திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Wednesday, July 27, 2011

ரமழானும் தர்மமும்

,
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும் பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் செலவிடுங்கள். கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள். அல்லாஹ் தேவையற்றவன். புகழுக்குரியவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். (2:267).
மக்களின் தேவைகளுக்காக ஏதாவது கொடுத்துதவும் போதும் மக்களுக்கு தர்மங்கள் ஸதகாக்கள் செய்யும்போதும் ஹலாலான சமம்பாத்தியங்களிலிருந்து செலவிட வேண்டும். உழைப்பு ஆகுமானதாகவும் தூய்மையானதாகவும் இருத்தல் அவசியமானதாகும். சிறந்த, உயர்தரமான பொருட்களையே மக்களுக்கு வழங்கவேண்டும். தர்மம் செய்கிறோம், இனாமாக வழங்குகிறோம் என்பதற்காக பழுதடைந்த மட்டகரமான மோசமான பொருட்களை வழங்கிடக் கூடாது என அல்லாஹ் தடைவிதிக்கிறான்.
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி தர்மம் செய்வதாக இருந்தால் அல்லாஹ் பொருந்திக் கொள்கின்ற பிரகாரமே தர்மம் செய்ய வேண்டும். அல்லாஹ் அங்கீகரிக்காத பொருட்களையோ அல்லது செல்வங்களையோ பகிர்ந்து கொடுப்பதால் நன்மை ஏதும் கிடைத்துவிடப் போவதில்லை.
ஹராமான வழிகளில் சம்பாதித்து சொத்துக்களை வியாபார பொருட்களை ரமழானில் ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதாலோ அல்லது பள்ளிவாசல்களுக்கு வழங்குவதாலோ நன்மைகள் கிடைக்கப் போவதில்லை.
“அல்லாஹ் நல்லதை தவிர வேறெதனையும் ஏற்றுக் கொள்வதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி).
எங்களுக்கு யாராவது எதையாவது கொடுத்தால் அது நல்லதாக தரமானதாக பயன்படுத்துவதற்கு உகந்ததாக இருப்பதையே விரும்புவோம். மட்டகரமானதை தந்தால் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
இதுபோலவே நாம் மற்றவர்களுக்கு கொடுக்கும்போது கூட நல்லதையே கொடுக்க வேண்டும். நாம் விரும்பு வதையே மற்றவர்களுக்கும் விரும்ப வேண்டும்.
நீங்கள் விரும்புவதை செலவிடாதவரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் எப்பொருளை செலவிட்டாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை அறிந்தவன் (3:92).
மேலே கூறிய 2:267 வசனம் அருளப்பட்டது தொடர்பாக பராஉ பின் ஆஸிப் (ரழி) பின்வருமாறு கூறுகிறார்கள்.
பேரீச்ச மரத்திலிருந்து பேரீச்சம் கனிகள் பறிக்கும் நாட்களில் அன்சாரித் தோழர்கள் தம் தோட்டங்களிலிருந்து செங்காய் குலைகளைப் பறித்துக கொண்டு வந்து மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலின் இரண்டு தூண்களுக்கிடையே கயிற்றில் கட்டித் தொங்க விடுவார்கள். ஏழை முஹாஜிரீன்கள் அதை எடுத்து உண்பார்கள்.
ஒரு தடவை ஓர் அன்சாரித் தோழர் அந்த செங்காய் குலைகளுக்கிடையே மட்டமான காய்ந்த பேரீச்சம் குலையைத் தொங்க விட முற்பட்டார். அது அனுமதிக்கப்பட்டதுதான் என அவர் எண்ணிக் கொண்டார். (அது கூடாது என்பதை சுட்டிக் காட்டுவதற்கு) அவர் தொடர்பாகவே இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான். (நூல்: இப்னு மாஜா தப்ஸீர் இப்னு கஸீர்).
மக்களுக்கு வழங்கும்போது நல்லவைகளை வழங்க வேண்டும் என்ற போதனையை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். அதனையே அல்லாஹ் அங்கீகரிக்கிறான்.
தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் நன்மைதான் எனக் கூறுவீராக. (2:215).
ரமழான் தரமம் செய்வதற்கான காலம். உண்மையான ஏழை எளியவர்களை அடையாளம் கண்டு துயரங்களை துடைத்துவிடுகின்ற காலம். நபிகளார் (ஸல்) அவர்கள் ரமழானில் வாரி வழங்கும் வள்ளலாக திகழ்ந்தார்கள். எனவே நன்மைகளை பயிர்ச்சைகை செய்யக்கூடியதாக ரமழானை பயன்படுத்துவோம். தன்மானம் காத்து கையேந்தாது வாழும் உண்மையான ஏழைகளை அடையாளம் கண்டு தர்மம் செய்வோம். அந்த தர்மத்தை எமது குடும்பத்திலிருந்து ஆரம்பிப்போம். வீடுவீடாக வீதிவீதியாக சுற்றித்திரியும் மிஸ்கீன்களை பற்றியும் அக்கறை செலுத்துவோம்.
ரமழான் காலங்களில் தர்மத்தின் சிறப்பையும் செயற்பாடுகளையும் அவதானித்து பல பிச்சைக்கரர்கள் வெளியே வருகிறார்கள். உண்மையில் இவர்கள் பிச்சைக்காரர்களா? அல்லது பிச்சைக்காரர்களாக வேடம் போடுகிறார்களா? ரமழானுக்கு முன்பு இவர்கள் எங்கே போயிருந்தார்கள்?இந்தளவு தொகையினர் பிச்சைக்காரர்களாக மாறியது எப்படி? என்பதிலும் பரிசீலனை செய்வோம்.
முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் வியாபாரங்கள் செய்யும் இடங்களிலும் அதிகமான பிச்சைக்காரர்கள் காலையிலும் மாலையிலும நடமாடுகிறார்கள். இது பலருக்கு தொல்லையாகவும் மாற்று மத நண்பர்களுக்கு பிரச்சனையாகவும் உருவாகிறது.இஸலாத்தைபற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் தப்பு தப்பாகவே விமர்சனம் செய்கிறார்கள்.நாம் அறிந்த வகையில் முஸ்லிமல்லாத நண்பர்களும் முஸ்லிம்கள் போல் பாவனை செய்து பிச்சைகாரர்களாக வலம் வருகிறாரகள். சிலர் நகர் பகுதிக்கு அண்மையில் -சேரிவாழ் பகுதிகளில்-வாடகைக்கு வீடு எடுத்து பிச்சை எடுக்கிறார்கள். பிச்சகைகாரர்கள் இலட்சாதிபதிகளாக ஆகுவதற்கும் போட்டிபோடுவதுண்டு.
உண்மையான மிஸ்கீன்களையும் ஏழை எளியவர்களையும் அடையாளம் கண்டு அவர்களின் பிரச்சனைகளை தீரக்க ஒவ்வொரு மஹல்லாவிலும் பள்ளிவாசல் நிர்வாகிகள் நடவடிக்கை எடுப்பது பற்றி சிந்தித்தால் சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது கடினமாக இருக்கர்து.
தர்மங்களும் ஜகாத்களும் பயனுடையதாக ஆகுவதற்கு ஒவ்வொருவரும் சிந்திப்போம்.

0 comments to “ரமழானும் தர்மமும்”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates