திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Saturday, August 4, 2012

இம்மையின் கவனம் மறுமையை பாதிக்குமா? கவலை கொண்ட ஹன்ழலா[ரலி] அவர்கள்!

,
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எழுத்தாளர்களில் ஒருவரான ஹன்ழலா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்;
(ஒருநாள்) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து ''ஹன்ழலா எப்படி இருக்கிறீர்கள்'' என்று கேட்டார்கள். நான் ''ஹன்ழலா நயவஞ்சகனாகி விட்டான்'' என்று கூறினேன். அதற்கு. ''அல்லாஹ் தூயவன்! என்ன சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள்.
அதற்கு நான், ''நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கருகில் இருக்கும்போது அவர்கள் சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றி நாம் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் புறப்பட்டு (வீட்டுக்கு) வந்ததும் துணைவியருடனும், குழந்தைகளுடனும் கலந்துறவாடுகிறோம், பிழைப்புகளில் ஈடுபட்டு விடுகிறோம். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னவற்றில்) அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்'' என்று சொன்னேன்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக இதே நிலையை நாமும் சந்திக்கிறோம்'' என்று கூறினார்கள். பிறகு நானும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம்.
நான் ''அல்லாஹ்வின் தூதரே! ஹன்ழலா நயவஞ்சகனாகி விட்டான்'' என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''என்ன அது?'' என்று கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் அருகில் இருக்கும்போது தாங்கள் எங்களுக்கு நரகத்தையும் சொர்க்கத்தையும் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று
நினைவூட்டுகிறீர்கள். நாங்கள் உங்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றதும் துணைவியருடனும் குழந்தைகளுடனும் கலந்துறவாடுகிறோம். பிழைப்புகளில் ஈடுபட்டு விடுகிறோம். அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்'' என்று கூறினேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் என்னிடம் இருக்கும்போதுள்ள நிலையிலும் இறை எண்ணத்திலும் எப்போதும் இருந்தால் உங்கள் படுக்கைகளிலும் நீங்கள் செல்லும் வழிகளிலும் வானவர்கள் (வந்து) உங்களுடன் கைகுலுக்கியிருப்பார்கள். மாறாக, ஹன்ழலாவே! (இப்படிச்) சில நேரம் (அப்படிச்) சில நேரம்'' என்று மூன்று முறை கூறினார்கள். நூல் - முஸ்லிம் எண்; 5305
மேற்கண்ட பொன்மொழியில் இரு சிறந்த நபித் தோழர்கள்களான அபூபக்ர்[ரலி] மற்றும் ஹன்ழலா[ரலி] ஆகியோர் அமல்களில் சிறந்தவர்கள், அல்லாஹ்வின் அச்சத்தில் சிறந்தவர்கள். எனினும் அல்லாஹ்வின் தூதரோடு இருக்கும் போது உள்ள மார்க்க நினைவுகள் மறுமை அச்சம் நமது குடும்பத்தாரோடும், உலக வியாபார நிலைகளில் ஈடுபடும் போதும் இருப்பதில்லையே! என்று கவலை கொள்கிறார்கள்.
நமது இந்த இரண்டு நிலைப்பாடு நயவஞ்சகத்தின் அடையாளமோ என அச்சம் கொள்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரிடத்தில் விரைகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள், ''சில நேரம் மறுமை நினைவு, சில நேரம் உலக நினைவு என்பது இயல்பானதுதான்'' என்று ஆறுதல் கூறியபின் தான அமைதியடைகிறார்கள் என்றால், மார்க்கத்திற்காக தங்களை முழுமையாக அர்பணித்த நல்லறத் தோழர்களே தங்களின் அவசியமான உலக செயல்பாடுகள் எங்கே மார்க்கத்திற்கு முரனாகிவிடுமோ என்று கவலை கொள்கிறார்கள் என்றால், அமல்களில் பலவீனத்தையும், உலக ஆசாபாசங்களில் அதிக நேரத்தையும் செலவிடும் நாம் எந்த அளவிற்கு கவலை கொள்ள வேண்டும்? நாம் அவ்வாறு கவலை கொண்டதுண்டா? நமது ஒவ்வொரு அசைவும் மார்க்கத்தோடு பொருந்துகிறதா என சீர்தூக்கிப் பார்த்து வாழ்ந்த அபூபக்ர்[ரலி] மற்றும் ஹன்ழலா [ரலி] வாழ்விலிருந்து படிப்பினை பெறுவோம்.
-முகவை அப்பாஸ்

0 comments to “இம்மையின் கவனம் மறுமையை பாதிக்குமா? கவலை கொண்ட ஹன்ழலா[ரலி] அவர்கள்!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates