ஒவ்வொரு
நாடும் தமது பட்ஜெட்டில் பெரும்பகுதி தொகை ஒதுக்குவது பாதுகாப்புத்
துறைக்குத்தான். தனது நாட்டின் வறிய ஏழைகளின் வயிற்றுப் பசிக்கு
வழிகானுகிறதோ இல்லையோ, வருடம் தோறும் விதவிதமான ஆயுதங்களை வாங்கிக்
குவிக்கத் தயங்குவதில்லை. பேரழிவுகளை ஏற்படுத்தும் அணு ஏவுகணைகளை தயாரித்து
வெள்ளோட்டம் விடவும் மறப்பதில்லை. சில நாட்களுக்கு முன்னால் கூட இந்தியா
அக்னி -5 என்ற அதிநவீன ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
இந்தியா
ஏதேனும் ஒரு ஆயுதத்தை தயாரித்தால் அடுத்த சில நாட்களில் அண்டைநாடான
பாகிஸ்தான் இதுபோன்றதையோ, அல்லது இதைவிட வலிமையானதையோ தயாரிப்பதை
வாடிக்கையாக கொண்டுள்ளது. இவ்வாறு ஆயுதம் தயாரிக்கும் இந்தியாவும்
பாகிஸ்தானும் பரஸ்பரம் தமது நாட்டுப் பாதுகாப்பிற்காக என்றுதான்
சொல்கிறார்கள். தாங்கள் தயாரித்துள்ள ஆயுதங்களின் சிறப்பைப் பற்றிக்
கூறும்போது, இத்தனை கிலோ மீட்டர் சென்று இலக்கை தாக்க வல்லது என்றுதான்
கூறுகிறார்கள். எந்த நாட்டின் இலக்கையும் சுட்டிக்காட்டி கூறுவதில்லை.
ஆனாலும் சிண்டுமுடிவதையே வழக்கமாக கொண்ட தினமலர் நாளேடு, சமீபத்தில் ஷாகின் 1ஏ ஏவுகணையை பாகிஸ்தான் சோதனை செய்துள்ளது பற்றி வெளியிட்ட செய்தியில்,
''இந்தியாவில்
உள்ள நகரங்களை குறிவைத்து தாக்கும் திறன் கொண்ட ஷாகின் 1ஏ ஏவுகணையை
பாகிஸ்தான் சோதனை செய்துள்ளது. இந்தியா அக்னி 5 ஏவுகணையை சோதனை செய்த 6வது
நாளில் பாகிஸ்தான் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த
ஏவுகணை அணுஆயுதங்களை தாக்கி செல்லும் வல்லமை கொண்டது என பாகிஸ்தான்
ராணுவம் கூறியுள்ளது. இந்த ஏவுகணை சுமார் 750 கி.மீ., தூரம் செல்லும் திறன்
உடையதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த ஷாகின் 1 ஏவுகணை எவ்வளவு தூரம்
செல்லும் என்பதை கூற பாகிஸ்தான் ராணுவம் மறுத்து விட்டது. இந்த ஏவுகணை இந்திய பெருங்கடலை வரை சென்று தாக்கும் திறன் கொண்டது என தகவல்கள் கூறுகின்றன.'' என்று கூறியுள்ளது தினமலர்.
பாகிஸ்தானில்
சோதனை செய்யப்பட்ட ஏவுகணை எத்தனை கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும்
வல்லமையுடையது என்று பாகிஸ்தான் ராணுவம் கூறாத நிலையில், ''சுமார்
750 கி.மீ., தூரம் செல்லும் திறன் உடையதாக கூறப்படுகிறது என்று கூறும்
தினமலர், அந்த தூரத்தை இந்திய நிலப்பரப்பில் அளந்து இந்தியாவின் முக்கிய
நகரங்களை தாக்க வல்லது என்று சிண்டு முடிகிறது. இந்தியாவின் முக்கிய
நகரங்களை தாக்குவதற்காக நாங்கள் தயாரித்திருக்கிறோம் என்று பாகிஸ்தான்
சொல்லாத நிலையில், தினமலர் தனது உள்ளக்கிடக்கை வெளிப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இருநாடுகளுக்கும் உரசல் இருந்து வரும் நிலையில், தினமலர் இவ்வாறு
தனது பங்கிற்கு சிண்டு முடிவது ஊடகத்துறையில் உள்ள தினமலருக்கு அழகல்ல
என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
-முகவை அப்பாஸ்