இரவு மணி 11. சென்னை கடற்கரை சாலையில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு எதிரில் புர்கா அணிந்த 14 வயதுச் சிறுமி ஒரு இளைஞனோடு பேசிக் கொண்டு நின்று கொண்டிருக்க... இருள் சூழ்ந்த அந்த நேரத்தில் யாருமற்ற சூழ்நிலையில் இந்தக் காட்சியைக் கண்ட அந்த வழியாகச் சென்ற இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த காஜா கரிமுல்லாஹ் தனது வண்டியை நிறுத்தினார்.
அவர்கள் அருகே சென்று அந்த இளைஞனிடம் நீங்கள் யார் என்று விசாரித்தபோது அந்த இளைஞன் இந்தப் பெண் எனது தங்கை என்று கூறினான். இதனை நம்பாத காஜா கரிமுல்லாஹ் உண்மை நிலையை விசாரித்துக் கொண்டிருக்கும்போது அந்த வழியாகச் சென்ற பர்மா பஜார் சகோதரர்களும் இந்த சம்பவத்தை பார்த்து அவர்களும் காஜா கரிமுல்லாஹ்வுடன் சேர்ந்து கொண்டு அந்தப் பெண்ணையும், இளைஞனையும் துருவித் துருவி விசாரித்தனர்.
அந்த இளைஞன், நான் இந்த வழியாகப் போகும்போது இந்தப் பெண் தனியாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவளுக்கு லிப்ட் கொடுக்கத்தான் பேச்சு கொடுத்தேன் என்று கூறினான். இவள் எனது தங்கையல்ல என்று உண்மையைச் சொன்னான்.
அந்த இளைஞனை விசாரித்த கரிமுல்லாஹ் அவனது முகவரி, லைசென்ஸ், விசிடிங் கார்டு போன்றவற்றை வாங்கிக் கொண்டு அவனை வீட்டுக்கு அனுப்பி விட்டு அந்தப் பெண்ணை ஆயிஷா நசீர் மதரசாவிற்கு அழைத்து வந்தார்.
அந்தப் பெண்ணிடம் உண்மை நிலை குறித்து விசாரித்தபோது அந்தப் பெண் எந்த ஒரு விஷயத்தையும் சொல்ல மறுத்து மிரண்டு போய் இருந்தார். பின்னர் ஐஎன்டிஜே மாநிலச் செயலாளர் செங்கிஸ்கானை தொடர்பு கொண்ட காஜா கரிமுல்லாஹ் விபரத்தை கூறினார். உடனே காஜா கரிமுல்லாஹ்வைச் சந்தித்த செங்கிஸ்கான் அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்குச் சென்று தனது மனைவியின் மூலம் உண்மை நிலையை விசாரித்தபோது, அந்தப் பெண் தான் யார் என்பதைக் கூறினாள்.
வட சென்னையை சேர்ந்த அந்தப் பெண் தனது தந்தை கேரளாவைச் சேர்ந்தவர் என்றும், அவர் கேரளாவில் வேறு திருமணம் செய்து கொண்டு விட்டார். நான்கு பிள்ளைகளில் ஒருவரான இந்தப் பெண் தந்தையோடு கேரளாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சரிவர கவனிக்கப்படாததால் மீண்டும் தாயிடம் வந்து சேர்ந்துள்ளாள்.
தாயும், 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் தனது மகளை சரிவர கவனிக்காமல் காலையில் வேலைக்குச் சென்று மாலையில்தான் வீடு திரும்புவார். இதனால் இந்தப் பெண் பள்ளிக்குச் சென்று விட்டு வீட்டிற்கு வந்து தனியாகத்தான் இருந்திருக்கிறார்.
அந்தத் தாய் வேலைக்குச் செல்வதற்கு முன் தன்னுடைய அண்ணனுக்கு உணவுக்கு பணம் கொடுத்து விட்டு தன்னை ஒரு பொருட்டாக மதியாமல் செல்வதைக் கண்டு தாயிடம் கேட்க 'அவன் ஆம்பள புள்ள வேலைக்கு போய் காசு தர்றான் வேணும்னா நீயும் போய் வேலை பாரு! இல்லைன்னா உங்கப்பனிடம் போய் தொலை !
என்று சின்னப் பெண்ணிடம் சொல்ல அவரது பாட்டியோ செத்து தொலை என தன் பங்குக்கு திட்ட மூன்று நாட்களாக சாப்பிடாமல் இருந்துள்ளார் இதனால் தந்தை, தாய் பாசம் இல்லாமல் திக்கற்று அந்தப் பெண் எங்கேயாவது சென்று விடலாம் என்ற எண்ணத்தில் வீட்டை விட்டு வெளியேறி உள்ளாள்.
அங்கிருந்து தன் சகோதரி வீட்டுக்கு சென்ற பெண்ணை சகோதரி தன் பங்குக்கு திட்டி என் கணவர் உடல் நிலை சரியில்லை நாளை உன்னைக் கொண்டு போய் மீண்டும் அம்மாவிடம் விட்டு விடுகிறேன் என சொல்ல அங்கிருந்து வெளியேறி எங்கு செல்வது எனத் தெரியாத நிலையில்தான் கோட்டைக்கு அருகில் அந்த இளைங்கனிடம் உதவி கேட்டுள்ளார்.
அந்தப் பெண் கூறிய தகவலின் அடிப்படையில் அவளின் சகோதரி மற்றும் தாயைத் தொடர்பு கொண்டு அவரை பெண்ணிடம் வரச் செய்த செங்கிஸ்கான் அந்தப் பெண்ணின் தாயாரிடம் விசாரித்தபோது, அந்தப் பெண் இது குறித்த எந்தப் பொறுப்பும் இல்லாமல் பதில் சொன்னார் அந்தத் தாய். ' நீங்கள் யாருடனோ தொலை பேசியில் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பதாக உங்கள் பெண் சொல்கிறாளே ' என்று கேட்டதற்கு, அந்தத் தாயிடமிருந்த எந்த பதிலும் இல்லை கண்ணீரைத் தவிர.
தன்னைக் குறித்து சொல்லத் துணிந்த அந்தப் பெண்ணின் தாய், தனக்கு மூன்று மகள்கள் என்றும் மூத்த மகள்களுக்கு திருமணம் செய்து கொடுக்க வட்டிக்கு வாங்கியுள்ளார். வட்டிக்கு பணம் கொடுத்தவர் இவரிடம் குழைந்து பேச இது தொடர்ந்துள்ளது. வட்டிக்கு பணம் கொடுத்தவரிடம் போனில் குழைந்து குழைந்து பேசுவதைப் பார்த்த அந்த 14 வயதுக் குழந்தை தாயைப் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி உள்ளது.
அந்நிய ஆடவரோடு குழைந்து பேசாதீர்கள் என்று குர்ஆன் வசனத்தை எடுத்துச் சொல்லி உங்கள் கடன் தொகையை எவ்வளவு என மனுவாக எழுதிக் கொடுங்கள். ஜகாத் நிதியின் மூலம் உங்கள் கடனைத் தீர்ப்போம் என்று அந்தப் பெண்மணியிடம் கூறினார் செங்கிஸ்கான்.
மேலும் அவரின் குழந்தையைப் பற்றி தற்போது உங்களின் மனநிலை என்ன என்று கேட்டபோது, நீங்களே மதரஸôவில் சேர்த்து படிக்க வையுங்கள் என்று தன்னுடைய இயலாமையைச் சொன்னார். அதற்கு அந்தத் தாயுடன் வந்த மூத்த மகளும், மருமகனும் ஒப்புக் கொண்டனர். தற்போது அந்த 14 வயதுப் பெண் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பிலேயே மதரஸôவில் தங்கிப் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மார்க்கம் கூறியுள்ள வரைமுறைகளை மீறியதாலும், பெற்றோர் பிரிந்து நிற்பதாலும், வரதட்சணைக்காக வட்டியில் விழுந்ததாலும், அந்த வட்டி வரம்பு மீரா வழி வகுத்து, இன்றைக்கு பெற்ற பிள்ளையை கவனிப்பாரற்று விட்டு விட அது வீட்டை விட்டு வெளியேறி வீதியில் நின்ற அவலம் சமுதாயத்தின் சம கால நிலையை பிரதிபலிப்பதாக இருந்தது. எனினும் அந்தச் சின்னப் பெண்ணை தவறானவர்களிடம் சிக்கி சீரழியாமல் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தினர் மூலம் காத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!