டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் ஏற்படுவதை தவிர்க்க வீடுகளை சுற்றி மழை நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும். காய்ச்சிய குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும். யாருக்காவது காய்ச்சல் தொடர்ந்து மூன்று நாட்கள் இருந்தால் உடனடியாக தேவையான மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு லேசான காய்ச்சல் இருந்தாலும் தாமதம் செய்யாமல் டாக்டர்களிடம் காட்டவேண்டும்.
டெங்கு காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது...?
டெங்கு காய்ச்சல் டெங்கு 1,2,3,4 என நான்கு வகை வைரஸ்களால் ஏற்படும் காய்ச்சல் ஆகும். ஏடிஸ் எஜிப்டை என்ற வகை கொசுக்களினால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. அவை மலேரியாவைப் பரப்பும் கொசுக்களிலிருந்து மாறுபட்டவை. அவை பொதுவாக பகலில் மட்டுமே கடிக்கின்றன.
பிடித்து வைத்துள்ள நீரில் அவை உண்டாகிப் பெருகுகின்றன. டெங்கு காய்ச்சல் உள்ள ஒருவரை இந்த வகை கொசு கடிக்குபோது வைரஸ் அதன் உடலுக்குள் செல்கிறது. அந்தக் கொசு நலமாயுள்ள ஒருவரைக் கடிக்கும்போது வைரஸ் அவரது உடலுக்குள் புகுந்து டெங்கு காய்ச்சலை உண்டாக்குகிறது.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன..?
டெங்கு காய்ச்சல் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் பாதிக்கும். திடீரென்று அதிகமான காய்ச்சல், தலைவலி, உடம்பில் தற்காலிகமாக தோல் பாதிப்பு, தொண்டைவலி, கண்வலி, இருமல் ஆகியவை முதல் அறிகுறிகளாகத் தோன்றுகின்றன. கடுமையான உடல்வலி, பசியின்மை குமட்டல், வாந்தியும் ஏற்படக்கூடும், சாதாரண இன்ஃபுளூயன்சா காய்ச்சல் மாதிரி இருந்து 4 அல்லது 6 நாட்களில் காய்ச்சல் குறைந்து உடம்பு முழுவதும் பொறிப்பொறியாக காணப்படலாம். கடுமையான வலி ஏற்படுவதால் இதை எலும்புடைக்காய்ச்சல் என்றும் அழைக்கிறார்கள்.
மற்றொரு வகை மிகவும் தீவிரமானது. இதை டெங்கு இரத்த ஒழுக்கு காய்ச்சல் (Dengue hemorrhagic fever அல்லது Dengue shock syndrome) என்றும் அழைக்கப்படுகிறது. உடம்பு அசதி, உறுப்புகளெல்லாம் குளிர்ந்து போதல், நாடித்துடிப்பு வலுவிழத்தல், இரத்த அழுத்தம் குறையக்கூடும். ஈறுகளில் இரத்தம், மூக்கிலிருந்து இரத்தம் ஒழுகக்கூடும். தட்டணுக்கள் இரத்ததில் குறைவாக இருப்பதால் இரத்தம் உறையும் தன்மை பாதிக்கப்பட்டு இரத்த ஒழுக்கு ஏற்படக்கூடும்.