திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Tuesday, January 10, 2012

இஸ்லாத்தை தழுவியதால் தீவிரவாதியாக்க முயற்சி: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் இளைஞர்

,


  bilal
மானந்தவாடி(கேரளா):சத்தியத்தை குறித்த தேடுதலில் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட இளைஞரை தீவிரவாத முத்திரைக்குத்தி வேட்டையாட தேசிய புலனாய்வு ஏஜன்சியும், மாநில போலீசாரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சார்ந்தவர் பிலால்.இவர் தற்பொழுது வயநாடு மானந்தவாடியில் வசித்துவருகிறார். புலனாய்வு அதிகாரிகளின் பகையை தீர்த்துக்கொள்ளும் முயற்சிக்கு எதிராக சட்டநடவடிக்கை தயாராகி வருகிறார் பிலால்.
நேற்று முன்தினம் இரவு என்.ஐ.ஏ உள்ளிட்ட பெரும் போலீஸ் படை பிலால் வசித்துவரும் மானந்தவாடி என்ற இடத்தில் உள்ள இவரது வீட்டை சுற்றி வளைத்து பின்னர் அவரை கைது செய்தனர். மூன்று வாகனங்களில் வந்த போலீஸார் அப்பகுதியில் ஒரு பயங்கரவாத சூழலை உருவாக்கிய பின்னர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ஒன்றரை மணிநேரம் விசாரணை நடத்திய பிறகு போலீஸ் வாகனத்திலேயே இவரை வீட்டில் கொண்டு விட்டுள்ளனர். கேரள மாநில முவாற்றுப்புழாவில் நபிகளாரை அவமதித்த பேராசிரியரின் கை வெட்டப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என குற்றம் சாட்டி இந்த விசாரணை நாடகத்தை போலீஸார் மேற்கொண்டனர்.
தனிப்பட்ட விரோதத்தின் அடிப்படையில் சில உள்ளூர்வாசிகள் அளித்த தவறான தகவலின் அடிப்படையில் தன்னை தீவிரவாதியாக சித்தரிக்கும் வகையில் போலீஸ் நடந்துக் கொண்டதாக பிலால் கூறுகிறார்.
இதுக்குறித்து பிலால் கூறியதாவது: ‘பொது சமூகத்தில் அனைவர் மத்தியிலும் அறிமுகமான என்னை தனியாக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரிக்காமல், இரவு நேரத்தில் பயங்கரவாத பீதியை உருவாக்கி ஊர்மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இது ஒரு மனித உரிமை மீறலாகும்.
இதுத்தொடர்பாக நீதிமன்றத்தையும், மனித உரிமை அமைப்புகளையும் அணுகுவேன். சமூகத்தில் என் மீது தீவிரவாத முத்திரைக்குத்த முயன்றவர்கள் மீதும், அதற்கு உதவிய போலீஸார் மற்றும் தவறான செய்தியை அளித்த பத்திரிகை மீதும் வழக்கு தொடர்வேன்.’ என பிலால் கூறினார்.
இந்து மதத்தின் நாயர் சமூகத்தை சார்ந்தவராக இருந்த பிலால் துபாயில் வைத்து இஸ்லாத்தை தழுவினார். பின்னர் நாடு திரும்பிய பொழுது ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொண்டார். ஒரு மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்த பிலால் தனக்கு அறிமுகமான மெஹ்ருன்னிசா என்பவரை திருமணம் செய்தார். பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்காக வயநாட்டில் தனது குடும்பத்துடன் வசிப்பிடத்தை மாற்றினார் பிலால். அயல்வாசிகளுடன் ஏற்பட்ட சின்ன பிரச்சனை போலீசாரின் அச்சுறுத்தல் நடவடிக்கையில் முடிந்துள்ளது என பிலால் கூறுகிறார்.
நிரபராதியான தன்னையும், குடும்பத்தையும் நிம்மதியாக வாழவிட்டால் போதும் என கோரிக்கை விடுக்கிறார் பிலால்.

0 comments to “இஸ்லாத்தை தழுவியதால் தீவிரவாதியாக்க முயற்சி: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் இளைஞர்”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates