திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Wednesday, March 16, 2011

ராஜா கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை

,

சென்னை: 2ஜி ஊழலில் கைதான மாஜி மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ராஜா நண்பர் சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறைந்த விலைக்கு பெற்று ஊழல் மோசடி செய்த டி.பி.ரியால்டி நிர்வாக இயக்குநர் சாகித் பல்வாவுக்கு உதவி செய்திருக்கலாம் என்பது சாதிக்பாட்சா மீதான குற்றச்சாட்டாகும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் இருக்கும் சாதிக்பாட்சா வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னையில் கிரீன்ஹவுஸ் புரோமட்டர்ஸ் ரியல்எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தார் சாதிக்பாட்சா. இந்நிறுவனத்தில் ராஜாவின் மனைவியும் ஒரு பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது. 2ஜி மோசடியில் கிடைத்த பணத்தை ரியல்எஸ்டேட்டில் முதலீடு செய்யவும், ராஜாவுக்கு சாதிக் உதவியதாக குற்றச்சாட்டு உள்ளது. இவர் ராஜாவின் பினாமியாக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.

தூக்கில் தொங்கிய சாதிக்: 2ஜி ஒதுக்கீடு மோசடியில் கிடைத்த பணம் சாதிக் பாட்சாவிடம் இருக்கும் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. இந்நிலையில் இன்று மதியம் சாதிக் பாட்ஷா சென்னை, தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி, 5வது குறுக்குத்தெரவில் இருக்கும் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் சாதிக் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்த அவரது குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சாதிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சாதிக் உடல் சென்னை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

உறவினர்கள் கண்ணீர் : தூக்கில் தொங்கிய சாதிக்கின் உடலைப்பார்த்து அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

நெருக்கடி ! சாதிக்பாட்ஷா தற்கொலையின் பின்னணியில் அரசியல் நெருக்கடி இருக்கலாம் என கூறப்படுகிறது. 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ராஜா மீது வருகிற 31ம் தேதியன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சி.பி.ஐ., இன்று சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கில் தனக்கு நெருக்கடி ஏற்படும் என கருதிய சாதிக்பாட்சா தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

யார் இந்த சாதிக்? : தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சா பெரம்பலூரை சேர்ந்தவர். சாதிக்கின் உறவினர் ஒருவர் தீவிர தி.மு.க. ஆதரவாளர் அவர் மூலமாகத்தான் மாஜி மத்திய அமைச்சர் ராஜாவுடன் பழகும் வாய்ப்பு சாதிக்கிற்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து இருவரும் நட்போடு பழகி வந்தனர். 2004ம் ஆண்டு சென்னை வந்த சாதிக் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்தில் ராஜாவின் மனைவி பரமேஸ்வரி இணை மேலாண்மை இயக்குனராக பணியாற்றினார். பின்னர் 2008ம் ஆண்டில் அந்த பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். மேலும் ராஜாவின் அண்ணன் ஒருவர் க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜாவின் அண்ணன் தனது நிறுவனத்தில் இயக்குனராக இருப்பதால்தான் சிபிஐ என்னை விசாரிக்கிறது என்று சாதிக் பாட்சா கூறி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போலீசில் புகார் : சாதிக் பாட்ஷா தற்கொலைசெய்து கொண்டதையடுத்து அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார். அவர் 2ஜி ஸ்பெக்ட்ரம வழக்கை சமாளித்து வந்ததாகவும் தனது மனுவில் கூறியுள்ளார்.

டில்லியில் பரபரப்பு : சாதிக் தற்கொலை விவகாரம் டில்லியிலும் எதிரொலித்துள்ளது. 2ஜி வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. சி.பி.ஐ., அதிகாரிகள் ஏற்கனவே சாதிக்கை சென்னை மற்றும் டில்லியில் வைத்து பலமுறை விசாரணை நடத்தியுள்ளது. இன்று பிற்பகல் விசாரணைக்கு வரும்படி சாதிக்குக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த விசாரணையில் பங்கேற்பதற்காக டில்லி செல்ல சாதிக் விமான டிக்கெட் எடுத்திருந்தார். ஆனால் டில்லி புறப்படும் முன்னரே சென்னையில‌ே‌யே தற்கொலை செய்து கொண்டுள்ளார். சாதிக்பாட்சா தற்கொலை சம்பவம் 2ஜி விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

0 comments to “ராஜா கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates