திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Friday, November 18, 2011

பாகிஸ்தானில் கோயிலுக்கு கிடைத்த நீதி, பாரதத்தில் பாபர் பள்ளிக்கு கிடைக்குமா?

,


மது அண்டை நாடான பாகிஸ்தான், 'இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆப் பாகிஸ்தான்' என்று அழைக்கப்படுவதால், அந்த நாட்டின் பெயரில் இஸ்லாம் என்ற வார்த்தை ஒட்டிக்கொண்டிருப்பதால் பாகிஸ்தான் ஏதோ இஸ்லாமிய நாடு போன்றும், அங்கே இஸ்லாமிய ஆட்சி நடக்கிறது என்பது போன்றும் கற்பனை செய்து கொண்டு அந்த நாட்டை இஸ்லாமிய தீவிரவாத நாடாக காட்டுவதில் இந்துத்துவாக்கள் கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் பயன்படுத்தினார்கள். 
அவர்கள் மட்டுமன்றி ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு, அந்த நாட்டில் நடக்கும் கொலையை  'இந்து வியாபாரி வெட்டிக்கொலை' 'இந்து மருத்துவர் கொலை' என்றும், இந்து வியாபாரியிடம் வழிப்பறி என்றும் எழுதி அங்கே கொலையோ கொள்ளையோ அதனால் பாதிக்கப்படுவது இந்துக்கள் மட்டுமே என்ற தோற்றத்தை விதைத்தது. ஆனால் உண்மை என்னவோ நேர் மாற்றமானது. அங்கு நடக்கும் கொலையும்- கொள்ளைகளும் இனம்பார்த்து நடப்பதில்லை என்பதற்கு நாளும் வெடிகுண்டுகளால் சாகும் இஸ்லாமியர்களின் சடலம் சான்றாக உள்ளது. அடுத்தவர்களுக்கு தீங்கிழைக்கும் அயோக்கியர்களுக்கு தன் மதம், தன் இனம், அடுத்த மதம் அடுத்த இனம் இப்படி எதுவுமே கிடையாது. அவர்கள் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள். இவ்வாறான சிந்தனை கொண்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் மட்டுமல்ல; இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் இருப்பார்கள். இத்தகையோர் எண்ணிக்கையில் குறைவானவர்களே! ஆனால் மதம் கடந்து மனிதமும், நியாயம் பேணும் மக்கள் உலகில் பெரும்பான்மையாக உள்ளனர். அத்தகைய நல்லோர் பாகிஸ்தானிலும் உண்டு என்பதற்கு சமீபத்திய ஒரு செய்தியை மேற்கோள் காட்டலாம்.
''பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் கோர் கத்ரி என்ற இடத்தில் உள்ள 160 ஆண்டு பழமையான இந்து கோவில் உள்ளது. கோரக்நாத் கோயில் என்ற இந்த கோயில் 60 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. இந்த கோயிலின் பூசாரி பூல் வாட்டியின் மகள் கமலா ராணி பெஷாவர் ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் இந்த கோயில் தங்கள் குடும்பத்துக்கு சொந்தமானது என்றும் ஆனால் போலீசார் இதை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மூடி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இதை தொடர்ந்து விசாரணை நடத்திய கோர்ட்டு வழிபாட்டு தலத்தில் வழிபாடு நடத்தப்படாமல் பூட்டி வைப்பது அனைத்து சட்டத்துக்கும் எதிரானது. எனவே கோயிலை பக்தர்கள் வழிபாடு நடத்த திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. கோயில் தங்கள் குடும்பத்துக்குதான் சொந்தமானது என்பதை நிரூபிக்க போதுமான சான்றாவணங்களை தாக்கல் செய்ய பூல் வாட்டி தவறி விட்டதாகவும் கோர்ட்டு குறிப்பிட்டது.இதை தொடர்ந்து கோயில் திறக்கப்பட்டது''.
மேற்கண்ட செய்தியை நாம் கவனிக்கும் போது பல உண்மைகள் வெளிப்படுவதைக்  காணலாம். பாகிஸ்தானில் மிக மிக சிறுபான்மையாக வாழும் இந்துக்களின் வழிபாட்டுத்தலம், முஸ்லிம்கள் ஆட்சியாளர்களாக இருந்தும் கூட நீதி மறுக்கப்படவில்லை. அந்த கோயில் இடிக்கப்படவில்லை. அங்கே உடனடி மசூதி எழுப்பப் படவில்லை. அறுபது ஆண்டுகாலம் பூட்டியிருந்தும் அக்கோயிலுக்கு சிறு சேதாரமும் இழைக்கப்படவில்லை. மீண்டும் அந்த கோயில் சம்மந்தப்பட்ட சமுதாயத்திடம் ஒப்படைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. இது எதைக் காட்டுகிறது என்றால், ஒரு சாரார் சிறுபான்மையினர்-பலவீனர் என்பதற்காக இந்த நாட்டின் நீதிமன்றம் அநீதிஇழைக்காது என்பதைத்தான்.
ஆனால் நமது இந்திய நாட்டில், அதுவும் மதசார்பற்ற நாட்டில் முஸ்லிம்களுக்கு சொந்தமான தொன்மையான வழிபாட்டுத்தலத்தில் சில வந்தேறி பயங்கரவாதிகள் இரவோடு இரவாக சிலை  வைத்து, அதைத்தொடர்ந்து அந்த வழிபாட்டுத்தலம் பூட்டப்பட்டு, நாளடைவில் உரிமையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அபகரிப்பாளர்களுக்கு ஆறுகால பூஜை செய்ய அனுமதித்து, பல கட்டங்களாக திட்டங்கள் தீட்டப்பட்டு, கரசேவை என்ற பெயரில் காவி பயங்கரவாதிகளால் பள்ளிவாசல் தகர்க்கப்பட்டு, உடனடியாக அந்த இடத்தில் பயங்கரவாதிகள் தற்காலிக வழிபாட்டுத் தலமும் எழுப்பி, அதை தொடர்ந்து அறுபது ஆண்டு காலம் கழித்து  வழங்கப்பட்ட இந்த வழக்கு சம்மந்தமான தீர்ப்பில், மூன்று பங்காக்கி முதலாளிக்கு ஒரு பங்கும் மோசடிக்கரனுக்கு இரண்டு பங்கும் தந்த அற்புதமான நீதி இந்த மதசார்பற்ற இந்தியாவில் வழங்கப்பட்டதே! இப்படிப்பட்ட மனுநீதி தீர்ப்பு வழங்கும் நீதிமான்[!]களும், இடிக்கப்பட்ட அதே இடத்தில் பள்ளியை கட்டித்தருவோம் என்று வாக்குறுதி அளித்து, வாக்குறுதியை காற்றில் பறக்க விட்ட காங்கிரசாரும், முஸ்லிம்களின் உயிருக்கும்- உடமைக்கும்- வழிபாட்டுக்கும் இடையூறு செய்யும் காவிகளும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தும் பிற மத வழிபாட்டுத் தலத்தின் உரிமையை நிலைநாட்டிய பாகிஸ்தான் நீதிமன்றத்திடம் பாடம் படிக்கட்டும்.  நீதியை மதிக்கட்டும். அந்த மதிப்பு பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் வழங்குவதன் மூலம் வெளிப்படட்டும்.
முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி  செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செலுத்துங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.[5 ;8 ]

0 comments to “பாகிஸ்தானில் கோயிலுக்கு கிடைத்த நீதி, பாரதத்தில் பாபர் பள்ளிக்கு கிடைக்குமா?”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates