அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா! என்ற காமெடி வரி அனைவருக்கும் பரிச்சயமானதுதான். அரசியல் என்றாலே சில விட்டுக் கொடுத்தல்களை செய்து தான் ஆகவேண்டும் என்பது எழுதாத சட்டமாக உள்ளது. ஆனால் அப்படி விட்டுக் கொடுப்பது இஸ்லாமாக இருப்பதுதான் வேதனையாகும். அரசியல் என்று வந்துவிட்டால் அங்கே இஸ்லாம் இரண்டாம் பட்சம்தான் போலும்.
வெள்ளிக்கிழமை தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், தனது பிரச்சாரத்தை தொடங்கிய இடம்தான் கவனிக்க வேண்டியதாகும். இவர் நெல்லை வண்ணார்பேட்டை சாலைத் தெருவில் உள்ள வெற்றி வேலடி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜையை முடித்துக் கொண்டு, விநாயகரை வணங்கி கன்னத்தில் போட்டுக் கொண்டு, தேங்காய் விடலையும் போட்டு தனது பிரசாரத்தை தொடங்கினாராம்.
என்ன இப்படி? என கட்சிக்காரர்களிடம் கேட்டால், மைதீன்கான் இதே தொகுதியில் 2001, 2006 தேர்தல்களில் போட்டி போட்டபோதும் இதே கோயிலில் வணங்கிவிட்டுதான் பிரசாரத்தை தொடங்கினார். இரு தேர்தல்களிலும் அவருக்கு அமோக வெற்றி. அதுமட்டுமல்ல, கடந்த தேர்தல் வெற்றி அவரை அமைச்சராகவும் ஆக்கியது. அந்த "சென்டிமெண்ட்'தான் மைதீன்கானை இந்தத் தேர்தலிலும் இங்கே அழைத்து வந்துள்ளது என்றனராம்.
முஸ்லிமான மைதீன்கான், தனக்கு வெற்றியையும்-தோல்வியையும் தீர்மானிப்பது இறைவன் தான் என்பதை மறந்து, அல்லாஹ்வை விடுத்து வேறு ஒரு தெய்வத்தை பிரார்த்தித்து தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் என செய்திகள் கூறுகின்றன.
மேலும், இந்த கோயிலில் வழிபட்டு சென்றால் வெற்றி உறுதி என்பதும் அவரது செண்டிமெண்ட் என்றும் தெரிகிறது. பதவி எனும் மேல் துண்டிற்காக இஸ்லாம் எனும் உயிர்மூச்சை பின்னுக்கு தள்ளுவது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல என்பதை சகோதர வாஞ்சையோடு அவருக்கு சொல்லிக் கொண்டு, அவரது இறைநம்பிக்கையின் உறுதிக்காக பிராத்திக்கிறோம்.
-முகவை அப்பாஸ்.