திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Wednesday, November 24, 2010

தாய் எனும் வைரம்-2

,
பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம். இமாம் மாலிக்(ரஹி) அவர்களின் தாயைப் பற்றி பார்த்தோம். இன்று நாம் பார்க்க இருப்பது இமாம் புகாரி(ரஹி) அவர்களின் தாயைப் பற்றியும், அவரின் விடா முயற்சியும், அல்லாஹ் மீதிருந்த அசையா நம்பிக்கையும். மாஷா அல்லாஹ், இமாம்களைப் பற்றி படிப்பதற்கு முன் அவர்களின் தாயைப் பற்றி தெரிந்து கொள்வது இன்னும் அதிகமான பிரமிப்பை உருவாக்குகின்றது. அவர்களின் அர்ப்பணிப்பை பார்க்கும்போது இன்றைய சூழலில் பிள்ளை பெறுவதையும் வளர்ப்பதையும் பாரமாக நினைக்கும் பெண்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு இஸ்மாயில் இப்னு இப்றாஹீம் அல் புகாரி(ரஹி) அவர்கள் இஸ்மாயீல் என்பவருக்கு மகனாக கி.பி 810இல் (மேற்கு துர்கிஸ்தானில் உள்ள) புகாரா என்னும் ஊரில் ஜும்'ஆ தொழுகைக்கு பின் பிறந்தார்கள் என்றறியப்படுகின்றது. இவர் பிறக்கும்போதே கண் பார்வையில்லாதவராக பிறந்தவர். என்ன? ஆச்சரியமாக இருக்கின்றதா? ஆம். உண்மை அதுவே. தந்தையை சிறு பிராயத்திலேயே பறி கொடுத்த இமாமவர்கள் பிறவிக் குருடனாகவும் இருந்தார்கள்.

அந்த காலத்தில் எல்லாம் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் விதவையானாலோ அல்லது தலாக்காகி விட்டாலோ சிறிது நாட்களிலேயே மறுமண வரன்க‌ள் அவர்களை நோக்கி குவியும். இங்கே நான் குறிப்பிடுவது மேல்வர்க்க பெண்களையோ அல்லது செல்வச்சீமாட்டிகளையோ அல்ல. மாறாக அல்லாஹ்வின் பாதையில் தம்மையும் தம்மை சார்ந்தவர்களையும் அர்ப்பணிக்க தயாராக இருந்தவர்கள்.

அந்த கால கட்டத்தில் தன் கணவனை இழந்திருந்த இமாம் புகாரி(ரஹி) அவர்களின் தாய்க்கும் அந்த வாய்ப்புகள் வராமல் இல்லை. மாறாக அவர் வந்த வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்தார். தன் மனதின் ஆசைகளையும் உடல் தேவைகளையும் கட்டுப்படுத்தி தன் குழந்தைகளை சீரும் சிறப்புமாய் இஸ்லாத்தின் மடியில் வளர்ப்பதிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அத்தகைய தாய்க்கு தன் மகன் குருடாய் இருப்பது எவ்வளவு மன வேதனையளித்திருக்கும்? து'ஆ செய்ய ஆரம்பித்தார். ஒன்றல்ல, இரண்டல்ல...யாரிடமும் கேட்டல்ல...கண்கள் இரண்டிலிருந்தும் ஆறுகள் பாய்கின்றனவோ என எண்ணுமளவிற்கு இறைவனிடம் இறைஞ்சுவதில் சிறிதும் குறைவின்றி எல்லா நேரமும் அதே நோக்கத்தில் து'ஆவும் தொழுகையுமாக இருந்தார். அல்லாஹ்வின் கருணைக்கரம் அவரை நோக்கியும் நீண்டது. அவரின் கனவில் ஓர் நாள் நபி இப்றாஹீம்(அலைஹ்) அவர்கள் வந்தனர். வந்தவர்கள் அந்த தாய்க்கு ஆறுதல் கூறி, அவர்களின் து'ஆ இறைவனிடத்தில் ஏற்கப்பட்டதை கூறி அதன் பலனாய் இமாமவர்கள் பார்வை கிடைக்கப் பெற்றதையும் கூறினார்கள். அல்ஹம்துலில்லாஹ் தூக்கத்திலிருந்து விழித்த தாய் அந்த கனவில் வந்த செய்தியை உண்மையென கண்டார்கள். இமாமவர்களின் கண்களில் பார்வை அருளப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். அதன்பின் அந்த தாய் தன் மகனை எவ்வாறு வளர்த்தார் என்பது இமாமவர்க்ளின் வாழ்வின் மூலமும், அவரின் ஒப்பற்ற புத்தகங்கள் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அந்த தாயின் து'ஆ ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணிகள்:

  • அல்லாஹ் மீதான அசையாத நம்பிக்கை, அவனின் உதவி மேலான நம்பிக்கை.
  • து'ஆ ஏற்றுக்கொள்ளபட வேண்டிய சூழலை உண்டாக்கியது (ஆம்! து'ஆ ஒவ்வொன்றும் கபூல் ஆவதற்கு தேவையான காரணிகள் பல உண்டு )
  • தம் பிள்ளைகள் இஸ்லாத்திற்காகவே வாழ்ந்து அதன் பாதையிலேயே மரணிக்க வேண்டும் என மனதில் உறுதியுடன் வாழ்ந்தது.
  • இன்னும் பல கூறலாம்.

நம்மை நோக்கி நாம் கேட்க வேண்டிய கேள்வி:
  • நாம் எவ்வளவு தூரம் நம் குழந்தைகளுக்காக து'ஆ செய்கின்றோம்?
  • அவர்களின் உடல் நலனுக்காகவும், பாட சம்பந்தமாகவும் கட்டாயம் செய்வோம். அவர்களின் ஆகிரத்திற்காக?
  • அல்லாஹ்விடம் அவர்களுக்காக தவ்பா செய்து?
  • அவர்களின் அமல்களை அல்லாஹ் பொருந்திக்கொள்ள?
  • நாளை கப்ரில் நாம் சென்ற பிறகு நமக்காக து'ஆ செய்யும் ஹிக்மத்திற்காக?

யோசியுங்கள். முடிவு உங்கள் கையில்.
எப்பொழுதும் நம்மை மாற்றிக் கொள்ளலாம்...திண்ணமாக அல்லாஹ்வின் உதவி மிக மிக அருகில் உள்ளது!!   homeschoolingintami

0 comments to “தாய் எனும் வைரம்-2”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates