ஆம்வே நிறுவனத்தின் கொள்ளைகளை பற்றி நான் முன்பு எழுதியிருந்த பதிவுக்கு பல எதிர் பின்னூட்டங்கள் போடப்பட்டன அவர்கள் அனைவரும் ஆம்வே நிறுவனத்தில் இணைந்தவர்கள் என்று எனக்கு நன்றாக தெரிந்தது, ஏன் என்றால் நான் ஸ்பாம் செய்த பின்பும் மின்னஞ்சல் வழியாக பல கேள்விகள், உங்களுக்கு ஆம்வே நிறுவனம் பற்றி என்ன தெரியும்?, அவர்களுடைய தரம் பற்றி தெரியுமா? இப்படி பல கேள்விகள். சரி இவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும் என்று டெலிட் செய்துவிட்டேன். ஆனால் அந்த ஆம்வே பதிவில் கடைசியாக சிலர் பின்னூட்டம் போடும்போது எங்களுடன் தொடர்புகொள்ளுங்கள் நாங்கள் எங்கள் பொருட்களின் தரத்தை பற்றி விளக்குகிறோம் என்று பின்னூட்டம் செய்து இருந்தனர்.
எனக்கு அந்த பதிவில் சரியாக அவர்களுக்கு விளக்கவில்லையோ என்றுதான் தோன்றியது. சரி அந்தபதிவில் அப்படி என்ன விடுப்பட்டது என்று தேடியபோது மருத்துவம், தரம் போன்றவற்றை சரியாக விமர்சிக்கவில்லை என்று தெரிந்தது, ஏன் என்றால் நான் அந்தபதிவில் பணம் இழப்பு பற்றித்தான் விளக்கி இருந்தேன. அவர்களுடைய தரத்தையும், மருத்துவ பலன்களையும் பற்றி சரியாக விளக்கவில்லை. சரி அதைப்பற்றியும் விளக்கிவிடுவோம் இல்லையென்றால் எங்கள் பொருட்கள் விலை அதிகமாக இருந்தாலும் தரத்தில் சிறந்தது என்று ஏமாற்றிவிடுவார்கள்.
இவர்கள் ஒவ்வொரு பொருட்களையும் பரிந்துரைக்க சொல்லும் வார்த்தை பக்கவிளைவுகள் இல்லை என்பதுதான், இன்னும் ஒரு சிலர் இந்த பொருட்களை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் விரைவில் நோய் வாய் பட்டு இறந்துவிடுவீர்கள் என்பது போல பயமுறுத்தியும் வருகின்றனர். இவர்கள் அதிகமாக பரிந்துரைக்கும் பொருட்கள் என்று பார்த்தால் NUTRILITE பொருட்கள்தான் அதிலும் இவர்கள் பரிந்துரைக்கும் பொருட்கள் என்று பார்த்தால் ப்ரோட்டின் பவுடர்தான் இந்த ப்ரோடீன் பவுடரை இவர்கள் என்னென்ன சொல்லி விற்க முடியுமோ அவ்வளவு பொய்களையும் சொல்லி விற்று வருகின்றனர். எங்கள் உறவுக்கார் சில நாட்களுக்கு முன்பு இனிப்பு வகையை உண்ணும்போது உங்களுக்கு சுகர் இருக்கே ஏன் இவ்வளவு இனிப்பு எடுத்துக்குரிங்க என்று கேட்டபோது அவர் சொன்னபதில் "இல்ல நான் ஆம்வே ப்ரோடீன் பவுடர் சாப்பிடுறேன் அதனால எனக்கு சுகர் வராது" என்றார். இவருக்கு யார் இப்படி பரிந்துரைத்தார்கள் என்று தெரியவில்லை, ப்ரோடீன் பவுடர் சாப்பிட்டால் சுகர் குறைந்துவிடும் என்று. இவர்களுக்கு மாதம் கிடைக்க வேண்டிய PV க்காக கண்ணா பின்னாவென வாயில் வந்ததையெல்லாம் சொல்லி ஏமாற்றி விற்று வருகின்றனர்.
இப்படி இவர்கள் கண்மூடித்தனமாக மருத்துவ பொருட்களை எடுத்துக்கொள்கிரார்களே, இப்படி மருத்துவர் ஆலோசனை இல்லாமலே நம் விருப்பத்திற்கு எடுத்துக்கொள்ளலாமா என்று எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. இது பற்றிய சந்தேகத்தை போக்கிக்கொள்ள இலங்கை மருத்துவர் துமிழ் அவர்களிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில்கள் உங்களுக்காக
புரோட்டின் என்றால என்ன ?
நமது உடல் வளர்ச்சிக்குத் தேவையான உணவில் உள்ள போசனைப் பதார்த்தங்கள் பிரதானமாக கார்போ ஹைட்ரேட் (Carbohydrate), FAT, புரோட்டின, விட்டமின்கள், கனியுப்புக்கள் எனப் பிரிக்கப்படலாம்.இதிலே உடலின் அன்றாடத் தேவைக்குரிய சக்தியை வழங்குவது பிரதானமாக கார்போ ஹைட்ரேட் அதைத் தொடர்ந்து கொழுப்புக்களும் (FAT)ஆகும்.
புரதமானது அன்றாட தேவைக்கான சக்தியை வழங்குவதை விட மிக முக்கியமாக உடலின் கட்டமைப்பை பேணுவதற்கு அவசியமாகும். குறிப்பாக உடலின் வளர்ச்சியின் போது இதன் அளவு வழங்கப்படவேண்டும். மேலும் நோய் வாய்ப்பட்டவர்கள் அந்த நோயில் இருந்து சுகமகிக் கொண்டிருக்கும் போதும் புரத தேவை சடுதியாக அதிகரிக்கும். அதாவது உடலின் கலங்கள் மீள் கட்டமைப்பதற்கும் சீர் செய்யப்படுவதற்கும் புரதம் இன்றி அமையாதது.அதுதவீர ஒருவர் போதியளவு மாப்பொருள் சத்தையும் ,கொழுப்புச் சத்தையும் உட்கொள்ளாவிட்டாலஅன்றாட தேவைகளின் சக்திக்காக உடலில் சேமிக்கப்பட்டுள்ள புரதங்கள் பாவிக்கப் படும். இதனால் உடலின் கட்டமைப்புச் சீர் குழைந்து மெலிந்த தோற்றமுடையவர்களாக மாறுவார்கள்.
அதாவது ஒருவர் உண்ணும் உணவில் அனைத்துவிதமான போஷாக்குப் பதார்த்தங்களும் தேவையான அளவிலே இருக்க வேண்டும். மாறாக தனியே புரதத்தினை மட்டும் அதிகம் உட்கொள்ளுவதால் நன்மையில்லை .
புரோட்டின் பவுடர்கள் எனப்படுபவை யாவை?
இவை உடலுக்குத் தேவையான அமைனோ அமிலங்களை செறிவாக்கி உருவாக்கப் பட்டவை. இவற்றின் மூலம் உடலுக்குத் தேவையான புரதங்களை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்று சொல்லப் படுகிறது. இவற்றில் உள்ள அமைனோ அமிலங்களும் இலகுவாக உள்லேடுக்கப் படக் கூடியதென சொல்லப் படுகிறது. இவற்றை உண்பதால் உண்மையில் நன்மைகள் ஏற்படுமா? ஏற்கனவே சொன்னது போல நமக்குத் தேவையான போஷாக்குகள் அனைத்தும் தேவையான அளவிலே கிடைத்தால் மட்டுமே நமது உடலின் தொழிற்பாடுகள் சரியாக நடைபெறும். அவ்வாறு நாமக்குத் தேவையான அனைத்து போஷாக்குகளையும் பெற்றுக்கொள்ள சிறந்த வழி போஷாக்கான உணவுகளை உட்கொள்ளுவதே. தனியே புரோட்டின் பவுடர்களை உட்கொள்ளுவதால் புரோட்டினும் சில கனியுப்பு,விட்டமின்களும் கிடைத்தாலும் நமது அன்றாடத் தேவைக்கான சக்தியை வழங்கும் மாப்பொருள் கொழுப்பு என்பவற்றிற்காக நாம் உண்ணும் உணவையே நம்பியிருக்கு வேண்டும். இவ்வாறு உண்ணும் உணவில் முட்டை, இறைச்சி, மீன் போன்றவற்றை சேர்த்து விட்டாலே போதும் தேவையான புரதத்தையும் சுவையான சாப்பாடுடன் பெற்று விடலாம். பிறகேன் தேவை இல்லாமல்புரட்டின் பவுடர்களுக்காக காசினைச் செலவு செய்ய வேண்டும்?
உண்மையில் யாருக்கு புரோட்டின் பவுடர் தேவைப்படும்?
படுக்கையிலே இருக்கும் அல்லது உணவு வாய் வழியாக உட்கொள்ள முடியாமல் குழாய் மூலம் உணவு எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளவர்களுக்கு புரட்டின் பவுடர் வழங்குவது இலகுவாக இருக்கும். சில நோய்கள் ஏற்பட்டு சுகமாகும் காலத்தில் புரோட்டின் தேவை சாதாரண அளவை விட அதிகரிக்கும் போது புரட்டின் பவுடர் உதவும் என்றாலும் அந்த நேரத்திலும் உணவின் மூலம் புரதத்தினைப் பெற்றுக் கொள்ள கூடியவர்கள் உணவில் புரதம் கூடிய உணவுகளை அதிகரிப்பது புரோட்டின் பவுடர் பாவிப்பதை விட சிறந்தது.
உடற் கட்டலகுக்காக தசைகளை புடைக்கச் செய்யும் நோக்கோடும் புரோட்டின் பவுடர்களை ஆண்கள் பாவிப்பதுண்டு. இந்த நோக்கத்திற்காக பாவிக்கும் ஆண்கள் கட்டாயமாக மாப்பொருள் கொழுப்பு போன்றவற்றையும் சற்று அதிகமாக உட்கொள்ள வேண்டியதோடு போதிய உடற்பயிர்ச்சியிலும் ஈடுபட வேண்டியது அவசியம்.
ஆக , சுகதேகியான ஒருவர் அல்லது உணவுகளை உட்கொள்ளக் கூடிய ஒருவர் தனக்குத் தேவையான புரத்தைத்தினை உணவின் மூலம் பெருக் கொள்ள முடியும் போது அனாவசியமாக எதற்காக புரோட்டின் பவுடர்களை நம்பி காசை செலவழிக்க வேண்டும். சந்தையில் உள்ள புரோட்டின் பவுடர்கள் அனைத்துமே ஆயிரத்திற்கும் அதிகமான விலை கொண்டவை.அந்த காசிற்கு நல்லஉணவினை வாய்க்கு ருசியாக சமைத்துச் சாப்பிடலாமே.
அதற்கும் மேலாக சந்தையில் இப்போது ஏராளமான புரோட்டின் பவுடர்கள் பல்வேறு விலைகளில் கிடைக்கின்றன. அதிக விளம்பரம் உள்ள புரோட்டின் பவுடர் நல்ல தரமானது என்ற பெயருடன் அதிகமான விலைக்கு விற்கப்படலாம். ஆகவே புரோட்டின் பவுடர் பாவிக்கத்தான் போகிறேன் என்று அடம் பிடிப்பவர்கள் விளம்பரத்தில் ஏமாறாமல் மற்றைய புரோட்டின் பவுடர்களின் விலைகளை பார்த்து நியாயமான விலையில் இருப்பதை தெரிவு செய்யுங்கள். சந்தையில் உள்ள புரோட்டின் பவுடர்களின் தரம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைதான். முக்கியமாக நாட்பட்ட நோய்கள் குறிப்பாக சிறுநீரக நோயாளிகள் வைத்தியரின் அனுமதி இன்றி புரோட்டின் பவுடர்களை பாவிக்க வேண்டாம்.
நான் ப்ரோடீன் பவுடரை மட்டும் குறிப்பிட்டு சந்தேகங்களை கேட்க்க காரணம் ஆம்வே நிறுவனம் NUTRILIRE என சொல்லப்படும் மருத்துவ குணங்கள் உள்ள பொருட்களில் இதை தான் முன்னிறுத்தி விற்பனை செய்துவருகின்றனர்.
இன்னொரு விஷயத்தில் ஆம்வே நிறுவனத்தில் கவனிக்க வேண்டும் என்றால் இவர்களுடைய பொருட்களை வாங்குபவர்கள் எப்படியாவது முதல் முறை ஏமாற்றப்பட்டு வாங்கிவிடுகின்றனர், பின்பு அந்த பொருளை பயன்படுத்தும்போது விலை உயர்ந்த பொருள் என்று மனதில் நினைத்துக்கொண்டே பயன்படுத்துவதால் இதுதான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்(உளவியல் ரீதியில் இதுதான் நடந்து வருகிறது).
சில நாட்களுக்கு முன்பு எங்கள் உறவுக்காரர் ஊரில் இருந்து ஒரு திருமண விழாவிற்கு வந்திருந்தார். அவர் எப்போதும் ஹமாம் சோப்புதான் பயன்படுத்துவார், நாங்கள் வேறு ஏதேனும் ஒரு சோப்பை கொடுத்தால் வேண்டாம் எனக்கு ஹமாம் பழகிவிட்டது என்று சொல்வார். ஆனால் இந்த முறை அவருக்கு ஹமாம் சோப்பு கொடுக்கும்போது அவர் சொன்ன பதில் "ஆம்வே சோப்பு தவிர வேறு சோப்பு போட்டால் உடல் அரிக்கிறது" என்று. எனக்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை பல ஆண்டுகளாக ஹமாம் சோப்பு பயன்படுத்தியவர் இப்போது இந்த விலை உயர்ந்த சோப்பை பயன்படுத்தவில்லை என்றால் உடல் அரிக்கிறது என்று கூறுகிறார் என்றால் பாருங்கள் இவர் எந்த அளவுக்கு உளவியல் ரீதியாக மனம் மாறிவிட்டார் என்று.
அதேப்போல்தான் இவர்கள் விற்பனை செய்யும் முகத்தை அழகுப்படுத்தும் க்ரீமும் , யாராவது ஒருவர் தன் கண் முன் கருப்பாக தெரிந்துவிடக்கூடாது உடனே இரண்டாயிரம் மூன்றாயிரம் என்று ஏதாவது ஒரு க்ரீமை பரிந்துரைத்து பணத்தை கரந்து விடுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் இதுவரை ஒருநாளைக்கு ஒருமுறை முகம் கழுவியவன் இந்த க்ரீம் தடவுவதர்க்காகவே மூன்று நான்கு முறை தன் முகத்தை கழுவுகிறான். இதனால் முகம் கொஞ்சம் வெள்ளையாக தெரிந்தாலும் க்ரீம் மூலம் தான் வெள்ளை கிடைத்தது என்று நினைத்துக்கொண்டு மற்றவர்களிடமும் பரிந்துரைக்கின்றார். சாதாரணமாக எந்த ஒரு க்ரீமும் போடாமல் ஒருநாளைக்கு காலையும் மாலையும் முகத்தை கழுவினாலே முகம் பளிச்சிடும். ஆனால் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே முகம் கழுவும் நபர்களை இப்படி விலைஉயர்ந்த பொருட்களை வாங்கவைத்து தனக்குள்ளேயே இவர்கள் பொருட்கள்தான் குணப்படுத்துகிறது என்று நினைக்கவைத்து மேலும் மேலும் ஏமாற்றி வருகின்றனர்.
அதே போல் இவர்கள் விற்பனை செய்யும் பேஸ்ட், பிரஷ் போன்றவற்றுக்கும் இவர்களைவிட விலைகுறைந்த தரமான இந்தியபொருட்க்கள் பலவற்றை கூறலாம். ஆனால் பரிந்துரைப்பவர் உறவினர் நண்பர் என்பதால் முகத்தாட்ச்சனைக்காக வாங்கிவிட்டு பிறகு விலை உயர்ந்த பொருள் என்பதால் தனது மனதுக்குள்ளேயே தான் இதற்க்கு முன் பயன்படுத்திய பொருளை விட நன்றாக உள்ளது என்று தன்னை தானே ஏமாற்றி கொள்கின்றனர்.
விழித்துக்கொள்ளுங்கள்:
நம் நாட்டின் மீது மறைமுகமாக பல நாடுகள் போர் தொடுத்து வருகின்றன, போர் என்பது ஆயுதம் ஏந்தி போரிடுவதுதான் என்று இல்லை. பொருளாதார ரீதியில் 120 கோடி மக்கள்தொகை உள்ள நம் நாட்டில் நமது பொருட்களை நாம் தயார்க்கமுடியாமல், பயன்படுத்த முடியாத அளவுக்கு பல அயல்நாட்டுப் போருட்களை வாங்கி நம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் சீரழித்து, அழித்து வருகிறோம். இதனால் நமக்கு எந்த பாதிப்பும் வராது என்ற மனக்கணக்கை போட வேண்டாம், நாம் என்னத்தான் கோடி கோடியாக பணம் சம்பாதித்தாலும் சாப்பிட உணவைத்தான் உட்கொள்ள வேண்டும். ஆனால் இன்று உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளே பட்டினியாலும், வறுமையாலும் தற்கொலை செய்துக்கொள்ளும் அவல நிலையை உருவாக்கி வருகிறோம். இந்த தற்கொலைகள் நாளை மிகப்பெரிய ஒரு அழிவை உண்டாக்குவதர்கான அறிகுறி மட்டுமே. பறவைகளின் அழிவு எப்படி இயற்க்கை சீரழிவை காட்டுகிறதோ அதே போல் தான் இந்த உழவர்களின் தற்கொலை நாளை நம் நாட்டின் பேரழிவை எச்சரிக்கிறது. இந்த அழிவை தவிர்க்கவேண்டிய கடமை மக்களாகிய நம்மிடம்தான் உள்ளது. ஆட்சியாளர்களை குறைக்கூறி அவர்கள் காப்பாற்றுவார்கள் என்று தவறை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டாம். நம் நாட்டின் வளத்தை சுரண்டி வெளி நாட்டில் பதுக்கவும், வசிக்கவும் தயாராகி வருகின்றனர். இலங்கையை போல் நாளை நாமும் இழப்பு என்று வரும்போது வசதி படைத்தவன் மட்டுமே வாழ முடியும் என்ற அவள நிலையை நம்மை அறியாமலே நாம் உருவாக்கி வருகிறோம்.
நம் நாட்டின் அருமை பெருமை தெரியாத இத்தாலிய பெண்ணும், ரிமோட் கண்ட்ரோல் பிரதமர் மன்மோகன் சிங்கும் நம் நாட்டை அண்டை நாடுகளிடம் அடகு வைத்து வருகின்றனர். இதனால் மிகப்பெரிய அழிவை சந்திக்கப்போவது நாம் தான். தயவு செய்து அண்டைநாட்டு பொருட்களையும், உணவுகளையும் தவிர்த்து நம் நாட்டின் உழவர்களையும், தொழிலாளர்களையும் பாற்றி சிந்தித்து செயல்படுங்கள். எதிலுமே சுயநலமாக சிந்தித்து இன்று நமக்கு நாமே குழிபறித்து வரும் செயல் தான் இந்த அண்டை நாட்டு பொருட்களை பயன்படுத்துவது. விழித்துக்கொள்ளுங்கள்....