திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Wednesday, November 9, 2011

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை; முதல் தீர்ப்பு; 31 பேருக்கு ஆயுள் தண்டனை.

,
மெஹசானா (குஜராத்), நவ. 9: குஜராத் கலவரத்தின் போது 33 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 42 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. குஜராத்தில் 2002-ம் ஆண்டு கலவரத்தின்போது சர்தார்புரா கிராமத்தில் வீடு ஒன்றில் இருந்த 33 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. குஜராத் கலவர வழக்கில் வழங்கப்பட்டுள்ள முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கு விவரம்: குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பில் கரசேவகர்கள் உள்பட 59 பேர் கொல்லப்பட்டனர். 2002 பிப்ரவரி 27-ம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதையடுத்து குஜராத் முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை பரவியது. 2002-ம் ஆண்டு பிப்ரவரி 28- இரவில் மெஹசானா மாவட்டம் சர்தார்புரா நகரில் சிறுபான்மையினர் இருந்த வீட்டை சுற்றி வளைத்த வன்முறையாளர்கள், பெட்ரோல் ஊற்றி வீட்டுக்குத் தீவைத்தனர். கலவரத்துக்கு பயந்து அந்த வீட்டில் மறைந்து இருந்த 22 பெண்கள் உள்பட 33 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக 73 பேர் மீது வழக்கு நடைபெற்று வந்தது. குஜராத் கலவர வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுதான் இந்த வழக்கையும் விசாரித்தது. குஜராத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
42 பேர் விடுவிப்பு: இதில், குற்றம்சாட்டப்பட்ட 73 பேரில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி எஸ்.சி,ஸ்ரீவஸ்தவா தீர்ப்பு வழங்கினார். 42 பேர் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் 11 பேர் போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 31 பேர் சந்தேகத்தின் பலனில் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள 31 பேர் மீது கொலை, கொலை முயற்சி, வன்முறையில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால் குற்றத்துக்கான சதி செய்த குற்றச்சாட்டை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க தண்டனை பெற்ற 31 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதமும், கூடுதல் அபராதமாக தலா ரூ. 20 ஆயிரமும் விதிக்கப்பட்டது.
சந்தேகத்தின் பலனாக விடுவிக்கப்பட்டவர்கள் நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது.
தலா ரூ.25 ஆயிரத்துக்கு பத்திரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் 76 பேர் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர். இதில் இருவர் விசாரணையின் போதே இறந்து விட்டனர். ஒருவர் சிறுவர் என்பதால், அவர் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட மற்ற 73 பேர் மீதான வழக்கு 2009 ஜூலை முதல் விசாரிக்கப்பட்டு வந்தது. தண்டனை வழங்கப்பட்டுள்ள 31 பேரும் மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடியும்.
தீர்ப்பு திருப்தி: இந்த தீர்ப்பு திருப்தி அளிக்கிறது. எங்கள் அதிகாரிகளின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது என்று வழக்கை விசாரித்த சிறப்பு விசாரணைக்குழுவின் தலைவர் ஆர்.கே. ராகவன் கூறியுள்ளார்.
குஜராத் கலவரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு மொத்தம் 9 வழக்குகளை விசாரித்தது. இதில் இப்போது முதல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 

0 comments to “குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை; முதல் தீர்ப்பு; 31 பேருக்கு ஆயுள் தண்டனை.”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates