இருக்கிறார். அதுவும் தி.மு.க எம்.பியாகத்தான் இருக்கிறார். நெருக்குதல் அதிகமாகி, மத்திய அரசியலிருந்து தி.மு.க விலகி, கொள்கை அளவில் மத்திய அரசிற்கு ஆதரவு கொடுப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அந்த தி.மு.கவிலுள்ள முஸ்லிம் எம்.பியின் நிலையென்ன? அவரும் கொள்கை அடிப்படையில் ஆதரவு கொடுப்பாரா? ஏனென்றால் முஸ்லிம் லீக்கின் கேரள எம்.பியும் அதன் தலைவருமான ஓர் அமைச்சர் மத்தியில் அங்கம் வகிப்பதினால் அதுபோன்ற ஒரு முடிவினை தமிழக எம்.பி எடுக்க முடியுமா? அல்லது தமிழக முஸ்லிம் லீக்தான் அந்த முடிவினை எடுக்குமா? போன்ற கேள்விகள் முஸ்லிம்கள் மத்தியில் எழும்பிக் கொண்டுதான் உள்ளன. முஸ்லிம் லீக், சார்புநிலையற்ற தனிக் கட்சியாக விளங்குமானால் இதுபோன்ற தர்ம சங்கடமான நிலை அந்தக் கட்சிக்கு வரப் போவதில்லையல்லவா?
சென்னையில் ஜனவரி மாதத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் தமிழக முதல்வர், "முஸ்லிம்கள் இட ஒதுக்கீட்டை ஐந்து சதவீதமாக உயர்த்துவதற்கு அவர்கள் அனைவரும் சேர்ந்து கோரிக்கையினை வைத்தால் அதுபற்றி அமைச்சர்களுடன் கலந்தாலோசனை செய்து முடிவெடுக்கப்படும்" என்று அறிவித்தார். அதாவது, முஸ்லிம்கள் எப்படியும் ஒன்றுசேரப் போவதில்லை என்ற திடமான நம்பிக்கை முதல்வருக்கு.
திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு எல்லாரும் கலந்து முன்னர் ஆலோசனை செய்தது போன்று முஸ்லிம் கட்சிகளும் சமுதாய இயக்கங்களும் முதல்வருடைய பேச்சைத் தங்கள் சமுதாயத்துக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, சமுதாயத்துக்குக் காலாகாலத்துக்கும் நன்மை விளைவிக்கும் வாய்ப்பான 5 சதவீத ஒதுக்கீட்டுக்கு எல்லாரும் இணைந்து ஒருமித்த முடிவினை எடுத்து முதல்வரிடம் தெரிவித்து அதற்கான ஆணையினைத் தேர்தல் அறிவிப்பு வருமுன்பே பெற்றுக் கொள்ளும் வாய்ப்பைத் தவறவிட்டது ஏன்? என்ற கேள்வி என் போன்றோர் மனதில் எழாமல் இல்லை. அதற்குள்ளாக யார் யாரோ அந்தக் கண்துடைப்பு அறிவிப்புகூட, "தங்கள் கோரிக்கையினால்தான் வந்தது" என்று தம்பட்டம் அடித்து அறிக்கையும் நோட்டீசும் வீதி தோறும் ஒட்டப் புறப்பட்டு விட்டனர்.

தேர்தலும் அறிவிப்பும் வந்து விட்டது. ஆகவே அப்படி நோட்டீஸ் அடித்தவர்கள் தாங்கள் ஏமாறி விட்டோமே என்று தாங்கள் யாருக்கும் ஓட்டுப் போடப் போவதில்லை என்ற முடிவினை விதி 49ஓவினை உபயோகிக்கப் போவதாக இணைய தளச் செய்திகள் சொல்கின்றன. ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் தங்கள் கருத்துகளை தைரியமாகச் செயல்வடிவில் காட்டுவதற்கு, தங்கள் சமுதாயத்திற்கு யார் சிறப்பாக சேவை செய்வார்கள் என்று தேர்ந்தெடுக்கும் முடிவினை எடுப்பதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உரிமையே ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுத் தேர்தல் வந்தால் அல்லது எப்போதாவது இடைத் தேர்தல் வந்தால்தான் பயன்படுத்தப் படுகிறது. அப்படி இருக்கும்போது ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வரும் தேர்தலினைப் புறக்கணிக்கும் செயலை ஜனநாயக விரேதச் செயலாகக் கருத வேண்டும். ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகரினை உள்ளடக்கிய நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தேர்தல், இம்மாதம் 26ந்தேதி நடக்கவிருக்கின்றது. அதில் என்ன விசேஷம் என்றால், வாக்காளர்கள் கட்டாயம் வாக்களித்தாக வேண்டும்; இல்லையெனில், அது தண்டனைக்குரிய குற்றச்செயலாக அங்குக் கருதுகிறார்கள். அப்படி இருக்கும்போது விதி 49ஓவினை நமது சமுதாய அமைப்புகள் தேர்ந்தெடுப்பது சரியான செயலாக ஆகாது.
  • இந்திய நாட்டினை 500 ஆண்டுகள் ஆண்ட சமுதாயம்.
  • இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பல விழுப்புண்களைத் தழுவிய சமுதாயம்.
  • சுதந்திர இந்தியாவின் கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் முக்கிய பங்காற்றிய சமுதாயம்.
  • கண்ணியமிகு காயிதே மில்லத் போன்ற அப்பழுக்கற்ற ஜனநாயகவாதிகள் நிறைந்திருந்த சமுதாயம்.
  • நாட்டின் விஞ்ஞான முன்னேற்றத்தில் அப்துல் கலாம் போன்ற அறிஞர்களைப் பெற்றத் தந்த சமுதாயம்.
  • தி.மு.க ஆட்சியில் மிகவும் சக்திமிக்க இலாக்காக்களான ரெவின்யூ, பொதுத்துறை போன்ற இலாக்காக்களைத் தம் கையில் வைத்திருந்த அமைச்சராக இருந்தும் கடைசிவரை தமக்கென ஒரு சொந்த வீடு இல்லாமல்  பட்டினப்பாக்கம் அரசுக் குடியிருப்பில், சாகும்வரை வாழ்ந்த சாதிக் பாட்சா போன்றவர்கள் வாழ்ந்த சமுதாயம்.
இந்திய நாட்டினை 500 ஆண்டுகள் ஆண்ட சமுதாயம் முஸ்லிம் சமுதாயம். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பல விழுப்புண்களைத் தழுவிய சமுதாயம் முஸ்லிம் சமுதாயம். சுதந்திர இந்தியாவின் கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் முக்கிய பங்காற்றிய சமுதாயம் முஸ்லிம் சமுதாயம். கண்ணியமிகு காயிதே மில்லத் போன்ற அப்பழுக்கற்ற ஜனநாயகவாதிகள் நிறைந்திருந்த சமுதாயம் முஸ்லிம் சமுதாயம். நாட்டின் விஞ்ஞான முன்னேற்றத்தில் அப்துல் கலாம் போன்ற அறிஞர்களைப் பெற்ற சமுதாயம் நமது சமுதாயம். தி.மு.க ஆட்சியில் மிகவும் சக்திமிக்க இலாக்காக்களான ரெவின்யூ, பொதுத்துறை போன்ற இலாக்காக்களைத் தம் கையில் வைத்திருந்த அமைச்சர், கடைசிவரை சொந்த வீடு இல்லாமல், இன்று இடிக்கப்படும் அந்தப் பழைய சென்னைப் பட்டினப்பாக்கம் அரசுக் குடியிருப்பில், சாகும்வரை வாழ்ந்த சாதிக் பாட்சா போன்றவர்கள் வாழ்ந்த சமுதாயம் முஸ்லிம் சமுதாயம். ஆனால் இன்று பதவியில்லாவிட்டாலும் சொகுசுக் கார்களில் பவனி வந்து, பங்களாக்களில் குடியிருந்து தங்கள் குடும்ப சொத்தாகக் கட்சியினையும் முஸ்லிம் சமூக இயக்கங்களையும் தலைவர்கள் தன்னலத்துடன் இயக்கிக் கொண்டிருப்பதால் அவை நாளுக்கு நாள்  தேய்ந்து கொண்டு வருகின்றன என்பதை சமீபகால நடவடிக்கைகள் காட்டுகின்றன.

இளைத்துப் போய்க் கிடக்கும் இந்தச் சமுதாயத்தினைத் தட்டியெழுப்பி, தனது பழைய எழுச்சியினைப் பாடமாகக் கொண்டு,
வழி நடத்திச் செல்ல, படித்த இளைய இஸ்லாமிய சமுதாயம் முன்வருமா? என்ற கேள்விக்குக் காலம்தான் பதில் கூறவேண்டும் என் சொந்தங்களே!

0 comments to “முஸ்லிம் லீக் 1 சீட் டமார்”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates